உலக செய்திகள்கல்விபயனுள்ள தகவல்வரலாறு

காக்கையின் கூடுகளில் குயில்கள் முட்டையிடுவது ஏன்? – சுவாரஸ்ய உயிரியல் சம்மந்தமான கட்டுரை?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

காக்கையின் கூடுகளில் குயில்கள் முட்டையிடுவது ஏன்? – சுவாரஸ்ய உயிரியல்!

advertisement by google

இனப்பெருக்கம்… இதுதான் பூமியில் வாழ்கின்ற அசையும் உயிர்கள், அசையா உயிர்கள் என்று அனைத்திற்குமான அடிப்படை ஆதாரமாக இருந்து வருகின்றது. பரிணாமத்தின் பாதையில், இங்குள்ள அனைத்து வகையான உயிரினங்களும்
ஏதாவதொரு வகையில் தம் இனத்தைப் பெருக்குவதில்தான் முதல் கவனம் செலுத்துகின்றன. அதற்கான வேலையில், முன்னேற்பாடுகளில், புதியதாகப் பிறந்தனவற்றை அணுகுவதில் என்று அனைத்திலுமே உயிர்கள் வேறுபட்டிருக்கின்றன. அதிலும் முட்டையிடும் குடும்பத்தைச் சேர்ந்த பறவையினங்களில் பல வகைகள் உள்ளன.
அதாவது, கூடுகட்டி, முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் பறவைகளுடைய கூடுகளைச் சார்ந்து, தம் குஞ்சுகளை வளர்க்க வேறு பறவையினத்தைச் சேர்ந்த தாய்ப் பறவையைச் சார்ந்து இருக்கின்ற பறவைகளும் இருக்கின்றன. அவற்றின் வாழ்வியலும் அவை சார்ந்திருக்கும் பறவைகளுடைய வாழ்வியலும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை.
தன் முட்டையை அடைகாத்து, அது பொறித்த பிறகு, குஞ்சுகள் பறக்கத் தொடங்கும் வரை கவனித்து, உணவளித்துப் பராமரித்துக் கொள்ளும் வேலையை, நேரத்தை தன்னுடையதாக எடுத்துக் கொள்ளாமல், வேறு பறவையின் கையில் அந்தப் பொறுப்பை ஒப்படைத்துவிடுகின்றன. அப்படிப்பட்ட பறவைகளை பாராசிடிக் பறவைகள்’ என்றும் இந்த முறையைபாராடிசிசம்’ என்றும் அறிவியல் துறையில் அழைக்கின்றனர். இதை ஒட்டுண்ணித் தன்மை என்று தமிழில் அழைக்கின்றனர். அதாவது, வாழ்விற்காக, பிழைத்திருப்பதற்காக மற்ற உயிரினங்களைச் சார்ந்து வாழும் உயிரினத்தின் வாழ்வியல் முறை. தாவரங்களில் ஒரு மரத்தைச் சார்ந்து காளான் உட்படப் பல்வகைச் சிறு தாவரங்கள் முளைப்பதைப் பார்த்திருப்போம். அவை, அந்த மரத்தின் ஊட்டச்சத்துகளில் குறிப்பிட்ட அளவை எடுத்துக்கொண்டு வாழக்கூடியவை. தனக்குத் தேவைப்படும் ஊட்டச்சத்துகளுக்காக, அது முளைத்திருக்கும் மரத்தைச் சார்ந்திருப்பவை. அதேபோல, பறவைகளில் இளம் குஞ்சுகளைப் பராமரித்து, வளர்க்கும் வேலையை இன்னொரு பறவையிடம் விட்டுவிடுவனவற்றை பாராசிடிக் பறவைகள் (Parasitic bird) என்றும் அவை சார்ந்து வாழ்கின்ற பறவையை ஒம்புயிரி (Host bird) என்றும் அழைக்கின்றனர்.
அதற்கு நம் கண்முன்னே இருக்கின்ற சிறந்த உதாரணம் காக்கையும் (Host bird) குயிலும்தான் (Parasitic bird).
இந்திய காட்டுயிர் ஆராய்ச்சி மையத்தில் (Centre for Wildlife Studies) ஆய்வு மாணவராகவுள்ள டின்சி மரியாம் (Dincy Mariyam) இதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டிருந்தார். இருவேறு பறவையினங்கள் இதுபோன்ற வாழ்வியலில் ஈடுபட்டிருப்பதைப் பற்றி, குயில் மற்றும் காக்கையின் வாழ்வியலை உதாரணமாக வைத்து விளக்குகின்றார்.
இத்தகைய பரிணாம வளர்ச்சி, குயில் போன்ற ஒம்புயிரிப் பறவைகளை, தம் எதிர்காலச் சந்ததிகளை வளர்ப்பதற்காக நேரம் செலவிடுவதைத் தடுத்து, சிறிது புத்திசாலித்தனமாகச் செயல்படும் திறனைக் கொடுத்துள்ளன. அதன்மூலம் அவற்றுக்கு அதிக நேரம் கிடைத்து, இன்னும் அதிகமாக இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. இத்தகைய இனப்பெருக்க ஒம்புயிரிகள் குறித்து மனிதர்களுக்கு நீண்ட காலமாகவே தெரிந்துள்ளது. ஆனால், அதற்கான காரணம்தான் நீண்ட காலமாகவே புரியாமலிருந்தது.
டின்சி மரியாம், சித்தூர் மாவடத்தில் அவர் ஆய்வு செய்த கிராமங்களில், அதற்கான விடையைத் தேடத் தொடங்கினார். ஒரு காகத்தையும் இனப்பெருக்கத்திற்காக அதைச் சார்ந்திருந்த ஆசியக் குயிலையும் அவர் கண்காணித்தார். நம்மில் பலரும் காகத்தின் கூட்டில், அதற்கே தெரியாமல் தன்னுடைய முட்டையை வைத்துவிட்டுச் செல்லும் குயில் பற்றிய கதைகளைக் கேட்டிருப்போம். ஆனால், இந்தச் செயல்பாட்டின் இயக்கவியல் குறித்து நாம் யாருமே கேள்வி கேட்டதோ, அறிந்துகொள்ள முற்பட்டதோ இல்லை. பருவமழைக் காலம் தொடங்கும்போதே காகங்களின் இனப்பெருக்கக் காலமும் தொடங்கிவிடுகின்றது. அந்தக் காலகட்டம் ஆகஸ்ட் வரை நீளும். குயில்களுடைய இனப்பெருக்கக் காலம் மார்ச் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை நீளும். இரண்டின் இனப்பெருக்கக் காலகட்டமும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் வருகின்றது.
இனப்பெருக்கத்தில் ஈடுபட்ட பிறகு, குயில் காக்கையின் கூட்டில் முட்டையிட்டு விடுகின்றது. முட்டையுடைய நிறம் மற்றும் வடிவத்தில், காகத்தின் முட்டையோடு குயிலுடையதும் ஒத்திருக்கும். குயில்களைப் போலவே, மற்ற கூடுகளைச் சார்ந்திருக்கும் பறவைகளுடைய முட்டைகளும்கூட, அவை எந்தப் பறவையினத்தைச் சார்ந்திருக்கின்றதோ அதன் முட்டை வடிவத்தையும் நிறத்தையும் ஒத்திருப்பதாக ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர். உதாரணத்திற்கு, பருந்துக் குயில் (common hawk cuckoo) என்றழைக்கப்படும் ஒருவகைக் குயில் இனம், தவிட்டுக் குருவியின் கூட்டில் முட்டையிடும். அதன் முட்டையும் தவிட்டுக் குருவியின் முட்டையும் வடிவத்திலும் நிறத்திலும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். தங்களுடைய முட்டைகளை இதுபோல் அடைகாக்கவும் வள

