கோவில்பட்டியில் மூதாட்டியிடம் நூதன முறையில் 4 பவுன் சங்கிலி அபேஸ் ,மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

கோவில்பட்டியில் மூதாட்டியிடம் நூதன முறையில் 4 பவுன் சங்கிலி அபேஸமர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு

கோவில்பட்டி:

கோவில்பட்டியில் உதவுவது போல நடித்து நூதன முறையில் மூதாட்டியிடம் 4 பவுன் சங்கிலியை அபேஸ் செய்த மர்மநபரை போலீசார் தேடிவருகின்றனர்.

மூதாட்டி

கோவில்பட்டி வேலாயுதபுரம் முதல் தெருவை சேர்ந்தவர் சிவன். இவரது மனைவி மாரியம்மாள் (வயது 80). மில்லில் வேலை பார்த்து வந்த சிவன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அவரது பென்சன் பணத்தை மாரியம்மாள் வாங்கி வந்தார்.

நேற்று முன்தினம் பகலில் மாரியம்மாள், கோவில்பட்டி மெயின் ரோட்டில் உள்ள இந்தியன் வங்கிக்கு சென்றார். அங்கு பென்சன் பணம் ரூ.2 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு மெடிக்கல் ஸ்டோரில் மாத்திரைகள் வாங்க நடந்து சென்றார்.

மர்மநபர்

கருவாட்டு பேட்டை அருகே அவர் வந்தபோது, அடையாளம் தெரியாத மர்ம நபர், பாட்டி, உங்களை அந்த சார் கூப்பிடுகிறார் என்று கூறியுள்ளார். அந்த நபர் காட்டிய திசையில் 40 வயது மதிக்கத்தக்க டிப்டாப் உடையணிந்த நபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.

மாரியம்மாள் அந்த நபரிடம் சென்று நீங்கள் யார்? எதற்காக என்னை கூப்பிட்டீர்கள்? என்று கேட்டுள்ளார். அப்போது அந்த நபர், பாட்டி மாஸ்க் அணியவில்லையா?, ஊரில் வழிப்பறி சம்பவம் அதிகம் நடக்கிறது. நீங்கள் போட்டிருக்கும் நகையை கழற்றி வைத்து கொள்ளுங்கள் என்று நைசாக பேசி, அவரது மனதை மாற்றினாராம்.

4 பவுன் நகை அபேஸ்

இதை நம்பிய மாரியம்மாள், தான் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை கழற்றியுள்ளார். உடனே அந்த நபர் நகையை வாங்கி ஒரு காகிதத்தில் வைத்து மடித்து பத்திரமாக வைத்து கொள்ளுங்கள் என்று சொல்லி, அவரே ஒரு காகிதத்தில் தங்க சங்கிலியை மடித்து கொடுத்தாராம்.

அந்த காகித பொட்டலத்தை வாங்கிய மாரியம்மாள் அங்கிருந்து கிளம்பி மெடிக்கல் ஸ்டோரில் மாத்திரைகள் வாங்கி கொண்டு வீடு திரும்பினார். வீட்டுக்கு வந்ததும் நகை இருந்த காகிதத்தை பிரித்து பார்த்தபோது அதில் நகை இல்லை, சீனி கல் தான் இருந்தது. அப்போது தான் ஏமாற்றப் பட்டதை அவர் அறிந்தார். உதவுவது போல் நடித்த நபர் ஏமாற்றி நகையை அபேஸ் செய்தது அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

இந்த துணிகர சம்பவம் பற்றி கோவில்பட்டி கிழக்கு போலீசில் நேற்று புகார் அளித்தார். போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் காந்தி, ஏட்டு சேது லட்சுமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து அந்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.

இணையத்தில் பகிர

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *