இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

சுஜித் நிகழ்வு போன்ற மற்ற குழந்தைகள் உயிரிழந்த நிகழ்வுகள்? அதிர்ச்சி ரிப்போர்ட் winmeennews.com

advertisement by google

திருச்சி நடுக்காட்டுப்பட்டி சுஜித் நிகழ்வு போன்று, இனிமேல் நடைபெற்று விடக் கூடாது என்பதுதான் அனைவரின் கோரிக்கை, வேண்டுதல், உறுதியேற்பு எல்லாமுமே.

advertisement by google

2001இல் சென்னை மண்ணடி தமிழ்மணி (5) மரணத்தின் போதும், 2014இல் திருவண்ணாமலை கிடாம்பாளையம் சுஜித் (2) மரணத்தின் போதும் ஒட்டுமொத்த தமிழ்நாடும் இப்படித் தான் உறுதியேற்றுக் கொண்டது.

advertisement by google

உலகம் முழுக்க நொடிக்கு நொடி விபத்துகளால் உயிரிழப்புகள் நடந்தாலும், ஒரு சில சம்பவங்கள் மட்டுமே பேசுபொருளாக மாறுகின்றன. கவனக்குறைவும், அலட்சியமும் ஓர் உயிருக்குப் பாதிப்பை உண்டாக்கும் போது விமர்சனங்களும் தவிர்க்க முடியாத ஒன்றாகி விடுகிறது. அப்படித் தான் சிறுவன் சுஜித் வில்சன் ஊடகங்களின் தலைப்புச் செய்தியாகி இருக்கிறார்.

advertisement by google

ஆழ்துளைக் கிணறுகளில் தவறி விழுந்த குழந்தைகளின் மரணங்களை மையக்கருவாக வைத்து ஜெயராம், ஊர்வசி, பேபி ஷாமிலி நடிப்பில் மல்லூடி (Malootty) என்ற மலையாளத் திரைப்படம் 1999இல் வெளியானது. கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் 2017ஆம் ஆண்டில் வெளியான அறம் தமிழ்த் திரைப்படம் செயற்கைக்கோள், ஏவுகணை என்று சாதனை படைக்கும் நம்நாட்டில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தைகளை மீட்க தொழில்நுட்பங்கள், வழிமுறைகள் இல்லையே என்று ஆதங்கத்தை, அவலத்தைக் கொட்டித் தீர்த்தது.

advertisement by google

ஆழ்துளைக் கிணறுகளின் ஆதிக்கம்.

advertisement by google

நிலத்தடி நீருக்கான தட்டுப்பாடு நம் மக்களை ஆழ்துளைக் கிணறுகளை நோக்கி ஓட வைத்து விட்டது. மழைநீர் சேகரிப்பை செய்யத் தவறியவர்கள், நீர் நிலைகளை ஆக்கிரமித்தவர்கள், பண்டைய நீர் மேலாண்மை முறைகளைக் கைவிட்டவர்கள், நீருக்கான நிரந்தரத் தீர்வை திட்டமிடாதவர்கள், அத்தனை பேரின் தாகத்தையும் ஆழ்துளைக் கிணறுகள் தாம் தீர்த்து வைக்கும் என்று நம்புகிறார்கள். நிலத்தின் ஒவ்வொரு சதுரஅடியும் விலைமதிக்க முடியாதபடி அதிகரித்துக் கொண்டே செல்வதால், நீரூற்றுகள் நிறைந்த திறந்தவெளிக் கிணறுகள் காணாமல் போய் விட்டன. ஆழ்துளைக் கிணறுகள் ஆக்கிரமித்து விட்டன. 2006இல் 14 லட்சம் என்ற அளவில் இருந்த ஆழ்துளைக் கிணறுகளின் எண்ணிக்கை, 2019இல் 39 லட்சத்துக்கும் அதிகமாகப் பெருகி விட்டன. அதுவே, இந்திய அளவில் 27 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கின்றன.

advertisement by google

தாகம் தீர்க்கும் அந்த ஆழ்துளைக் கிணறுகள் தாம் பயன்பாட்டில் இல்லாமல் கைவிடப்படுகையில், முறையாக மூடாமல் விடப்படுவதால், குழந்தைகளை விழுங்கி, ஆட்கொல்லி ஆழ்குழாய்களாக மாறி விடுகிறது. ஆழ்துளைக் கிணறுகளின் மரணங்கள் அல்லது போர்வெல் கொலைகள் என்பது திடீரென நடக்கும் எதிர்பாராத விபத்துகள் மட்டுமல்ல. கவனக்குறைவு, அலட்சியம், விதிமீறல், சட்டவிரோதம் அத்தனையும் மொத்தமாக அதனுள் அடங்கியுள்ளது.

advertisement by google

உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகள்.

இந்தியாவில் தொடர் உயிரிழப்புகள் காரணமாக ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கவும், பராமரிக்கவும் விதிமுறைகள் வகுக்கப்பட்டன. கர்நாடகா மாநிலத்தின் எம்.பி தேஜஸ்வினி 27.04.2007 அன்று எழுப்பிய கேள்வி நாடாளுமன்ற மக்களவையில் விவாதிக்கப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு (WP(C) No.36/2009) ஒன்றின் அடிப்படையில் மத்திய அரசின் நீர்வளத் துறை அமைச்சகப் பரிந்துரைகளை ஏற்று, 11.02.2010 அன்று முதல் ஆழ்துளைக் கிணறுகளுக்கான புதிய விதிகளை நடைமுறைப்படுத்துமாறு, அனைத்து மாநில அரசுகளுக்கும் 06.08.2010 அன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

அரியானா மாநிலம் குர்ஹானில், 20.06.2012 அன்று தனது ஐந்தாவது பிறந்தநாளன்று கேக் வெட்டிக் கொண்டாடிய குழந்தை மஹி அருகிலுள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து, 85 மணிநேரப் போராட்டத்துக்குப் பின்னர் உயிரற்று மீட்கப்பட்டார். மஹியைக் காப்பாற்றத் துடித்த இறுதிக்கட்டப் போராட்டம் இந்தியா முழுமையும் எதிரொலித்தது. ஏற்கனவே 2010ஆம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்ட உச்ச நீதிமன்ற உத்தரவுகள், 28.01.2013 அன்று மேலும் கடுமையாக்கப்பட்டது. அந்த 13 விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டுமென மத்திய குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் 12.09.2013 அன்று உத்தரவிட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவுகளைப் பின்பற்றி வருகிறோம் என்று மத்திய நீர்வளத் துறை அமைச்சர் ஹரிஷ் ராவத் 26.08.2013 அன்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுதி கொடுத்தார்.

குழந்தைகளைக் காத்திட தமிழக அரசின் சட்டத் திருத்தம்.

சூரிபாளி முத்துலட்சுமி, புலவன்பாடி தேவி, பல்லகசேரி மதுமிதா, கலசப்பாக்கம் சுஜித் மரணங்கள் தமிழக அளவிலும் பல்வேறு விவாதங்களை உண்டாக்கியது. சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குரைஞர் தனசேகரன் தொடுத்த பொதுநல வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞர் சிவகாமி தொடுத்த பொதுநல வழக்குகள் (WP No.27912/2013, WP.No.11306/2015) அடிப்படையில் உயர் நீதிமன்றமும் சில உத்தரவுகளைப் பிறப்பித்தது.

தமிழ்நாடு உள்ளாட்சிகள் சட்டம் 1994, சென்னை பெருநகர் நிலத்தடி நீர் (வரன்முறை) சட்டம் 2014 இரண்டையும் திருத்தி 11.08.2014 அன்று தமிழக சட்டமன்றத்தில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அனுமதியின்றி ஆழ்துளைக் கிணறுகளைத் தோண்டினால் சட்டப்பிரிவு 143(ஏ), 143(பி)ன்படி 50,000 ரூபாய் அபராதம், மூன்று முதல் ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை என்று சட்டம் நிறைவேற்றப்பட்டு, தமிழ்நாடு ஆழ்துளைக் கிணறுகள் ஒழுங்காற்று விதி – 2015 என்ற பெயரில் 18.02.2015 அன்று அரசாணையும் வெளியிடப்பட்டது.

ஆழ்துளைக் கிணறுகள் அமைத்திட விதிமுறைகள்.

ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் போது 15 நாட்களுக்கு முன்பாக உள்ளாட்சித் துறையின் அனுமதி பெற வேண்டும். மாவட்ட ஆட்சியருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். ஆழ்துளைக் கிணறுகளைத் தரமான மூடியால் மூட வேண்டும். குழியைச் சுற்றிச் சுவர் எழுப்பி, தெளிவாகத் தெரியும்படி வண்ணம் பூச வேண்டும். நில உரிமையாளர், ஒப்பந்ததாரர் பெயருடன் எச்சரிக்கைப் பலகை வைக்க வேண்டும். கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளை மண், கற்களால் மூடிவிட வேண்டும். வருவாய் துறை, வேளாண்மை பொறியியல் துறை, உள்ளாட்சித் துறை மூலம் மூடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளை ஆய்வு செய்து மக்கள் அறியும் வகையில் விளம்பரப்படுத்த வேண்டும் உள்ளிட்ட உச்சநீதிமன்றத்தின் 13 விதிகள் நடைமுறையில் இருக்கின்றன. உச்ச நீதிமன்ற விதிப்படி பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து விட்டு, அந்த இடத்திலேயே நில உரிமையாளருடன் புகைப்படம் எடுத்து, பாதுகாப்பாக ஆழ்துளைக் கிணற்றை ஒப்படைத்து விட்டோம் என்ற ஒப்புதல் கடிதம் வாங்கி சங்கத்துக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்று ரிக் உரிமையாளர்கள் சங்கத்தின் போர்வெல் லாரி ஒப்பந்ததாரர்கள் முடிவுகள் எடுத்துள்ளார்கள்.

தமிழ்நாட்டில் தொடரும் ஆழ்துளை மரணங்கள்.

30.08.2001 சென்னை மண்ணடி ஆடியபாதம் தெருவில் தமிழ்மணி (5), 35 அடி ஆழத்தில், 60 மணி நேரத்தில் உயிரற்று மீட்கப்பட்டார். தீயணைப்புப் படை, ராணுவம், கடலோரக் காவற்படை இப்பணியில் ஈடுபட்டனர்.

20.07.2002 காஞ்சிபுரம் மாவட்டம் பாலுச்செட்டிசத்திரம் தைப்பாக்கம் கிராமம் ராம்குமார் (8), 20 அடி ஆழத்தில், 8 மணி நேரத்தில் மீட்கப்பட்டு உயிரிழந்தார்.

22.02.2009 மதுரை மாவட்டம் ஆண்டிபட்டி ராஜதானி கிராமம் மாயி இருளன் (6), 80 அடி ஆழத்துக்கும் கீழ், 30 மணி நேரத்தில் மீட்கப்பட்டு உயிரிழந்தார். தீயணைப்புப் படையோடு திருச்சி, பெங்களூரு துணை ராணுவ வீரர்கள் இணைந்து பணி செய்தனர்.

27.08.2009 திருவண்ணாமலை மாவட்டம் தண்டாரம்பட்டு அண்டம்பள்ளம் கிராமம் கோபிநாத் (3), 20 அடி ஆழத்தில், 10 மணி நேரத்தில் மீட்கப்பட்டு உயிரிழந்தார்.

08.09.2011 திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி கைலாசநாதபுரம் கிராமத்தில் சுதர்சன் (5), 20 அடி ஆழத்தில், 15 மணி நேரத்தில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.

30.09.2012 கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை மந்தையூர் கிராமம் குணா (2), 25 அடி ஆழத்தில், 4 மணி நேரத்தில் தீயணைப்புத் துறையால் உயிரோடு மீட்கப்பட்டார்.

27.04.2013 கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே சூரிபாளி இனங்கனூர் கிராமம் முத்துலட்சுமி (7), 15 அடி ஆழத்தில், 16 மணி நேரத்தில் மீட்கப்பட்டு உயிரிழந்தார்.

28.09.2013 திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி புலவன்பாடி கிராமம் தேவி (4), 30 அடி ஆழத்தில், 11 மணி நேரத்தில் மீட்கப்பட்டு உயிரிழந்தார்

05.04.2014 விழுப்புரம் மாவட்டம் பல்லகச்சேரி காட்டுக்கொட்டகை கிராமம் மதுமிதா (3), 30 அடி ஆழத்தில்,19 மணி நேரத்தில் மீட்கப்பட்டு உயிரிழந்தார்.

14.04.2014 திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் குத்தாலப்பேரி கிராமம் ஹர்சன் (3), 12 அடி ஆழத்தில், 6 மணி நேரத்தில் மதுரை மணிகண்டன் ரோபோ இயந்திரம் மூலம் உயிரோடு மீட்கப்பட்டார்.

15.04.2014 திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே கிடாம்பாளையம் காந்திநகர் சுஜித் (2), 45 அடி ஆழத்தில், 24 மணி நேரத்தில் உயிரற்ற நிலையில் மீட்கப்பட்டார்.

12.04.2015 வேலூர் மாவட்டம் கூராம்பாடி கிராமம் தமிழ்செல்வன் (2), 20 அடி ஆழத்தில், 9 மணி நேரத்தில் மீட்கப்பட்டு உயிரிழந்தார்.

30.08.2017 திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகம்பட்டு கிராமம் விஜயஸ்ரீ (2), 6 அடி ஆழத்தில் ஒரு மணி நேரத்திற்குள் கிராம மக்களால் உயிரோடு மீட்கப்பட்டார்.

23.09.2018 நாகப்பட்டணம் மாவட்டம் வேதாரண்யம் புதுப்பள்ளி கிராமம் சிவதர்ஷினி (2), 15 அடி ஆழத்திலிருந்து, மூன்று மணி நேரத்தில் தீயணைப்புத் துறையால் உயிரோடு மீட்கப்பட்டார்.

மீண்டு வந்த குழந்தைகள்.

இந்தியாவில் ஆழ்துளையில் சிக்கிக் கொண்ட குழந்தைகளை மீட்க சராசரியாக 36 மணிநேரம் ஆகிறது. அதில் 70% வெற்றி பெறாமல் போய் விடுகிறது. உயிரிழக்கும் குழந்தைகளில் 92% பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் என்று தேசிய பேரிடர் மீட்புப் படையின் அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

கடந்த பத்தாண்டுகளில், தமிழ்நாட்டில் ஒரு குழந்தையைக் கிராம மக்களே உயிரோடு மீட்டுள்ளனர். தன்னார்வக் குழுக்களின் உதவியோடு மூன்று குழந்தைகளை தமிழ்நாடு தீயணைப்புத் துறை உயிரோடு மீட்டுள்ளது.

இந்திய அளவில் பார்த்தால் தேசிய பேரிடர் மீட்புப் படையால் (NDRF) 2014 முதல் 2018ஆம் ஆண்டு வரை 37 மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு, 15 குழந்தைகளை உயிருடன் மீட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் 7 குழந்தைகள், ராஜஸ்தான் 4, குஜராத், உத்தரப்பிரதேசம், ஆந்திரம், பிகார் மாநிலங்களில் தலா ஒரு குழந்தை என்று NDRF படை மீட்டுள்ளது.

தன்னார்வக் குழுக்களின் துரிதமான செயல்பாடு.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகிலுள்ள நாலாட்டின்புத்தூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்ற தொழிற்கல்வி ஆசிரியர் 2003ஆம் ஆண்டில், தோட்டத்தில் விளையாடிய தனது மகனை ஆழ்துளைக் கிணற்றில் விழாமல் காப்பாற்றியுள்ளார். அதன் தாக்கத்தால் 2006- 2012 ஆறாண்டுகள் முயற்சியில் குழந்தைகளைக் காக்கும் இயந்திரத்தைக் கண்டு பிடித்துள்ளார். ஐடிஐ படிப்பு முடித்து, தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து கொண்டே, மாலை நேரத்தில் பிட்டர் வேலைக்குச் செல்லும் மணிகண்டனால் கண்டுபிடிக்கப்பட்ட அந்த இயந்திரம் தான், 2014இல் திருநெல்வேலி குத்தாலப்பேரியில் ஹர்சன் என்ற சிறுவனை உயிரோடு மீட்டது. தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம் மாநிலங்களில் இதுவரை எட்டுக் குழந்தைகளை உயிரோடு மீட்டுள்ளதாக கூறுகிறார். அந்த நம்பிக்கையில் தான் திருச்சி நடுக்காட்டுப்பட்டிக்கும் மணிகண்டன் வந்து சேர்ந்துள்ளார்.

