தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்தொழில்நுட்பம்

தொலைகாட்சியில் எல்லை மீறும் நாடக தொடர்கள்

advertisement by google

எல்லை மீறும் நெடுந்தொடர்கள்

advertisement by google

advertisement by google

ஒரு திரைப்படம் பொதுமக்கள் பார்வைக்கு வருவதற்கு முன் அதன் உள்ளடக்கத்தைப் பரிசீலித்து, சான்றிதழ் அளிக்க தணிக்கை வாரியம் செயல்பட்டு வருகிறது. இன்று திரைப்படங்களுக்கு இணையான இடத்தைத் தொலைக்காட்சித் தொடர்கள் பெற்றிருக்கின்றன.

advertisement by google

திரைப்படங்களையாவது நம் விருப்பப்படி தேர்ந்தெடுத்து, தேடிச் சென்று பார்க்கிறோம். குழந்தைகளை அழைத்துப் போக வேண்டுமா வேண்டாமா என்பதையும் நாம் முடிவு செய்கிறோம். ஆனால், தொடர்களோ நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நம் வீட்டு வரவேற்பறைக்குள் நேரடியாக நுழைந்து விடுகின்றன. எனவே, தொலைக்காட்சித் தொடர்களின் உள்ளடக்கத்தைக் கண்காணிப்பதற்கான அமைப்பு ஒன்று தேவை என வெகுகாலமாக உணரப்பட்டு வருகிறது.

advertisement by google

பெரும்பாலான தொலைக்காட்சி அலைவரிசைகளில் ஒளிபரப்பப்படும் நெடுந்தொடர்கள், ரியாலிட்டி ஷோ எனப்படும் போட்டி நிகழ்ச்சிகள் பலவும் மோசமான உள்ளடக்கத்துடன் பார்க்க முடியாத சித்தரிப்புகளுடன் இருக்கின்றன. இந்நிலையில் ‘பிரைம் டைம்’ என்று சொல்லப்படும் மாலை 7:30 மணி முதல் 8 மணிவரை சன் டிவியில் ஒளிபரப்பப்படும் ‘கல்யாண வீடு’ என்ற நெடுந்தொடரில் சில வசனங்கள், சித்தரிப்புகள் தொடர்பான புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது பரவலான கவனத்தை ஈர்த்திருக்கிறது.

advertisement by google

புகாரும் நடவடிக்கையும்.

advertisement by google

‘கல்யாண வீடு’ தொடரில் மே 14, 15 ஆகிய நாட்களில் ஒளிபரப்பான அத்தியாயங்களில் ரோஜா என்ற கதாபாத்திரம் தன்னுடைய அக்காவைப் பாலியல் வல்லுறவு செய்ய ஆட்களை நியமிக்கிறாள். அந்த வல்லுறவு எப்படியெல்லாம் கொடூரமாக நடைபெற வேண்டும் என்று விவரிக்கிறாள். ஜூன் 28 அன்று ஒளிபரப்பான அத்தியாயத்தில், பாலியல் வல்லுறவு தொடர்பான விரிவான விவரணைகளும் வல்லுறவுக் குற்றத்துக்கான தண்டனை என்கிற பெயரில் கொடூரமான வன்முறையை நியாயப்படுத்துவது போன்ற சித்தரிப்பும் ஒளிபரப்பானது.

advertisement by google

இதனால், அதிர்ச்சியடைந்த சிலர் ஒளிபரப்பு உள்ளடக்கப் புகார் கவுன்சில் (Broadcasting Content Complaints Council) என்ற அமைப்பிடம் புகாரளித்தார்கள். புகார்களை விசாரித்த அந்த அமைப்பு, குறிப்பிட்ட ஆட்சேபணைக்குரிய காட்சிகளை ஒளிபரப்பிய சன் டிவிக்கு ரூ.2.5 லட்சம் அபராதம் விதித்திருப்பதோடு ஒரு வாரத்துக்கு அந்தத் தொடர் ஒளிபரப்புடன் மேலே குறிப்பிட்ட வசனங்களும் காட்சிகளும் இடம் பெற்றதற்கு மன்னிப்புக் கோர வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதன்படி, தொடரின் தயாரிப்பாளரும் இயக்குநரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பவருமான திருமுருகன் செப்டம்பர் 23 முதல் 28வரை ‘கல்யாண வீடு’ தொடர் ஒளிபரப்பாகும் போது இடையில் தோன்றி வருத்தம் தெரிவித்தார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் உள்ளடக்கம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க இப்படியோர் அமைப்பு இருப்பதே இந்த நிகழ்வின் மூலமாகத் தான் பலருக்குத் தெரிய வந்திருக்கிறது. மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் அங்கீகாரத்துடன் இயங்கும் இந்த அமைப்பு 2011-ல் உருவாக்கப்பட்டது. தொலைக்காட்சிகளில் ஒளிபரப்படும் கேளிக்கை நிகழ்ச்சிகளைக் கண்காணிப்பதும் நிகழ்ச்சிகளின் உள்ளடக்கம் தொடர்பான புகார்களைக் கையாண்டு உரிய நடவடிக்கை எடுப்பதுமே இந்த அமைப்பின் பணி.

குற்றத்தைக் காண்பிப்பதே குற்றமா?

இத்தனை ஆண்டுகளாகத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மோசமான உள்ளடக்கம் சார்ந்து விமர்சித்து வந்தவர்களுக்கும் அவற்றைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்ற விரக்தியில் இருந்தவர்களுக்கும் இந்தத் தீர்ப்பு நம்பிக்கையும் உத்வேகமும் அளித்திருக்கிறது. அதேநேரம் இந்த நடவடிக்கைக்கு விமர்சனங்களும் எழுந்துள்ளன. “குறிப்பிட்ட கதாபாத்திரத்தின் தீய உளவியலைச் சுட்டும் விதமாகவே அந்த வசனங்கள் வைக்கப்பட்டன” என்று தொடர் தயாரிப்புத் தரப்பு கூறியுள்ளது.

தாங்கள் ஒளிபரப்பும் நிகழ்ச்சிகளில் ஆபாசமான காட்சிகள் இடம் பெறாமல் இருப்பதற்கு உரிய எச்சரிக்கையுடன் செயல்படுவதாக சன் டிவி தரப்பு விளக்கம் அளித்துள்ளது. ‘குற்றத்தைக் குற்றமாகப் பதிவு செய்ததில் என்ன தவறு இருக்க முடியும்? குற்றம் நியாயப்படுத்தப்பட்டால்தானே தவறு’ என்று பார்வையாளர்கள் தரப்பிலிருந்து சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்.

மேம்போக்காகப் பார்த்தால் இந்த வாதங்கள் நியாயமானவையாகத் தோன்றலாம். ஆனால், பாலியல் குற்றங்களை நல்ல நோக்கத்துடன் காட்சிப்படுத்தும் போது கூட அவற்றை உரிய கவனத்துடன் கையாள வேண்டும் என்பதும் பாலியல் குற்றங்களைத் தடுப்பது தொடர்பான அக்கறையின் ஒரு பகுதி தான். பாலியல் குற்றங்களைத் தேவைக்கு அதிகமாக நேரடியாக விவரிக்கும் காட்சிகளும் வசனங்களும் நல்ல நோக்கத்துடன் செய்யப்பட்டாலும் தீய விளைவையே ஏற்படுத்தும்.

பாலியல் குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை. ஆனால், தண்டிக்க விரும்புபவர்கள் சட்டத்தைக் கையிலெடுப்பதும் மிகக் கொடூரமான வன்முறையைக் குற்றவாளிகள் மீது செயல்படுத்துவதும் தொடர்ந்து பல திரைப்படங்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நியாயப்படுத்தப்பட்டு வருகின்றன. அதையே தான் இந்தத் தொடரும் செய்தது. குழந்தைகளும் பார்த்திருக்கக் கூடிய நேரத்தில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் அவ்வளவு கொடூரமாகத் தண்டிப்பது போல் காண்பித்தது குழந்தைகளின் மனத்தைப் பாதிக்கும். மேலும், வன்முறைச் சிந்தனையை ஊக்குவிக்கும்.

கவனம் கோரும் பிரச்சனைகள்.

இவை குறித்தெல்லாம் போதிய விழிப்புணர்வு ஏற்பட்டிராத நேரத்தில் பி.சி.சி.சி. அமைப்பு இப்படியொரு நடவடிக்கை எடுத்திருப்பது நிச்சயமாக வரவேற்புக்குரியது தான். ஆனால், இது மட்டும் போதுமா? இந்த அமைப்பு கவனம் செலுத்த வேண்டிய பிரச்சனைகள் ஏராளமானவை. பெரும்பாலான தொடர்களில் படித்த, நாகரீக உடையணியும் பெண்கள் மிகத் தீயவர்களாகச் சித்தரிக்கப்படுகிறார்கள். நல்லவராகச் சித்தரிக்கப்படும் பெண்கள் எவ்வளவு படித்திருந்தாலும் உயர்ந்த பதவியில் இருந்தாலும் ‘அடக்க ஒடுக்கமான’ உடைகளை அணிபவர்களாகவும் கட்டுப்பெட்டித்தனங்கள் நிறைந்தவர்களாகவும் காண்பிக்கப்படுகிறார்கள்.

‘பெண்கள் படித்து முன்னேறினால் கெட்டு விடுவார்கள்’, ‘மாடர்ன் உடை அணியும் பெண்கள் மோசமானவர்கள்’ என்றெல்லாம் சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் மோசமான சிந்தனைகளை வலுப்படுத்துவதாகவே இந்தச் சித்தரிப்புகள் அமைகின்றன. பெரும்பாலான தொடர்களில் மாமியார்-மருமகள் பிணக்குகள் நிஜத்தில் இருப்பதை விடப் பல மடங்கு ஊதிப் பெருக்கப்படுகின்றன. நிஜத்தில் நல்லுறவைப் பேணும் மாமியார்களுக்கும் மருமகள்களுக்கும் இடையில் கூட பரஸ்பரம் தேவையற்ற சந்தேகத்தையும் எதிர்ப்புணர்வையும் ஏற்படுத்தும் வகையில் சில தொடர்கள் அமைந்து விடுகின்றன.

கற்பனை சார்ந்த நெடுந்தொடர்கள் இப்படி என்றால், ரியாலிட்டி ஷோ என்ற போட்டி நிகழ்ச்சிகள் இவற்றுக்கு எந்த வகையிலும் சளைத்தவை அல்ல. நகைச்சுவை என்கிற பெயரில் உருவக் கேலியின் உச்சத்தைத் தொடுவது, பெரும்பாலும் பெண்களின் உடை, பழக்கவழக்கங்கள் தொடர்பான இழிவான பார்வையை நகைச்சுவையாக முன்வைப்பது, போட்டியாளர்களை அவர்களின் சமூகப் பின்னணி சார்ந்து கேலி செய்வது என அவற்றின் தீவினைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இதையெல்லாம் கவனித்து உரிய கட்டுப்பாடுகளை
பி.சி.சி.சி. அமைப்பு நடைமுறைப்படுத்தினால் இன்னும் ஆரோக்கியமான மாற்றங்கள் விளையக் கூடும். அதைத் தொடங்கி வைக்கும் நல்ல திருப்பமாக ‘கல்யாண வீடு’ தொடர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை அமையட்டும்.

புகார் அளிப்பது எப்படி?

இந்தியன் பிராட்காஸ்டிங் ஃபவுண்டேஷன் (ஐபிஎஃப்) என்பது தொலைக்காட்சி அலைவரிசை நிறுவனங்களுக்கான கூட்டு அமைப்பு. 1999-ல் உருவான இந்த அமைப்பில் 250 இந்தியத் தொலைக்காட்சி அலைவரிசைகள் உறுப்பினர்களாக உள்ளன. இதன் துணை அமைப்பு தான் பி.சி.சி.சி. ஐபிஎஃப்-ல் உறுப்பினர்களாக இருக்கும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகள் தொடர்பான புகார்களைக் கையாள்வதற்கானது இது. பொதுமக்கள் புகார்களை நிகழ்ச்சி ஒளிபரப்பான 14 நாட்களுக்குள் கடிதம் அல்லது மின்னஞ்சல் வாயிலாக பி.சி.சி.சி.க்கு அனுப்பலாம்.

புகாரை ஆங்கிலத்திலோ இந்தியிலோ தான் அனுப்ப வேண்டும். புகாருக்கு ஆதாரமாக இணைக்கப்படும் ஆவணங்களும் இவ்விரு மொழிகளில் ஏதேனும் ஒன்றில் தான் இருக்க வேண்டும். புகார்களை ஐபிஎஃப் இணையதளத்தில் அதற்குரிய படிவத்திலும் பதிவு செய்யலாம். தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் திரைப்படங்கள், திரைப்படக் காட்சிகள், பாடல்கள், விளம்பரங்கள் ஆகியவை தொடர்பான புகார்களை இந்த அமைப்புக்கு அனுப்பக் கூடாது. அவற்றுக்கு வெவ்வேறு அமைப்புகள் இருக்கின்றன.

இணையவழிப் புகார் அளிப்பதற்கான படிவம்
https://bit.ly/1cuz3i6

பி.சி.சி.சி.க்கு நேரடியாகப் புகார் அளிப்பதற்கான விதிமுறைகள்
https://bit.ly/2mUbavv

advertisement by google

Related Articles

Back to top button