கால்வாயில் வீசப்பட்ட ,500 ரூபாய் நோட்டுகள்✍️ திருப்பத்தூரில் பொதுமக்கள் பரபரப்பு பேச்சு,காவல் துறையினர் விசாரணை✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

திருப்பத்தூரில் கால்வாயில் வீசப்பட்ட மதிப்பிழப்பு செய்யப்பட்ட பழைய 500 ரூபாய் நோட்டுகள்; காவல் துறையினர் விசாரணை

திருப்பத்தூர் இ.எல்.ராகவனார் தெருவில் உள்ள கால்வாயில் வீசப்பட்ட பழைய 500 ரூபாய் நோட்டுகள்

மதிப்பிழப்பு செய்யப்பட்ட லட்சக்கணக்கான பழைய ரூபாய் நோட்டுகளை மர்ம நபர்கள் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கால்வாயில் வீசிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பழைய 1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது எனப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். மதிப்பிழப்பு செய்யப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளை டிசம்பர் மாதம் 31-ம் தேதிக்குள் வங்கிகளில் செலுத்தி புதிய ரூபாய் நோட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ம் தேதி வரை புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றிக்கொள்ளலாம் என்றும் மத்திய அரசு கால அவகாசம் அளித்தது.

இந்நிலையில், மதிப்பிழப்பு செய்யப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகள் இன்னும் பலரிடம் கோடிக்கணக்கில் புழக்கத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது. பழைய 1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்களை மோப்பம் பிடிக்கும் முகவர்கள் சிலர், அதை கமிஷன் முறையில் பெற்று புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றிக்கொடுப்பதாகக் கூறி பல இடங்களில் மோசடியும் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 19 வார்டு, இ.எல்.ராகவனார் தெருவையொட்டியுள்ள முட்டுச்சந்தில் ஆள் நடமாட்டம் இல்லாத கால்வாய்ப் பகுதியில் மதிப்பிழப்பு செய்யப்பட்ட லட்சக்கணக்கான பழைய 500 ரூபாய் நோட்டுகளை மர்ம நபர்கள் சிலர் இன்று (நவ. 5) வீசிச் சென்றுள்ளனர்

இதை அந்த வழியாகச் சென்ற சிலர் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். கால்வாயில் விழுந்த நோட்டுகளை யாரும் எடுக்கவில்லை. இருப்பினும், அந்த வழியாகச் சென்ற சிலர் கால்வாய் மேற்புறமாக சிதறிக்கிடந்த ரூ.1.50 லட்சம் மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகளைத் தங்களது வீடுகளுக்கு எடுத்துச் சென்றனர்.

திருப்பத்தூரில் பழைய 500 ரூபாய் நோட்டுகள், புதிய ரூபாய் நோட்டுகளாக ரூ.150 கமிஷன் அடிப்படையில் மாற்றப்படுவதாக வந்த தகவலைத் தொடர்ந்து சிலர் மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளைத் தங்களது வீடுகளுக்கு எடுத்துச் சென்றனர்

பழைய 500 ரூபாய் நோட்டுகளை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள்தான் யாராவது இத்தனை ஆண்டுகளாகப் பதுக்கி வைத்து இறுதியில் அதை மாற்ற முடியாது என்பதால் வீசியிருக்கலாம்? அல்லது கமிஷன் அடிப்படையில் புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றிக்கொடுப்பதாகக் கூறி யாரிடமாவது மொத்தமாக வாங்கி, அதை மாற்ற முடியாது என்பதால் கால்வாயில் வீசியிருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்துத் தகவலறிந்ததும் திருப்பத்தூர் நகரக் காவல் துறையினர் அங்கு வந்து விசாரணை நடத்தினர்.

இதுகுறித்துக் காவல்துறை தரப்பில் கூறுகையில், “மதிப்பிழப்பு செய்யப்பட்ட பழைய 1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தால் அவர்களுக்கு ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் சட்டம் இருக்கிறது.

எனவே, திருப்பத்தூர் பகுதியில் கால்வாய்ப் பகுதியில் லட்சக்கணக்கான பழைய ரூபாய் நோட்டுகளை வீசிச் சென்றது யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், பழைய நோட்டுகளை எடுத்துச் சென்றவர்கள் யாரென்றும் விசாரணை நடத்தி வருகிறோம். திருப்பத்தூர் மாவட்டத்தில் பழைய ரூபாய் நோட்டுக்குப் புதிய ரூபாய் நோட்டுகள் மாற்றும் கும்பல் உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம். விரைவில் உண்மை தெரியவரும். அதன்பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தனர்.

இணையத்தில் பகிர

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *