பயனுள்ள தகவல்மருத்துவம்

கோபம் ஓர் உளவியல் பார்வை

advertisement by google

கோபம் ஓர் உளவியல் பார்வை

advertisement by google
  1. மரமும், கோடரியும்.

“கோபம் உள்ள வீட்டில் தண்ணீர்க் குடம் கூடக் காய்ந்து போய்க் கிடக்கும்.”

advertisement by google
  • மூதுரை

இரண்டு வருடங்களுக்கு முன் அமெரிக்காவில் இருக்கும் டெக்ஸாஸ் மாகாணத்தில் அது நடந்தது. அந்த நான்கு வயதுச் சிறுவன் சமையலறையை எட்டிப் பார்த்தான். அம்மா, அடுப்பில் மும்முரமாக எதையோ சமைத்துக் கொண்டிருந்தாள். அவன் மெதுவாகப் பூனை போல நடை நடந்து, அம்மாவின் படுக்கையறைக்குள் போனான். ஒரு சிறிய ஸ்டூலை இழுத்து பீரோவுக்கு முன்னால் போட்டான். அந்த ஸ்டூல் மீது ஏறி, பீரோவைத் திறந்தான். அம்மா துப்பாக்கியை பீரோவின் உள் அறையில் வைத்திருக்கிறாள் என்று அவனுக்குத் தெரியும், எடுத்தான். ஸ்டூலிலிருந்து கீழே இறங்கினான்.

advertisement by google

நேராக ஹாலுக்கு வந்தான். அவனுடைய இரண்டு வயதுத் தம்பி அங்கே குப்புறப்படுத்து, பொக்கை வாயைத் திறந்து, மழலையில் பிதற்றியபடி விளையாடிக் கொண்டிருந்தான். இவன் துப்பாக்கியை உயர்த்தித் தம்பியைக் குறிப் பார்த்தான். சுட்டான். சத்தம் கேட்டு சமையலறையிலிருந்து ஓடிவந்த அம்மா, ஹாலில் ரத்த வெள்ளத்தில் மிதக்கும் குழந்தையைப் பார்த்து அலறினாள்.

advertisement by google

அந்த நான்கே வயதான சிறுவன் தன் தம்பியைச் சுட்டதற்குக் காரணம், கோபம். தன் பொம்மைகளைத் தொட்டு விட்டான் என்கிற கோபம். நான்கு வயது சிறுவனுக்குக் கோபம் வருமா? வரும்.

advertisement by google

கோபப்பட அவனுக்குச் சொல்லிக் கொடுத்தது யார்? அவனுடைய பெற்றோர்- இது தான் உண்மை.

advertisement by google

இன்றைக்கு நடக்கும் எத்தனையோ வன்முறைச் சம்பவங்களுக்கு மௌன சாட்சிகளாகக் குழந்தைகள் தான் இருக்கிறார்கள். சமீப காலங்களில் குடும்பத்தில் பெரியவர்களுக்கிடையே நடக்கும் கோபமான உரையாடல்கள் மிக அதிகமாகி விட்டிருக்கின்றன. அவற்றைப் பார்த்துக் குழந்தைகளும் கோபப்படக் கற்றுக் கொள்கிறார்கள். பெற்றோர் தங்களுடைய பெற்றோர் மீது கோபப்படுகிறார்கள். குழந்தைகள் பெற்றோர் மீது கோபப்படுகிறார்கள். பெற்றோர் குழந்தைகள் மீது கோபப்படுகிறார்கள். கடைசியாகக் குழந்தைகள் உலகத்தின் மீதே கோபப்படுகிறார்கள்.

advertisement by google

உலகத்திலிருக்கும் எல்லோருக்குமே கோபத்தின் ஊற்றுக் கண்ணாக இருப்பது வீடு தான்.

‘கோபம் எப்போது வரும் என்று தெரியாது’ எனச் சொல்வார்கள். அது உண்மையில்லை. அது எரிமலையின் கங்கு போல எப்போதும் உள்ளே கனன்று கொண்டிருக்கிறது. சமயம் வரும் போது வெடிக்கிறது. கோபம் என்பது மனிதர்களின் ரத்தத்தில் ஊறி விட்ட ஓர் அடிப்படை உணர்ச்சி. அந்த உணர்ச்சியைக் கட்டுக்குள் வைத்திருக்கிறவர்கள் வாழ்க்கைப் படிக்கட்டுகளில் ‘சரசர’வென மேலே ஏறிச் சென்று விடுகிறார்கள். அந்த உணர்ச்சியை அடக்க முடியாதவர்கள் சரிந்து, உருண்டு விழுந்து அதல பாதாளத்துக்குள் போய் விடுகிறார்கள்.

சிறைச்சாலையில், கொலைக் குற்றம் சாட்டப்பட்டு அடைபட்டிருக்கும் எத்தனையோ கைதிகள் இப்படிச் சொல்லி நாம் கேட்டிருப்போம், ‘ஒரு செகண்ட் கோபப்படாம நிதானமா இருந்திருக்கலாம்’ உலகத்தில் நடக்கும் எந்த வன்முறைச் சம்பவமாக இருந்தாலும் அதற்கு அடிப்படை கோபம் தான்.

வன்முறை வரைக்கும் போக வேண்டாம். நம் அன்றாட வாழ்க்கையில், நம்முடைய ஒவ்வொரு சிறு கோபமும் நமக்கு எப்படியெல்லாம் இழப்புகளை ஏற்படுத்துகின்றன என்று நமக்குத் தெரியாது. தெரிந்தால் மலைப்பாக இருக்கும்.

ராஜசேகர் ஓர் அரசு ஊழியர். சென்னையில் இருந்து மாற்றல் வாங்கிக் கொண்டு, தஞ்சாவூருக்கு வந்திருந்தார். முதல் தேதி. சம்பள தினம். ஒரு பையைத் தூக்கிக் கொண்டு கடைத் தெருவுக்குக் கிளம்பினார்.

ஒரு மாதத்துக்குத் தேவையான மளிகைச் சாமான்களை மொத்தமாக வாங்கி வைத்து விடுவது அவருடைய வழக்கம். தஞ்சாவூருக்கு வந்தடனேயே, அலுவலகத்திலும், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடமும் விசாரித்து வைத்திருந்தார். தரமான, விலை குறைவான மளிகைப் பொருள்கள் எங்கு கிடைக்கும்? அரிசி மொத்தமாக எங்கே வாங்கலாம்? ஊரில் நல்ல முறையில் வைத்தியம் பார்க்கும் டாக்டர் யார்? பக்கத்தில் பார்க்க வேண்டிய கோயில்கள் என்னென்ன? என எல்லாவற்றையும் விசாரித்து வைத்திருந்தார்.

அவர் இருக்கும் பகுதியில் அது தான் பெரிய மளிகைக்கடை இவர் போன போது ஐந்தாறு வாடிக்கையாளர்கள் இவருக்கு முன்னால் நின்றிருந்தார்கள். கல்லாவில் இருந்தவர் தொலைபேசியில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தார். இத்தனைக்கும் கடை சம்பந்தமான உரையாடல் கூடக் கிடையாது. சொந்த விஷயம். நான்கு பேர் நிற்கிறார்களே என்ற லஜ்ஜையில்லாமல் அந்த ஆள் பாட்டுக்குப் பேசிக் கொண்டே இருந்தார். ராஜசேகர் தன்னுடைய மளிகை லிஸ்டை நீட்டியபடி நின்றிருந்தார். அதற்குள் இவரைப் போலவே இன்னும் இரண்டு பேர் பொருள் வாங்குவதற்காகக் கடைக்கு வந்து இவரோடு சேர்ந்து கொண்டார்கள்.

கல்லாவில் இருந்தவர் பத்து நிமிடத்துக்கு மேல் தொலைபேசியில் பேசிவிட்டு, வெகு அலட்சியமாக வாடிக்கையாளர்களைப் பார்த்தார். ராஜசேகருக்குப் பிறகு வந்தவரைப் பார்த்து சிரித்தார். அவர் நீட்டிய லிஸ்டை வாங்கினார். ராஜசேகரின் கை இன்னும் லிஸ்ட்டை நீட்டிப் பிடித்தபடி தான் இருந்தது.

“அண்ணாச்சி! இவரு எனக்குப் பின்னால வந்தவரு. முதல்ல எனக்குப் போடுங்க” என்றார் மெதுவான குரலில் ராஜசேகர்.

“நீங்க என்ன… முதல்ல வந்தேன், பின்னால வந்தேன்னு பேசிக்கிட்டு இருக்கீங்க? யாருக்கு முதல்ல போடணும்னு எங்களுக்குத் தெரியும்” என்று வெடுக்கென்று பதில் சொன்னார் கடைக்காரர். ராஜசேகரின் முகம் சுண்டிப் போனது.

“அப்பிடி இல்ல அண்ணாச்சி. இவரு எனக்குப் பின்னால தான் வந்தாரு?”

“யாருய்யா அது? பேசிக்கிட்டே போறீரே. அவரு ரெகுலர் கஸ்டமரு. ஒரு மாசத்துக்கு எவ்வளவு சரக்கு வாங்குறாருன்னு உங்களுக்குத் தெரியுமா? ஆடிக்கொரு நா, அமாவாசைக்கு ஒரு நா வந்து கோமணத்துணி மாதிரி ஒரு லிஸ்ட்டை நீங்க நீட்டுவீங்க. உடனே உங்களுக்குப் போட்டுடணுமா? இஷ்டமிருந்தா வெயிட் பண்ணி வாங்கிட்டுப் போங்க. முடியலையா? நடையைக் கட்டுங்க. நீங்க வாங்கித் தான் எங்க கடை நடக்கணுங்கறதில்லை” என்று கோபமாகக் கத்தினார் கடைக்காரர்.

அவ்வளவு தான். ராஜசேகர் திரும்பிப் பார்க்காமல் நடக்க ஆரம்பித்து விட்டார். பின்னால் இன்னும் அந்தக் கடைக்காரர் ஏதோ சொல்வது அவருக்குக் கேட்டது.

இந்த இடத்தில் கடைக்காரரின் கோபத்தால் யாருக்கு நஷ்டம் என்று பார்ப்போம். சந்தேகமில்லாமல் கடைக்காரருக்குத் தான் நஷ்டம். அவர் கொஞ்சம் தன்மையாகப் பேசியிருக்கலாம்.

“சாரி சார், உங்களை கவனிக்கலை. இவரு நம்ம ரெகுலர் கஸ்டமர். இவருக்குப் போட்டுட்டு, உடனே உங்களுக்கு சரக்கைப் போடச் சொல்றேன். டீ எதுவும் குடிக்கணும்னா குடிச்சிட்டு வாங்க” என்று அவர் சொல்லியிருக்கலாம்.

அல்லது பழைய கஸ்டமரிடமே, “அண்ணே! ஒரு பத்து நிமிஷம் பொறுத்துக்கங்க. சார் ரொம்ப நேரமா காத்திருக்கிறார். இவருக்கு சரக்கைப் போட்டுட்டு, உங்களுக்குப் போடறேன்” என்று சொல்லியிருக்கலாம்.

மேலே சொன்னபடி சொல்லியிருந்தால், அந்தக் கடைக்காரர் இரண்டு வாடிக்கையாளர்களிடமும் நல்ல பெயர் வாங்கியிருப்பார். தேவையில்லாமல் கோபப்பட்டதால் அவருக்கு எவ்வளவு இழப்பு தெரியுமா?

ராஜசேகர் அந்த மாத மளிகைப் பொருட்கள் லிஸ்ட்டுக்காக ஒதுக்கியிருந்த தொகை இரண்டாயிரம் ரூபாய். அந்தக் கடையில் தான் பொருட்களை வாங்க வேண்டும் என்று ஏற்கெனவே முடிவும் செய்திருந்தார். அன்றைக்கு மட்டும் கடைக்காரர் கோபப்படாமல் இருந்திருந்தால், மாதா மாதம் அந்தக் கடையில் தான் பொருள்களை வாங்கியிருப்பார். ராஜசேகர் தஞ்சையில் இருந்த பத்து வருட காலத்தில், அதற்குப் பிறகு ஒரு முறை கூட அந்தக் கடைக்குப் போகவில்லை.

ஒரு மாதத்திற்கு ராஜசேகர் 2000 ரூபாய்க்கு மளிகைச் சாமான் வாங்குகிறார் என்று வைத்துக் கொள்வோம்.

ஒரு வருடத்துக்கு = ரூ. 2000 x12 = 24,000 ரூபாய்.

பத்து வருடங்களுக்கு = ரூ. 24,000 x 10= 2,40,000 ரூபாய்.

தேவையில்லாத சின்னக் கோபத்தால் அந்தக் கடைக்காரர் இரண்டு லட்சத்து நாற்பதாயிரம் ரூபாய் வியாபாரத்தை இழந்து விட்டார்.

இதைத்தான் ‘ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு’ என்று சொல்கிறார்கள். “கோபம் கண்களை மறைத்து விடும்” என்று சொல்வதும் இதற்குத் தான்.

கோபம் ஒரு காட்டாற்று வெள்ளம். எதிர்ப்படுகிற எல்லாவற்றையும் அடித்துக் கொண்டு போவதோடு, அதுவும் கடலில் போய் விழுந்து விடும்.

துர்வாசர், விசுவாமித்திரர் போன்ற எல்லாவற்றையும் துறந்த முனிவர்களாலேயே கூட கோபத்தைத் துறக்க முடிந்ததில்லை. கோபமே வராத மனிதர் யாராவது இந்த உலகத்தில் இருக்கிறார்களா? நிச்சயமாக இல்லை.

புராண, இதிகால காலத்திலிருந்து இன்றுவரை மனிதனுக்கு ஏற்பட்ட எத்தனையோ இழப்புகளுக்கும், அழிவுகளுக்கும் பின்னால் இருப்பது இந்தக் கோபம் தான்.

விதை போட்டு, நீரூற்றி, பார்த்துப் பார்த்து வளர்த்த ஒரு மரம், பல வருடங்களாக வளர்ந்து பூத்துக் குலுங்கி நிற்கிறது என்று வைத்துக் கொள்வோம். ‘கோபம்’ என்கிற ஒரே ஒரு கோடரி போதும், அதை வெட்டிச் சாய்ப்பதற்கு.

சரி! கோபத்தை அடியோடு ஒழித்து விட முடியுமா? நிச்சயம் முடியாது. ஆனால் பொங்கி எழுகிற கோபத்தை அடக்கி, ஒடுக்கி உள்ளே தள்ளி, எழுந்து விடாமல் செய்ய முடியும். எப்படி?

அதற்கு சில வழிமுறைகள் இருக்கின்றன, சில பயிற்சிகள் இருக்கின்றன. அவற்றைக் கடைப்பிடித்தால் போதும். கோபத்தைத் தடுத்து நிறுத்த உங்களாலும் முடியும்.

advertisement by google

Related Articles

Back to top button