குழந்தை சுஜித் வில்சன் 25.10.2019 மாலை 5.30 மணிக்கு, ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த செய்தி கேள்விப்பட்டு, மதுரை மணிகண்டன், திருச்சி டேனியல், கோயம்புத்தூர் டாக்டர் ஸ்ரீதர், நாமக்கல் வெங்கடேஷ், மதுரை ராஜ்குமார், புதுக்கோட்டை வீரமணி, ரூபன்குமார், திரைப்பட சண்டைக்காட்சிகளின் விபத்துகளில் மீட்கும் சென்னை குழு, தமிழ்நாடு அரசின் தீயணைப்புத் துறை உள்ளிட்ட 12 குழுக்கள், 15 முறை மீட்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அமைச்சர்கள் டாக்டர் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோருடன் இணைந்து, திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். கரூர் எம்.பி ஜோதிமணி, மணப்பாறை எம்.எல்.ஏ.சந்திரசேகர், திருச்சி எம்.எல்.ஏ. கே.என்.நேரு உள்ளிட்டோரும் நிகழ்விடத்தில் ஆலோசனை செய்தனர்.

கைகளால் தூக்கும் முயற்சி, ஹைட்ராலிக் முறை, ரோபோ, கயிறு கட்டி இழுத்தல், ரப்பர் கிளிப் போன்ற மீட்பு முறைகள், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் குழு, நெய்வேலி நிலக்கரிச் சுரங்க மீட்புப் படை, ஓஎன்ஜிசி, எல்&டி, ஐஐடி மீட்புக் குழு, மாநிலப் பேரிடர் மீட்புப் படை (SDRF), தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) உள்ளிட்ட பல்வேறு தனிநபர்கள், அமைப்புகள், தன்னார்வக்குழுக்கள், அரசுத் துறையினர் என சுஜித்தை மீட்கும் போராட்டத்தில் பலரும் செயலாற்றினர். கனிமவளத் துறை, நிலத்தியல் துறை, சென்னை மெட்ரோ நிறுவனமும் ஆலோசனைகள் வழங்கியது.

பேரிடர் மீட்பு வழிகாட்டு நெறிமுறைகள் (Standard Operating Procedure-SOP):

ஆழ்துளைக் கிணற்றில் குழந்தைகள் விழுந்து விட்டால், ஆழ்குழாய் விட்டத்தின் அடிப்படையில் 6 அங்குலம், 8 அங்குலம், 10 அல்லது 12 அங்குலம் என மூன்றாக வகைப்படுத்துகின்றனர். நிகழ்விடத்தின் தன்மை, நேரம், நாள், குழியின் விட்டம், ஆழம், நிலத்தின் தன்மை, மண்ணின் வகை, காலநிலை, பயன்பாட்டிற்குரிய உபகரணங்கள், இயந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு முதற்கட்ட ஆய்வுகளை நடத்தி விட்டு, தேவையின் அடிப்படையில் பொருட்களைப் பயன்படுத்தி மீட்புப் பணிகளில் ஈடுபடுகின்றனர். மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய பேரிடர் மீட்புப் படை(NDRF), ஆழ்துளைக் கிணறுகளில் சிக்கிய குழந்தைகளை மீட்க, கயிறு (Rope), பந்து (Magic ball), குடை உபகரணம் (Umbrella tool), துணிப்பை (Cloth bucket), கேமரா (Cameras with LED), கொக்கி (Pendant Jhula), ரோபோ (Robotic machine), இரும்புக்கம்பி (Iron Rod – L,J,U Type), அலுமினிய கயிற்றுடன் கொக்கி (Aluminium wire with hook), உயிர்க்கவசம் (Life jacket of plastic sheet with wire) போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மீட்புப் பணிகள் செய்யப்படுகிறது.

சுஜித்தை மீட்கும் பணியில் எழுந்துள்ள விமர்சனங்கள்.

ஐந்தாண்டுகளாகப் பயன்பாடின்றிக் கிடந்த ஆழ்துளைக் கிணற்றை நிலத்தின் உரிமையாளரும், ரிக் ஒப்பந்ததாரரும் முறையாக மூடவில்லையே ஏன்? அனுமதி கொடுத்த உள்ளாட்சித் துறை, கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி செயலாளர், மாவட்ட ஆட்சியர் சட்டத்தின்படி அதனை சரிபார்க்கத் தவறியது ஏன்? ஆழ்துளைக் கிணறுகளில் சிக்கிய குழந்தைகளை மீட்பதற்காகக் கண்டு பிடிக்கப்படும் தொழில்நுட்பங்களை ஊக்கப்படுத்த தவறி விட்டோமா?

குழந்தையை மீட்கும் பணியில் 12 குழுக்கள், 15 முறை முயற்சி செய்தது, விதிப்படி சரியென்று சொன்னாலும், உயிர்காக்கும் நடவடிக்கையில், முன்னுரிமையின்றி சோதனை முயற்சிகளாக மாறி விட்டதா? மூன்றாவது நாளின் இறுதிக்கட்ட முயற்சிகளை ஏன் முதல்நாளோ, மறுநாளோ செய்திருக்கக் கூடாது? தொழில்நுட்பங்களையும், நிபுணத்துவம் பெற்றவர்களையும், பஞ்சாப் விவசாயிகளையும் முன்கூட்டியே சரியான நேரத்தில் பயன்படுத்தத் தவறி விட்டோமா?

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தைகளைக் காத்திட 2015 கொண்டு வரப்பட்ட சட்டவிதிகளை உருவாக்கிய குழுவின் ககன் தீப்சிங் பேடி உள்ளிட்ட ஐஏஎஸ் அதிகாரிகளையும், பொறியியல் வல்லுநர்களையும் ஆலோசிக்கத் தவறியது ஏன்?

சென்னை அண்ணா பல்கலைக்கழகக் குழு மணப்பாறை விரையும் போது, விழுப்புரம் அருகே போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டதால் தாமதமாகச் சென்று சேர்கிறது. இதுதான் போர்க்கால நடவடிக்கையா?

தன்னார்வமாக 12 குழுக்கள் செய்தி கேள்விப்பட்டு இரவோடு, இரவாக வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டபோது, மாநிலப் பேரிடர் மீட்புப் படை, தேசிய பேரிடர் மீட்புப்படை 16 மணிநேரம் கடந்து தான் நிகழ்விடத்துக்கு வந்துள்ளனர். அழைக்க வேண்டும், அனுமதி பெற வேண்டும் என்ற நடைமுறைகள் சரியா?

தமிழக அரசின் பேரிடர் மேலாண்மைத் துறை ஆணையாளர் சம்பவ இடத்துக்கு 40 மணி நேரம் கடந்த பின்பு தான் வந்தார், பேரிடர் மேலாண்மைத் துறையின் அமைச்சர் 47 மணி நேரத்துக்குப் பின்பு வந்து விட்டு திரும்பிச் சென்று விட்டார். இதற்கான காரணங்கள் என்னவாக இருக்கும்?

தேசிய பேரிடர் மேலாண்மைத் துறை, தேசிய பேரிடர் மீட்புப் படை உள்ளிட்டவற்றை தன்வசம் வைத்துள்ள மத்திய உள்துறை அமைச்சகத்தின் பங்களிப்பு என்ன?

பேரிடர் மீட்புபடைகள் நிகழ்விடத்தில் சூழ்நிலைக்கேற்ப முடிவெடுப்பதற்கு அரசியல் தலையீடுகள் இருந்ததா?

ஆழ்குழாயின் ஆழம், பாறைத்தன்மை, அருகிலுள்ள கிணற்றிலிருந்து சுரங்கம் அமைப்பது உள்ளிட்ட கருத்துகளை எடுத்துச் சொன்ன, உள்ளூர் மக்களின் ஆலோசனைகள் புறக்கணிக்கப்பட்டதா?

குழந்தை 88 அடியில் இருக்கும் போது ஹைட்ராலிக் ஏர்லாக் முறையில் மேலும் கீழே சென்று விடாமல் தடுத்த தொழில்நுட்பம், ஏன் 28 அடியில் இருக்கும் போதே செயல்படவில்லை?

ஒருமணி நேரம் அரசியல் தலைவர்கள் வந்து செல்வதற்கே தற்காலிகக் கூடாரங்கள் அமைக்கும் போது, அடிக்கடி மழை வந்த நடுக்காட்டுப்பட்டியில் கடைசி வரை பிளாஸ்டிக் பைகளையே பயன்படுத்தியது ஏன்?

இதுவரை நடைபெற்ற ஆழ்துளைக் கிணறு விபத்துகளுக்காக தண்டனை பெற்ற நிலத்தின் உரிமையாளர்கள், ரிக் ஒப்பந்ததாரர்கள், அனுமதி கொடுத்த ஊராட்சி மன்றத் தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய்த் துறை, வேளாண் பொறியியல் துறை அலுவலர்கள் விவரங்கள் அரசிடம் உள்ளதா?

ஆழ்துளைக் கிணறுகள் பற்றிய கணக்கெடுப்புகளைச் செய்யாத கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி செயலாளர், வேளாண்மை பொறியியல் துறை அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டாச்சியர், மாவட்ட ஆட்சியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதா?

குழந்தை சுஜித்தை மீட்கும் பணியில் ஆர்வம் காட்டிய அரசுத் துறை, மக்கள் பிரதிநிதிகள், அரசியல்வாதிகள், தன்னார்வலர்கள், ஊடகத்தினர், பொதுமக்கள், சமூக ஊடகங்கள் உள்ளிட்ட நானும், நீங்களும், பயன்பாடின்றிக் கிடக்கும் ஆழ்துளைக் கிணறுகள் பற்றி அக்கறை செலுத்தாமல் இருந்து விட்டோமா?

சுனாமி, வெள்ளம், புயல், வறட்சி, கும்பகோணம் தீ விபத்து, மவுலிவாக்கம் அடுக்குமாடி விபத்து, பள்ளிப் பேருந்து ஓட்டையில் குழந்தை விழுந்து இறந்த விபத்து, நீர்நிலைகளில் மணல் கொள்ளையர்களால் தோண்டப்பட்ட குழிகளில் விழுந்து மரணமடையும் குழந்தைகள், சாக்கடைக் குழிக்குள் நிகழும் மரணங்கள், பேனர் விழுந்த விபத்து, சாலையில் ஏற்பட்ட பள்ளத்தால் விபத்துகள் போன்று ஆழ்துளைக் கிணறு மரணங்களும் பத்தோடு பதினொன்றாக பேசப்பட்டு, கடந்து செல்லும் விபத்தாகத் தான் இருக்குமா?

மத்திய அரசின் நிலத்தடி நீர் ஆணைய (CGWA) அறிவிப்பின்படி, 01.06.2019 முதல் நடைமுறையில் இருக்கும் ஆழ்குழாய் நீர் பயன்பாட்டுக்கான கட்டண விதிமுறைகளுக்கும், இப்போது பரபரப்பாகப் பேசப்படும் ஆழ்துளைக் கிணறுகளுக்கு கடும் சட்டம் இயற்ற வேண்டுமென்ற கோரிக்கைக்கும் ஏதேனும் தொடர்புகள் உள்ளதா?

நிரந்தர தீர்வு என்னவாக இருக்கலாம்.

தமிழ்நாடு முழுவதும் மாவட்டம், ஒன்றியம், கிராம அளவில் இப்போது இருக்கின்ற ஆழ்துளைக் கிணறுகள், ஆழ்குழாய் விவரங்களை உள்ளாட்சித் துறையும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையும் உடனே வெளியிட வேண்டும்.

ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் போது, உச்ச நீதிமன்றத்தின் 13 உத்தரவுகளையும், தமிழ்நாடு அரசு ஆழ்துளைக் கிணறுகள் ஒழுங்காற்று விதி – 2015 இரண்டையும் கட்டாயம் பின்பற்றிட வேண்டும், கண்காணித்திட வேண்டும்.

பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணறுகளைக் கணக்கெடுத்து, அவற்றை மழைநீர் சேகரிப்பு, நிலத்தடி நீர் செறிவூட்டும் அமைப்பாக மாற்றிட வேண்டும்.

குழந்தைகள் விளையாடப் போதுமான இடவசதிகளைப் பாதுகாப்பான முறையில் கிராமப்புறங்களில் ஏற்படுத்தித் தர வேண்டும்.

பேரிடர் மேலாண்மைக் குழுக்களைக் கிராமங்கள் தோறும் செயல்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.

ஆழ்துளைக் கிணறுகளின் மரணங்களையும், சாக்கடைக் குழி மரணங்களையும் நாட்டின் அவலமாகக் கருதி, தொழில் நுட்பங்களை மேம்படுத்தி மீட்பு நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, தமிழர்களின் நீர் மேலாண்மையில் ஆழ்துளைக் கிணறுகளே கிடையாது. பாரம்பரியமான நீர்நிலைகளை மேம்படுத்தினாலே, பாதுகாத்தாலே ஆழ்துளைக் கிணறுகள் அமைக்க வேண்டிய அவசியமே நமக்கு இருக்காது.

advertisement by google

Related Articles

Back to top button