தமிழகம்

தூத்துக்குடி மழை வெள்ளத்திற்கு மத்தியில் ஆஸ்பத்திரியில் முட்டளவு தண்ணீரில் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த செவிலியர்?

advertisement by google

தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள பட்டாண்டிவிளையைச் சேர்ந்தவர் ஜோன்ஸ். இவரது மனைவி ரம்யா (வயது 24). வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.கடந்த 18-ந் தேதி காலையில் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. ஆனால் அப்போது, கனமழை பெய்தது. இதனால் ரம்யாவின் தாயார் பாத்திமா, அவரது தம்பி ஜேசுபால் மற்றும் உறவினருடன் அன்று காலையில் சரக்கு ஆட்டோவில் ஏரல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அந்த சமயத்தில் ஏரல் அருகே உள்ள சூழைவாய்க்கால் சாலையில் வெள்ளம் அதிகமாக சென்றதால் ஆட்டோவில் செல்ல முடியவில்லை.இதனால் ஜேசுபால், ரம்யாவை தோளில் தூக்கிக் கொண்டும், அப்பகுதி மக்கள் சேர்ந்து கையை பிடித்து சேர்த்து கொண்டு தண்ணீரைக் கடந்து ஏரலுக்கு அனுப்பி வைத்தனர்.ஆனால் ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் இல்லாததால் குடும்பத்தினர் பரிதவித்தனர். மாலை 6 மணி அளவில் வெள்ளம் ஆஸ்பத்திரி உள்ளே வந்தது. அப்போது, ரம்யாவுக்கு பிரசவ வலி அதிகமானது.அங்கிருந்த நர்ஸ் ஜெயலட்சுமி பிரசவத்திற்கு தேவையான முக்கியமான பொருட்களை எடுத்துக் கொண்டு பிரசவ வார்டுக்கு ரம்யாவை கொண்டு சென்றார். முட்டளவுக்கு தண்ணீர் வந்து கொண்டு இருந்தபோது, ரம்யாவுக்கு, ஜெயலட்சுமி பிரசவம் பார்க்க தொடங்கினார். இரவு 7 மணிக்கு ரம்யாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.வெள்ளம் குறைந்த 3 நாட்களுக்கு பிறகு ஆஸ்பத்திரியில் இருந்து ரம்யா, குழந்தை மற்றும் குடும்பத்தினரை படகு மூலம் சிறுத்தொண்டநல்லூரில் கொண்டு விட்டனர். அங்கிருந்து போலீசார் தங்களது வாகனத்தில் பட்டாண்டிவிளையில் விட்டனர். தற்போது தாயும், குழந்தையும் நலமாக உள்ளனர்.இதுகுறித்து ரம்யாவின் தாயார் பாத்திமா கூறுகையில், ‘எங்களுக்கு நர்ஸ் ஜெயலட்சுமிதான் தெய்வம். நாங்கள் எப்படி தப்பிப்போம். குழந்தையை எப்படி காப்பாற்றுவோம் என நினைத்தோம். ஆனால் கடவுள் அருளால் ஜெயலட்சுமி எங்களுக்கு உதவி செய்தார்’ என்றார்.இதுதொடர்பாக நர்ஸ் ஜெயலட்சுமி கூறுகையில், ‘ரம்யா மற்றும் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு வரும்போது தண்ணீர் இல்லை. பிறகு கொஞ்சம், கொஞ்சமாக வெள்ளம் வந்தபோது, எனக்கு பயமாக தான் இருந்தது.மின்சாரமும் இல்லாததால் இன்வெர்ட்டர் மூலம் ஒரு பல்பு மட்டும் எரிந்து கொண்டிருந்தது. அந்த பல்ப்பை நாடித்துடிப்பு பார்க்கும்போது இயக்குவேன். சரியாக இரவு 7 மணிக்கு குழந்தை பிறந்தது. குழந்தையும், தாயும் நலமாக இருந்தனர். அப்போது, பல்ப்பும் அணைந்து விட்டது. கடவுள் புண்ணியத்தில் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை’ என்றார்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button