இந்தியாஇன்றைய சிந்தனைஉலக செய்திகள்கல்விகிரைம்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்தொழில்நுட்பம்பயனுள்ள தகவல்மருத்துவம்வரலாறுவரி விளம்பரங்கள்

வரலாற்றின் முன்பிலிருந்து இப்பொழுது வரை உலகம் கண்ட மோசமான தொற்றுநோய்கள்? ஆதரபூர்வமான உலகம் கண்ட நோயினால் மனிதனின் வாழ்க்கை போராட்டங்கள்?முழுவிளக்க கட்டூரை?முழுவிவரம் – விண்மீன் நியூஸ்

advertisement by google

சிறப்புக் கட்டுரை: வரலாற்றின் முன்பும், வரலாற்றிலும் மோசமான தொற்று நோய்கள்!*
வாழ்தல் என்பது மிகப் பெரிய அதிசயம். இந்த உலகத்தில் அவதரித்த அனைத்து உயிர்களும் வாழ்ந்தே ஆக வேண்டும். பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட கால அனுபவம்தான் வாழ்க்கை. இத்தகைய அனுபவமே வாழ்க்கையாகிவிட்டதால் வாழ்வு, உயிர், மரணம் போன்றவற்றை நாம் அதிகம் பேசுவது இல்லை.

advertisement by google

இந்த உலகே ஒரு பெரிய உயிரி என்று எடுத்துக்கொண்டால், அவற்றின் அங்கங்களாக உலகத்தில் உள்ள பல்வேறு உயிரினங்கள் உள்ளன. அங்கமாக உள்ள மனிதன் தறிகெட்டு பல தவறுகள் செய்வதால், உலக சுழற்சியில் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதன் விளைவாகப் பல்வேறு நோய்கள், ஆழிப் பேரலை, பெருவெள்ளம், தேவையில்லாத நேரத்தில் மழை போன்றவை ஏற்படுகின்றன.

advertisement by google

வரலாற்றின் முந்தைய காலம் முதல் நவீன காலம் வரை எண்ணற்ற தொற்று நோய்கள் ஏற்பட்டு மனித குலத்தை அழித்தன. சில நேரங்களில் வரலாற்றின் போக்கையே மாற்றின. மனித குலத்தின் இருப்பை அழித்து, அவர்களின் முழு நாகரிகத்தையே காவு வாங்கியுள்ளன. அத்தகைய கொடிய தொற்று நோய்கள் சிலவற்றை இப்போது காண்போம்.

advertisement by google
  1. வரலாற்றுக்கு முந்தைய தொற்று நோய்: சிர்கா கி.மு 3000

வரலாற்றுக்கு முந்தைய காலத்தை எடுத்துக்கொண்டால் கி.மு 3000இல் அதாவது இன்றைக்கு சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் பரவிய சிர்கா என்கிற தொற்று நோய் இது. வடகிழக்கு சீனாவின் ‘ஹாமின்மங்கா’ மற்றும் ‘மியாசிகோ’ என்ற இரண்டு கிராமங்களையே அழித்தது. தொல்பொருள் மற்றும் மானுடவியல் ஆய்வாளர்களால் கண்டறியப்பட்ட ‘ஹாமின்மங்கா’ பகுதியின் ஒரு வீட்டுக்குள் சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதுடையவர்களின் எலும்புக் கூடுகள் ஒன்றாக இருப்பதைக் கண்டறிந்தனர். சிர்கா என்ற தொற்று நோய் பீடிக்கப்பட்டவர்களை ஒரே வீட்டுக்குள் அடைத்து, பின்னர் எரியூட்டப்பட்டுள்ளனர். இன்றும் இந்தப் பகுதி பாதுகாக்கப்பட்ட பகுதியாக சீனாவால் பராமரிக்கப்பட்டு வருகிறது. வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தின் வெகுஜன அடக்கமாக இது கருதப்படுகிறது.

