கலப்பு திருமணம் செய்து கொண்ட வாலிபர் ஆணவ கொலையா?✍️ மனைவி போலீசில் புகார்; 5 பேருக்கு வலை✍️பெரியபாளையம் அருகே பரபரப்பு✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

பெரியபாளையம் அருகே பரபரப்பு கலப்பு திருமணம் செய்து கொண்ட வாலிபர் ஆணவ கொலையா? மனைவி போலீசில் புகார்; 5 பேருக்கு வலை

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே கலப்பு திருமணம் செய்து கொண்டதால் உறவினர்கள், எனது கணவரை ஆணவ கொலை செய்து இருக்கலாம் எனவும், சாவில் மர்மம் இருப்பதாகவும் இறந்த வாலிபரின் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து 5 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். பெரியபாளையம் அருகே ஆரணி காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு அமுல் என்பவர் கணவர் சாவில் மர்மம் இருப்பதாக புகார் கொடுத்துள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது: பொன்னேரி அருகே ஆவூர் கிராமத்தை சேர்ந்தவர் அமுல் (26). நான், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறேன். நான் சென்னைக்கு ரயிலில் செல்லும்போது அதே ரயிலில் வேலைக்கு வந்த கும்மிடிப்பூண்டி தாலுகா காரணி பகுதியை சேர்ந்த அண்ணாமலை என்பவரின் மகன் கௌதமன் (29) என்பருக்கும் எனக்கும் காதல் ஏற்பட்டது. இதில், எங்களது திருமணத்திற்கு கௌதமனின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், இருவரும் கடந்த 2019ம் ஆண்டு சென்னையில் 23.09.2019 அன்று அடையாரில் கிறிஸ்துவ ஆலயத்தில் திருமணம் செய்து கொண்டோம். பின்னர், சென்னை தேனாம்பேட்டையில் வாடகை வீட்டில் குடியேறினோம்.

இந்நிலையில், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் எனது கணவர் அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டு வருவார். அப்போது, அவரது பெற்றோர்கள் எனது கணவரை வேறு ஜாதியில் நீ திருமணம் செய்து கொண்டாய். அந்த பெண்ணை விட்டுட்டு வா உனக்கு நாங்கள் வேறு திருமணம் செய்து வைக்கிறோம் என்று கூறுவதாக எனது கணவர் என்னிடம் கூறுவார். அதனால், அவர் அவங்க வீட்டிற்கு செல்வதை நிறுத்தி விட்டார். நான் 2020ம் ஆண்டு கர்ப்பம் ஆனேன். 2021ல் எனக்கு பெண் குழந்தை பிறந்தது. அதன்பிறகு ஜனவரி மாதம் ஆவூர் கிராமத்தில் குடியேறி நல்ல முறையில் குடும்பம் நடத்தினோம். இந்நிலையில், கடந்த 17ம் தேதி காலை 6 மணிக்கு எனது கணவருக்கு போன் வந்தது. அதில், எனது கணவரின் தாத்தா இறந்து விட்டதாக தகவல் சொன்னார்கள்.

அவரது தாத்தா சாவுக்கு பைக்கில் சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை தேடிக்கொண்டு நானும் எனது தம்பியும் அவரது ஊருக்கு சென்றபோது அவரது படம் போட்டு கண்ணீர் அஞ்சலி போட்டோ ஒட்டப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். எனவே, எனது கணவர் சாவில் மர்மம் உள்ளது. மேலும், எனக்கு தெரியாமலே கணவரின் உடலை எரித்து விட்டனர். இது ஆணவ கொலையாக இருக்கும் என சந்தேகம் உள்ளது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் கௌதமனின் தந்தை அண்ணாமலை, தாய் அகிலா, அண்ணன் சீனிவாசன், சகோதரிகள் கோமதி, மணிமேகலை, ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதனால், ஆரணியில் பரபரப்பு ஏற்பட்டது

இணையத்தில் பகிர

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *