கொரோனா ஒழிய கோவிலை திறக்க வேண்டும் கோவில்பட்டியில் காங்கிரஸ் நிர்வாகி நூதன போராட்டம்? முழுவிவரம்-விண்மீன்நியூஸ்
கொரோனா ஒழிய கோவிலை திறக்க வேண்டும் – கோவில்பட்டியில் காங்கிரஸ் நிர்வாகி நூதன முறையில் மனு
கொரோனா ஊரடங்கு காரணமாக வழிபாட்டு தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கோவில்களில் தினமும் பூஜைகள் மட்டும் நடைபெற்று வருகிறது.பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. கோவில்களை திறக்க சமூக இடைவெளி விட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் தமிழக அரசு மறுத்து வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் கோவில்கள் மற்றும் வழிபாட்டு தலங்களை திறக்க வலியுறுத்தி நூதன முறையில் மனு அளித்தனர்.காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணை தலைவரும் வழக்கறிஞருமான அய்யலுச்சாமி, கோவில்களை திறந்தால் தான் கொரோனா தொற்று அழியும், எனவே மத்திய மாநில அரசுகள் கோவில்களை திறந்து சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி தனது சட்டையில் கடவுள் படங்களை வைத்து,கையில் தேங்காய், பழம், பூ அடங்கிய தாம்பூல தட்டினை ஏந்தியவாறு, சூடம், பத்தி ஆகியவற்றை கொளுத்தியவாறு, ஆலயத்தினை திறக்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். பின்னர் தாம்பழ தட்டில் கோரிக்கை மனுவினை வைத்து கோட்டாட்சியர் விஜயாவிடம் வழங்கினார். மனுவினை பெற்று கொண்டு கோட்டாட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இது குறித்து வழக்கறிஞர் அய்யலுச்சாமி கூறுகையில் டாஸ்மாக் கடைகளை திறக்க சொல்லும் மத்திய, மாநில அரசு ஆலய வழிபாட்டுக்கு தடை விதிப்பது சரியான முடிவு கிடையாது, மக்கள் தங்களுடைய குறைகள் இறைவனிடம் மட்டுமே முறையிட முடியும், எனவே போர்கால அடிப்படையில் வழிபாட்டு தலங்களை திறக்க வேண்டும், இல்லையென்றால் 22ந்தேதி முதல் கோவில் நடை திறக்கும் வரை கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோவில் முன்பு உண்ணாவிரதம் இருக்கபோவதாக தெரிவித்துள்ளார்.