கிரைம்

ரத்தபலிஆவி பீதி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊரைகாலிசெய்து வழிபாடு மர்ம திகில்

advertisement by google

உயிரை கொத்தாக பறித்து செல்லும் நோய்கள் அண்டாமல் விலகி ஓடுவதற்காக, இன்னமும் சில கிராமங்களில் வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. அவற்றில் சில வினோதமாக இருக்கும். அப்படித்தான் இருக்கிறது கிருஷ்ணகிரி மாவட்டம் சின்னேப்பள்ளி, கத்தாலைமேடு, கோட்டக்கொல்லை உள்ளிட்ட சில கிராம மக்கள் சேர்ந்து நடத்தும் வழிபாடு. நோய்கள் விலகி, கிராமத்தில் சுபிட்சம் பெருக காலம்காலமாக இந்த வழிபாட்டை நடத்துகின்றனர். அப்படி என்னதான் செய்கிறார்கள்? மக்கள் சொல்ல சொல்ல ஆச்சரியத்துக்கு குறைவில்லை.
எப்போது வழிபாடு நடத்துவது என முதலில் தீர்மானிக்கிறார்கள். அந்த நாளில் ஒரு ஆள்கூட ஊரில் மிச்சம் இல்லாமல் ஒட்டுமொத்தமாக அனைவரும் ஊரை காலி செய்து விடுகின்றனர். நடக்க முடியாத முதியவர்கள், கர்ப்பிணிகள், குழந்தை பெற்ற தாய்மார்கள் ஆகியோரும் சிரமப்பட்டாவது ஊரை விட்டு வெளியேறுகின்றனர். ஆடு, மாடு, நாய், பூனை போன்ற பிராணிகளைக்கூட ஊரில் விட்டு வைப்பதில்லை. சகல ஜீவராசிகளையும் கிளப்பிக்கொண்டு மக்கள் எல்லாரும் ஊர் எல்லையை தாண்டி விடுகிறார்கள். மனிதர்கள், ஆடு, மாடுகள் எல்லாம் வெளியேறி விடுவதால் கிராமங்கள் வெறிச்சோடுகின்றன. ஆளரவமின்றி மயான அமைதி நிலவுவதால் கிராமங்களில் திகிலான சூழ்நிலை நிலவுகிறது. சமையலுக்கு தேவையான பொருட்களை மூட்டை முடிச்சுகளாக கட்டி, சைக்கிள், மாட்டுவண்டிகளில் ஏற்றி, காலையிலேயே, எல்லையை தாண்டி இருக்கும் தென்னந்தோப்பில் கூடுகிறார்கள். வரும்போது செல்லியம்மன், மாரியம்மன் சிலைகளையும் மேளதாளத்துடன் எடுத்து வந்து விடுகிறார்கள்.
வழிபாடு நடக்கும் நேரத்தில், ஊருக்குள் உயிர் வாடை இருக்க கூடாது என்பதை கடுமையான நியதியாக கடைபிடிக்கிறார்கள். கட்டுப்பாட்டை மீறி ஊருக்குள் யாராவது நுழைந்தால் அவர்களது உயிருக்கு உத்தரவாதம் கிடையாது என்ற பயம் காரணமாக யாரும் இதை மீறுவதில்லை. அது ஊருக்கு நல்லதல்ல என்றும் நம்புகிறார்கள் மக்கள். கட்டுப்பாட்டை மீறி செல்பவர்கள் காவு வாங்கப்பட்ட கதைகளும் சொல்லப்படுவதால் மறந்தும்கூட யாரும் ஊர்பக்கம் எட்டி பார்ப்பதில்லை. கிராமங்களில் வெளியூர் திருடர்கள் கைவரிசை காட்டிவிட கூடாது என்பதால் எல்லைகளில் காவலுக்கு நிற்கின்றனர் ஊர் வாலிபர்கள்.
வழிபாடு தொடங்குவதற்கு முன்பாக சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து 500க்கும் அதிகமானவர்கள் சாரை சாரையாக ஊர் எல்லை தென்னந்தோப்புக்கு வந்து சேருகின்றனர். தோப்பில் ஆட்டம், பாட்டம் என்று உற்சாகமாக இருக்கும். அம்மன் சிலைகளுக்கும் வழிபாடு நடக்கிறது. தோப்பில் சுவாமி சிலை அமைத்து அதற்கும் பூஜை நடத்துகிறார்கள். உறவினர்கள், நண்பர்களுடன் சேர்ந்து அங்கேயே விருந்து சமைத்து, அங்கேயே சாப்பிடுகிறார்கள். பின்னர் அந்தி சாயத் தொடங்கியதும், சுவாமி சிலைகளோடு, ஊரை நோக்கி மேளதாளத்தோடு கிளம்புகிறார்கள்.
ரத்த பலி நிறைவேறிய பிறகுதான் ஊருக்குள் மக்கள் காலடி எடுத்து வைக்க வேண்டுமாம். ஊர் எல்லையில் ஆடு, கோழி பலியிட்டு பூஜை செய்த பிறகே ஊருக்குள் நுழைகின்றனர். அப்படி செய்தால்தான் கிராமத்தில் மழை பொழியும். கொடிய நோய்கள் அண்டாது. செல்வம் செழிக்கும். கிராமத்தில் இருக்கும் தீய சக்திகள் ஓடிப்போகும் என்று மக்கள் நம்புகிறார்கள்.
‘‘பிளேக், அம்மை போன்ற கொள்ளைநோய்கள் பரவிய காலத்தில் நோயாளிகளை விட்டுவிட்டு மக்கள் ஊரையே காலி செய்வார்கள். தொற்றுநோய்கள் தங்களுக்கும் பரவி விடக்கூடாது என்ற பயத்தில் ஊர் எல்லையில் ஒன்றுகூடி சிறப்பு வழிபாடு நடத்துவார்கள். அந்த வழக்கமே தற்போதும் தொடர்கிறது’’ என்று கோவை தொல்லியல் ஆய்வாளர் இரா. ஜெகதீசன் தெரிவித்தார்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button