இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

மத்திய,மாநில அரசுபணிகளுக்கு ஒரே பொது தகுதித்தேர்வு வைகோ கடும் எதிர்ப்பு?

advertisement by google

மத்திய, மாநில அரசு பணிகளுக்கு ஒரே பொது தகுதித் தேர்வு- வைகோ கடும் எதிர்ப்பு

advertisement by google

சென்னை: மத்திய, மாநில அரசின் பணிகளுக்கு ஒரே பொது தகுதித் தேர்வு என்ற நடைமுறையை அறிமுகப்படுத்த மதிமுக பொதுச்செயலரும் ராஜ்யசபா எம்பியுமான வைகோ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

advertisement by google

இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணியாளர்களைத் தேர்வு செய்வதற்கு பணியாளர் தேர்வாணையம் (Staff Sellection Commission-SSC), வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் (Institute of Banking Personel Selection -IBPS), ரயில்வே தேர்வு வாரியம் (Railway Recuirtment Board -RRBS) போன்ற அமைப்புகள் மூலம் தகுதித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. மத்திய பா.ஜ.க. அரசு தற்போது இவற்றை எல்லாம் ஒருங்கிணைத்து, மத்திய அரசின் பணியாளர் பொது குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியம் அமைச்சகத்தின் சார்பில், பணியாளர் மற்றும் பயிற்சி நிறுவனம் 2 டிசம்பர் 2019 இல் ஒரே பொதுத் தகுதித் தேர்வு (Common Eligibility Test -CET) நடத்திட அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

advertisement by google

பொது தேர்வு
இதன்படி மத்திய அரசின் குரூப்-பி கெசட்டட் பணிகள், கெசட்டட் அல்லாத குரூப்-பி பணிகள் மற்றும் குரூப்-சி பணி இடங்களுக்கு ஒரே பொதுத் தகுதித் தேர்வு (செட்) நடத்தப்படும். இதற்காக மத்திய அரசு தனியாக ஒரு முகவாண்மை நிறுவனத்தை உருவாக்கத் திட்டமிட்டு இருக்கிறது.

advertisement by google

தரவரிசைப்படி நியமனம்
நாடு முழுவதும் பொதுத் தகுதித் தேர்வு எழுதுவோர்களின் மதிப்பெண்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, ஒரு தர வரிசைப் பட்டியல் உருவாக்கப்படும். மத்திய அரசு மற்றும் மாநில அரசின் காலிப் பணி இடங்களை நிரப்புவதற்கு மேற்கண்ட தர வரிசைப் பட்டியலில் உள்ளவர்கள் தேர்வு செய்யப்பட்டு, பணி நியமனம் செய்யப்படுவர்.

advertisement by google

மாநில அரசு பணிக்கும் தேர்வு
மத்திய அரசு உருவாக்கும் முகவாண்மை நிறுவனத்துடன் மாநில அரசுகள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டு, மாநில அரசுப் பணிகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு ‘செட்’ எழுதித் தேர்வு பெற்றவர்களைப் பெறலாம். இனி மாநில அரசுகள் தனியாக அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் மூலம் தகுதித் தேர்வு நடத்த வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு மத்திய அரசின் பொது அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

advertisement by google

தகுதித் தேர்வுக்கு கண்டனம்
ஒரே நாடு; ஒரே மொழி; ஒரே மதம்; ஒரே கலாச்சாரம்; ஒரே கல்வி; ஒரே குடும்ப அட்டை என்று நாட்டையே ஒரு குடையின் கீழ் கொண்டுவரத் துடிக்கும் பா.ஜ.க. அரசு, மத்திய, மாநில அரசு பணியாளர்கள் தேர்வுக்கும் ஒரே தகுதித் தேர்வு நடத்தத் திட்டமிட்டு இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியதாகும்.

advertisement by google

மாநில தேர்வு ஆணையங்கள் கலைப்பு
மாநில அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் மூலம் தகுதித் தேர்வு நடத்தி, காலிப் பணியிடங்களை நிரப்பும் முறையை ஒழித்துக்கட்டி விட்டு, இனி மாநில அரசு ஊழியர்களாக வட மாநிலங்களில் இருந்துகொண்டு வந்து தமிழ்நாட்டில் திணிப்பதற்கான சதித் திட்டத்தை அரங்கேற்றவே இத்தகைய அறிவிக்கை வெளியிடப்பட்டு இருக்கிறது.

மத்திய பணிகளில் 90% தமிழருக்கே
தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களான இரயில்வேத்துறை, என்.எல்.சி. இந்தியா, பாரத் மிகுமின் நிறுவனம், வங்கிகள், சுங்கத்துறை உள்ளிட்டவற்றில் வெளி மாநிலங்களிலிருந்து ஊழியர்கள் பணி நியமனம் பெறும் நிலையும், தமிழ்நாடு இளைஞர்களின் வேலை வாய்ப்பைப் பறிக்கும் நிலையும் இருப்பதை மாற்ற வேண்டும். தமிழகத்தைச் சேர்ந்த படித்து பட்டம் பெற்ற இளைஞர்களுக்கு மத்திய அரசு பணிகளில் 90 விழுக்காடு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று ஒட்டுமொத்தமாக தமிழகம் குரல் எழுப்பி வருகிறது.

ஒற்றை ஆட்சிமுறைக்கு முயற்சி
ஆனால் மத்திய பா.ஜ.க. அரசு, ஒரே பொதுத் தகுதித் தேர்வு என்ற பெயரில், மாநில உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறித்து, ஒற்றை ஆட்சிமுறைக்கு நாட்டைத் தயார் செய்து வருகிறது. பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். சங் பரிவாரங்களின் உள்நோக்கத்தை முறியடிக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு பறிக்கப்படும் நிலை
தமிழ்நாட்டில் வேலையற்ற 90 இலட்சம் பட்டதாரி இளைஞர்களின் வேலைவாய்ப்பைத் தட்டிப் பறிக்க முயலும் மத்திய பா.ஜ.க. அரசின் சதித் திட்டத்திற்கு அ.தி.மு.க. அர சு துணை போகக்கூடாது. பணியாளர் மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ள ‘பொதுத் தகுதித் தேர்வு’ அறிவிக்கையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன். இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

advertisement by google

Related Articles

Back to top button