advertisement by google

ர்க்கவும் இதர பறவையினங்களைச் சார்ந்திருக்கும் பறவைகள், இப்படியாக பரிணாம வளர்ச்சியடைந்துள்ளன.
சுடலைக் குயில் (pied cuckoo) என்றழைக்கப்படும் ஒருவகைக் குயில் இனம், சின்னான் வகையைச் சேர்ந்த கேப் புல்புல் (cape bulbul) என்ற பறவையுடைய கூட்டில் முட்டையிடும். ஆனால், அதன் முட்டையும் சின்னானுடைய முட்டையும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. இருந்தாலும், அதைச் சின்னான் தவிர்க்காமல், அடைகாத்து தன்னுடைய குஞ்சுகளைப் போலவே கவனித்துக் கொள்கின்றன. இருப்பினும், “ஆசியக் குயில்களைப் போல, காக்கை முட்டைகளையொத்த வடிவத்தில் ஆள்மாறாட்டம் செய்து வைப்பதுதான் அதிகமாக நடக்கின்றன. அப்படி நிகழும்போது, எது தன்னுடையது, எது ஆள்மாறாட்டம் செய்து மறைத்து வைக்கப்பட்ட முட்டை என்பதைக் கண்டுபிடிக்க முடியாமல் காகத்தைப் போன்ற ஒம்புயிரிப் பறவைகள் குழம்பிவிடுகின்றன” என்று குறிப்பிடுகிறார் டின்சி மரியாம்.
காக்கை சராசரியாக ஒரு நாளைக்கு ஒன்று என்ற விகிதத்தில், மொத்தம் 5 முட்டைகளை இடும். ஆசிய குயிலும்கூட, இந்த ஐந்து நாள்களுக்கு உள்ளாகவே, அதன் கூட்டில் முட்டையிட்டு விடுகின்றது. ஒருவேளை காக்கை முட்டையிடுவதற்கு முன்னமே, குயில் முட்டையிட்டு வைத்தால், அதைக் கண்டுபிடிப்பது எளிதாகிவிடும். அதனால், குயில்கள், காக்கைக்கு அடுத்தபடியாக வந்து முட்டையிட்டு வைக்கின்றது. அதன் முட்டை, காகத்தினுடையதைவிட ஓரளவுக்குச் சிறியதாக இருக்கும். அதனால், அதை அடைக்காக்க வேண்டிய காலமும் குறைவாகவே இருக்கும். அதைக் கண்காணிக்கத் தொடங்கிய டின்சி மரியாம், காகம் இட்ட முட்டைகளையும் குயில் இட்ட முட்டைகளையும் குறித்து வைத்துக்கொண்டு, சற்று தள்ளி, அவற்றுக்குத் தெரியாமல் அமர்ந்து, தன்னுடைய தொலைநோக்கியில் கண்காணிக்கத் தொடங்கினார்.
இதுபோன்ற ஆள்மாறாட்ட முட்டையிடுதல்களைத் தடுக்க, காகம் போன்ற பறவைகள் சில தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. சில நேரங்களில் முறையாகக் கண்காணித்து, அப்படி முட்டையிட வந்தால் தாக்குகின்றன. இல்லையேல் சில நேரங்களில், எச்சரிக்கை ஒலிகளை எழுப்புவது, கூட்டை மறைவாக அமைப்பது, மிக மூர்க்கமாக எல்லையைக் காவல் காப்பது போன்ற வேலைகளில் ஈடுபடுகின்றன. இருந்தும், இவையனைத்தையும் தாண்டி குயில்கள் முட்டையிட்டுவிடுகின்றன.
காகங்கள் ஜோடியாகவும் கூட்டைக் காவல் காக்கின்றன, சில நேரங்களில் அவை சிறு கூட்டமாகவும்கூட காவல் காக்கின்றன. இனப்பெருக்கக் காலங்களில் காகங்கள் கூட்டு சேர்ந்து ஒற்றுமையாகச் செயல்படும் பழக்கத்தைக் கொண்டவை. இத்தகைய பழக்கங்களை, அவற்றிடம் ஆள்மாறாட்ட வேலைகளில் ஈடுபடும் குயில்களிடமிருந்து தற்காத்துக்கொள்ள அவை மேற்கொள்கின்றன. மரமல்லி மற்றும் புளிய மரத்தில் கட்டப்பட்டிருந்த காக்கைக் கூடுகளை டின்சி மரியாம் கண்காணித்துக் கொண்டிருந்தார். மறைவிடத்திற்குப் பஞ்சமில்லாத, அருமையான இடத்தில்தான் அவை கூடு கட்டியிருந்தன. இந்நிலையில், அவர் கண்காணித்துக் கொண்டிருந்த கூட்டில், எப்போதும் ஒரு காகம் இருந்துகொண்டேயிருக்கும். மற்றொரு காகம்தான் உணவு தேடிச் சென்றது. அந்த நேரங்களில், கூட்டைக் காவல் காக்கும் காகத்திற்கு உணவு கொண்டு வந்து கொடுக்கும் வேலையைக்கூட வெளியே செல்லும் காகமே ஏற்றுக்கொண்டது.
ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் இத்தகைய ஒருங்கிணைந்த செயல்பாட்டைக் காண முடிகின்றது. பெரும்பாலும் காகங்கள் ஒரு குழுவாகச் சேர்ந்து இதுபோன்ற நேரங்களில் செயல்படுகின்றன. அவை, ஒரு குழுவாகச் சேர்ந்து தாய்க் காகம் வெளியே செல்வதற்கான நேரத்தைக் குறைக்க உதவுகின்றன. உணவு கொண்டுவந்து கொடுப்பது, உணவு ஊட்டுவது போன்றவற்றை அவை மேற்கொள்கின்றன. அதன்மூலம், குயில்கள் ஆள்மாறாட்டம் செய்வதிலிருந்து காகங்கள் தம் கூட்டைத் தற்காத்துக் கொள்கின்றன. அப்படிப்பட்ட நேரங்களில், ஏதேனும் பெண் குயில் கூட்டின் பக்கமாகப் பார்த்தாலும்கூட, தாய் காகம் துரத்தத் தொடங்கிவிடுவதை டின்சி மரியாம் கவனித்துள்ளார். இருந்தும், இவையனைத்தையும் மீறி குயில் அந்தக் காகத்தின் கூட்டில் முட்டையிட்டதையும் அவர் கவனித்துள்ளார்.
எது குயிலுடையது, எது தன்னுடையது என்ற குழப்பம் வந்துவிடுவதால், எதையும் உடைக்காமல் அனைத்தையுமே காக்கைகள் அடைகாக்கின்றன.
காகம், குயில் போல இரண்டு தரப்பு பறவைகளுமே ஒன்றையொன்று சமாளித்து, தம் இனத்தைப் பெருக்கிக் கொள்வதற்கான தகவமைப்பைக் கொண்டுள்ளன. காகம், தன்னுடைய கூட்டிற்கே மிகுந்த எச்சரிக்கையோடும் கண்காணிப்போடும்தான் சென்று வந்தது. அதேநேரம், குயிலும்கூட அது முட்டையிட நினைக்கும் கூட்டைக் கண்காணிப்பதிலேயே அதிக நேரத்தைச் செலவிடுகின்றது. பெண் குயிலுடைய உடல், மரங்களுக்கு மத்தியில் மறைந்துகொள்ளும் நிறத்தை ஒத்து இருப்பதால் அவை எளிதில் மரங்களுக்கு நடுவே மறைந்துகொள்கின்றன.
இப்படியெல்லாம், மெனக்கெட்டு காக்கையின் கூட்டைச் சென்றடையும் குயில், முட்டையிடுவதை அவர் கவனித்துள்ளார். “இரண்டு காகங்களும் வெளியே சென்றிருந்த நேரத்தில், வெற்றிகரமாக ஒரு குயில் அதன் கூட்டிற்குள் சென்றதை நாங்கள் பார்த்தோம். அப்படிச

advertisement by google

் சென்ற சில நிமிடங்களிலேயே, காகங்கள் சுதாரித்து துரத்தியடித்துவிட்டன. அங்கிருந்து தப்பித்து, நான் அமர்ந்திருந்த திசை நோக்கித்தான் அது பறந்து வந்தது. அப்போது, அதன் அலகில் ஒரு முட்டையைக் கவ்வியிருந்தது. பின்னர் காக்கைக் கூட்டைச் சோதித்துப் பார்த்தபோது, ஒரு முட்டை குறைந்திருப்பதைக் கண்டுபிடித்தோம். வெற்றிகரமாக அது ஒரு முட்டையைக் கூட்டிலிருந்து அப்புறப்படுத்திவிட்டது. ஆனால், அந்த இடத்தில் வேறு முட்டையை இடவில்லை. அதற்கு அடுத்த நாள் காலையில் நாங்கள் சென்று கவனித்தபோது, அந்த இடத்தில் புதிதாக ஒரு குயில் முட்டையைக் கண்டோம். முந்தைய நாள், முட்டையைத் திருடிச் சென்ற குயில்தான் அதை அங்கு வைத்திருக்க வேண்டும்” என்று அவர் தன்னுடைய ஆய்வில் குறிப்பிட்டுள்ளார்.
இப்போது, அங்கிருப்பதில் எது குயிலுடையது, எது தன்னுடையது என்ற குழப்பம் காக்கைக்கு வந்துவிடும். எங்கே, தன்னுடையதை உடைத்துவிடுவோமோ என்ற சந்தேகத்தில் அனைத்தையும் அடைகாக்கின்றன. தன்னுடைய அனைத்து முட்டைகளையும் ஒரே கூட்டில் வைத்தால், ஆபத்து என்பதைக் குயில்கள் நன்கு உணர்ந்திருக்கின்றன. ஆகவே, பல்வேறு கூடுகளில் வைக்கின்றன. அப்படி வைக்கும்போது, அது வைக்கின்ற முட்டைகளுடைய எண்ணிக்கைக்கு நிகரான முட்டைகளை உடைத்துவிடுகின்றது. அப்படிச் செய்வதன் மூலம், அந்தக் கூட்டிலுள்ள குஞ்சுகளுக்குக் கிடைக்கும் உணவில், தன் குஞ்சுகளுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுவிடக் கூடாதென்பதில் கவனமாக இருக்கின்றது.
காகம், குயில் இரண்டுமே, அடைகாக்கப் போகும் காகங்களால் எந்தளவுக்கு உணவு வழங்க முடியும், எந்தளவுக்கு அவற்றால் கவனித்துக்கொள்ள முடியும் என்பதில் கவனமாக இருக்கின்றன. அப்படி இல்லாமல், காகங்களின் திறனைவிட அதிகளவில் கூட்டில் முட்டைகள் இருந்தால், தன்னால் அவற்றைக் காப்பாற்ற முடியாதென்பதை உணர்ந்து, காகங்கள் கூட்டை கைவிட்டுவிடுகின்றன. ஒருமுறை ஒரே கூட்டில், 21 முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவ்வளவையும் தன்னால் பராமரிக்க முடியாதென்பதை உணர்ந்து, அந்தக் கூட்டையே காகங்கள் கைவிட்டுவிட்டன. பின்னர், குரங்குகள் அந்த முட்டைகளைச் சாப்பிட்டுத் தீர்த்தன.
இப்படி, தன் இனத்தைப் பெருக்கிக்கொள்வதற்காக குயில்கள் காகங்களைச் சார்ந்திருக்கின்றன. அவற்றிடமிருந்து தன் முட்டைகளைக் காப்பாற்ற, காக்கைகள் குயில்களிடம் போராடுகின்றன. இரண்டின் போராட்டத்திற்கும் வெற்றி கிடைக்கின்றது. இறுதியில் இரண்டுமே தம் இனத்தைப் பெருக்கிக் கொள்கின்றன. பரிணாமப் பாதையில், காக்கையைச் சார்ந்திருக்கும் வகையில் குயில்கள் தகவமைத்துக் கொண்டன. அவற்றிடமிருந்து தற்காத்துக் கொள்ளவும் காகங்கள் கற்றுக்கொண்டன. இருந்தும், இரண்டுக்குமான போராட்டம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றது. இது இரண்டுக்குமான இனப்பெருக்கக் காலம். இதை நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் நேரத்தில்கூட, எங்காவது, ஏதேனும் ஒரு தாய்க் குயில், ஒரு காக்கைக் கூட்டைக் கண்காணித்துக் கொண்டிருக்கலாம். தன் சந்ததிக்குப் புகலிடம் தேடி…

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button