கோவை சாந்தி சோசியல் சர்வீஸ் நிறுவனர் சுப்ரமணியம் காலமானார்✍️முதல்வர் எடப்பாடி, மு.க. ஸ்டாலின் இரங்கல்✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
கோவை சாந்தி சோசியல் சர்வீஸ் நிறுவனர் சுப்ரமணியம் காலமானார்: முதல்வர் எடப்பாடி, மு.க. ஸ்டாலின் இரங்கல்
கோவை சாந்தி சோசியல் சர்வீஸ் அமைப்பின் நிறுவனர் சுப்ரமணியம் (78). இவர் கோவையில் சாந்தி கியர்ஸ் என்ற நிறுவனத்தை கடந்த 1972-ம் ஆண்டு ஒரு லேத் இயந்திரத்தை மட்டுமே மூலதனமாக வைத்து தொழில் துவங்கினார். ஆரம்ப காலத்தில் ஜவுளி நிறுவனங்களுக்கு இயந்திர உதிரி பாகங்களை அளித்தவர், பல்வேறு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தார். இஸ்ரோ நிறுவனத்திற்கும் இவரது தயாரிப்புகள் அளிக்கப்பட்டது. கடந்த 1996-ம் ஆண்டு சாந்தி சோசியல் சர்வீஸ் என்ற அமைப்பை துவக்கினார். இதன் மூலம் உணவகம், மருத்துவமனை, மருந்தகம், பெட்ரோல் பங்க், இலவச மின் மயானம் போன்றவற்றை நடத்தி லாப நோக்கமின்றி, சேவை மனப்பான்மையுடன் நடத்தி வந்தார். உணவகத்தில், ரூ.20க்கு சாப்பாடு உள்ளிட்ட மலிவு விலையில் தரமான உணவு வழங்கப்படுவதால் தினமும் ஆயிரக்கணக்கானோர் உணவகத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
சாந்தி சோசியல் சர்வீஸ் பெட்ரோல் பங்கில் ஸ்டாக் வரும் போது என்ன விலையோ, அதே விலை அந்த ஸ்டாக் முடியும் வரை விற்பனை செய்யப்படும். தன்னை விளம்பரப்படுத்திக் ெகாள்ள மாட்டேன், ஊடகங்களில் முகத்தை காட்ட மாட்டேன் என்பதில் இறுதி வரை உறுதியாக இருந்தவர் சுப்ரமணியம். இந்நிலையில், 78 வயதான சுப்ரமணியம் உடல் நலக்குறைவால் கடந்த சில தினங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை சுப்ரமணியம் உயிரிழந்தார். இவரின் மறைவு பொதுமக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரின் மறைவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.