advertisement by google
  1. ஏதென்ஸின் பிளேக்: கி.மு 430

கி.மு 430இல் ஏற்படுத்திய ஏதென்ஸ் நகரத்தின் பிளேக் நோய் மிகப் பெரிய பேரழிவை ஏற்படுத்திய தொற்று நோயாகும். கி.மு 430ஆம் ஆண்டு ஏதென்ஸுக்கும் ஸ்பார்டாவுக்கும் இடையே போர் தொடங்கிய சிறிது காலத்திலேயே இந்த பிளேக் நோய் ஏதென்ஸ் மக்களைச் சிதைத்தது. ஐந்து ஆண்டுகள் நீடித்த இதன் கோரத் தாண்டவத்தால் சுமார் ஒரு லட்சம் மக்கள் இறந்ததாக மதிப்பிடப்படுகிறது. நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பவர்களுக்குத் திடீரென வெப்ப நிலை உயர்ந்தும், கண்கள் வீக்கத்தால் சிவந்தும், தொண்டைப் பகுதி பாதிக்கப்பட்டு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மக்கள் மடிந்ததாகவும் பதிவு செய்கிறார் கிரேக்க வரலாற்றாசிரியர் துசிடிடிஸ் (கி.மு 460 – 400).

advertisement by google

இந்தத் தொற்று நோய் குறித்த சர்ச்சை விஞ்ஞானிகள் மத்தியில் நீண்ட கால விவாதத்துக்கு வழி வகுத்தது. சில விஞ்ஞானிகள் டைபாய்டு காய்ச்சல் என்றும், சிலர் எபோலா என்றும் சாத்தியக் கூறுகளை முன் வைத்தனர். ஆனால், பல அறிஞர்கள் போரினால் ஏற்பட்ட அதிக கூட்டத்தின் விளைவாக ஏற்பட்ட தொற்று நோயே இது என்று தங்கள் கருத்தாகக் கூறினர். ஆனால் இத்தகைய தொற்று நோய் பாதிப்புகள் தொடர்ந்த போதிலும் கி.மு 404 வரை ஏதென்ஸ், ஸ்பார்டாவிடம் சரணடைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

advertisement by google
  1. அன்டோனைன் பிளேக் தொற்று: கி.பி 165 – 180

கி.பி 165 -180 கால கட்டத்தில் பார்த்தியாவுக்கு எதிரான போருக்குப் பிறகு ரோமானிய சாம்ராஜ்ஜியத்துக்குத் திரும்பிய படை வீரர்கள் மூலம் கொண்டு வந்ததுதான் அன்டோனைன் பிளேக் நோய். பெரியம்மை நோயாகப் பரவிய இந்த அன்டோனைன் பிளேக்கால் ஐந்து மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் வரலாற்றாசிரியர் ஏப்ரல்புட்சி தமது நூலில் குறிப்பிடுகிறார். கி.மு 27 முதல் கி.பி 180 வரையிலான ரோமானிய முடிவுக்கு இந்தத் தொற்று நோய் பங்களித்தது. பிளேக் ஏற்பட்ட பின்னர் அதிகமான உள்நாட்டுப் போர்களையும் படையெடுப்புகளையும் சந்தித்த ரோமானியாவில் இக்கால கட்டத்தில்தான் கிறிஸ்துவம் பல்கிப் பெருகி பிரபலமடைந்தது.

advertisement by google
  1. சைப்ரியன் பிளேக்: கி.பி 250 – 271

ரோமானியப் பேரரசில் பரவிய அன்டோனைன் பிளேக் தொற்று நோயின் பேரழிவுக்குப் பிறகு 70 ஆண்டுக் காலம் கழித்து கி.பி 250 – 271 கால கட்டத்தில் சைப்ரியன் பிளேக் என்னும் நோய் எகிப்து மற்றும் ரோம சாம்ராஜ்ஜியத்தின் பிற பகுதிகளுக்கும் பரவியது. ரோமில் மட்டும் 5000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

எகிப்தில் உள்ள தீப்ஸில் தற்போது லக்சர் என்று அழைக்கப்படும் பகுதியில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வை மேற்கொண்டனர். அப்போது ரோமானியப் பேரரசின் அழிவுக்கான ஆதாரங்களைக் கண்டுபிடித்தனர். ஹார்வா மற்றும் அகிமென்ருவின் இறுதிச் சடங்கு நடைபெறும் பகுதியில் நடந்த அகழாய்வின்போது, பிளேக்கால் பாதிக்கப்பட்டு இறந்த பெரும்பாலானோரின் உடல்கள் சுண்ணாம்பினால் போர்த்தப்பட்ட அடுக்கு முறையில் எரித்தோ அல்லது புதைத்தோ இருந்ததைக் கண்டறிந்தனர். பொதுவாக சுண்ணாம்பு ஒரு கிருமிநாசினி என்பதும் இங்கு நினைவுகூரத்தக்கதாகும். இதற்கு ஆதாரமாக அதே வளாகத்தில் மூன்று சுண்ணாம்பு சூளைகளையும் கண்டறிந்துள்ளனர்.

  1. பைசன்டைன் பிளேக் தொற்று: கி.பி 527 – 565

கிழக்கு ரோமன் பகுதியான பைசன்டைன் பேரரசு புபோனிக் பிளேக் நோயால் வீழ்ச்சியைச் சந்தித்தது. பைசன்டைன் பேரரசை கி.பி 527 முதல் கி.பி 565 வரை ஜஸ்டினியன் என்பவர் ஆட்சி செய்து வந்தார். இக்காலத்தில்தான் கி.பி 541 – 542 வாக்கில் இந்த பிளேக் நோயால் மக்கள் பீடிக்கப்பட்டு இறந்தனர். இந்த இழப்பு உலக மக்கள்தொகையில் 10 சதவிகிதம் என்றும், இது ஐரோப்பாவின் மக்கள்தொகையில் பாதிக்கு சமமானதாக மதிப்பிடப்படுகிறது. பைசன்டைன் பேரரசை ஆண்ட ஜஸ்டினியனும் பிளேக் நோயால் பாதிக்கப்பட்டு பின் மீண்டார். ஆனால், பிளேக் தாக்கிய பின்னர், மத்திய கிழக்கிலிருந்து மேற்கு ஐரோப்பா வரை பரவியிருந்த அவரின் நிலப்பரப்பு படிப்படியாக இழந்து வந்தது. நவீன வரலாற்றாசிரியர்களால் புபோனிக் பிளேக்குக்கு ‘ஜஸ்டினியன் பிளேக்’ என்று பெயரிடப்பட்டது.

  1. கறுப்பு மரணம் (BLACK DEATH): கி.பி 1346 – 1353

பைசன்டைனில் அழிவை உருவாக்கிய புபோனிக் பிளேக் நோயே, கறுப்பு மரணம் என்றழைக்கப்பட்ட 14ஆம் நூற்றாண்டின் (1346 – 1353) பேரழிவாகவும் சுமார் 50 மில்லியன் மக்களைக் கொன்ற கொள்ளை நோயாகவும் பார்க்கப்படுகிறது. இறப்பு விகிதம் ஐரோப்பாவின் மொத்த மக்கள்தொகையில் 60 சதவிகிதம் என்று வரலாற்றாசிரியர் ஓலே ஜே.பெனடிக்டோ மதிப்பிடுகிறார்.

இதற்கு ஏன் கறுப்பு மரணம் எனப் பெயரிடப்பட வேண்டும்? லத்தின் வார்த்தையான ATRA என்றால் பயங்கரம், கறுப்பு என அர்த்தப்படுத்தி இப்பேரழிவு மரண நோய்க்குக் கறுப்பு மரணம் எனப் பெயரிட்டுள்ளனர். புளோரன்ஸ், சியானாவில் 60 சதவிகிதம் பேர் இறந்துள்ளனர். இந்த பிளாக் டெத் என்பது புபோனிக் பிளாக்கின் ஒரு தொற்று நோயாகவும், இது யெர்சினியா பெஸ்டிஸ் என்ற பாக்டீரியாவால் ஏற்பட்ட நோயாகவும் கருதப்படுகிறது. இப்பேரழிவுக்குப் பிறகு ஐரோப்பாவில் தொழிலாளர் பற்றாக்குறையும், உயிர் பிழைத்தவர்களில் பலர் உழைப்பதற்கேற்ற உடல் தகுதியும் இல்லாமல் இருந்தனர். இப்போக்கு ஐரோப்பாவின் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கு வித்திட்டது.

  1. கோகோலிஸ்ட்லி தொற்று: கி.பி 1545 – 1548

16ஆம் நூற்றாண்டில் (1545-1548) கோகோலிஸ்ட்லி என்ற தொற்று நோயால் மெக்ஸிகோவின் மக்கள்தொகை சரிவுக்குக் காரணமாக அமைந்தது. வரலாற்றில் மிகப் பெரிய இறப்பு விகிதமாக இது பார்க்கப்படுகிறது. இத்தகைய கொள்ளை நோய்க்கு 16ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் ஏற்பட்ட வரலாறு காணாத வறட்சியும் ஒரு காரணமாகும். மெக்ஸிகோவின் பூர்வீக மக்கள் 1519 முதல் 1520 வரை பெரியம்மை தொற்று நோயின் விளைவாக 5 மில்லியன் முதல் 8 மில்லியன் வரை மக்கள் மரணமடைந்தனர். 1545 மற்றும் 1576ஆம் ஆண்டுகளில் 7 மில்லியன் முதல் 17 மில்லியன் வரையிலான மக்களை இந்நோய் காவு கொண்டது. இது மெக்ஸிகோவின் பூர்வீக மக்களில் 80 சதவிகிதம் வரை இருக்கும் எனக் கணக்கிடப்படுகிறது. ஏறக்குறைய புபோனிக் கறுப்பு மரணத்தோடு இதை ஒப்பிடலாம். இத்தகைய பேரழிவுக்கு முக்கிய காரணிகளாக அப்போதைய கால நிலை, சூழலியல், மக்களின் மோசமான வாழ்நிலைகள், மக்களை அடிமைகளாக நடத்திய விதம் போன்றவை கூறப்படுகிறது.

இதில் பாதிக்கப்பட்டவர்களின் எலும்புக் கூடுகளிலிருந்து டி.என்.ஏவை பரிசோதித்த ஒரு சமீபத்திய ஆய்வில், டைபாய்டு அடங்கிய ஒருவகை என்டெரிக் காய்ச்சல் மூலம் பாதிக்கப்பட்டு, அதன் விளைவாக அதிக காய்ச்சல், நீரிழப்பு மற்றும் இரைப்பை, குடல் பிரச்சினைகள் ஏற்பட்டு இறந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  1. அமெரிக்க பிளேக்: 16ஆம் நூற்றாண்டு

ஐரோப்பிய வருகைக்கு முன்னர் அமெரிக்கா பெரும்பாலும் யூரேசிய ஆப்பிரிக்க நிலப் பரப்பிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டது. ஐரோப்பியர்களுக்கும், அமெரிக்க கண்டங்களின் பூர்வீக மக்களுக்கும் இடையிலான பெரிய அளவிலான தொடர்புகள் தட்டம்மை, பெரியம்மை மற்றும் பிற யூரேசிய நோய்களின் தொற்றுக்குப் பிரதான காரணமாக அமைந்தது. இந்த நோய் அமெரிக்க பூர்வீக மக்களிடையே பரவியதின் விளைவாக மக்கள் தொகை வீழ்ச்சியடைந்தது. 16ஆம் நூற்றாண்டில் மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் உள்ள ஆஸ்டெக் மற்றும் இன்கா நாகரிகங்களை ஆக்கிரமித்து முடக்கியது. கலாச்சார வீழ்ச்சிக்குப்பின் 1532 வாக்கில் அமெரிக்கப் பேரரசுகளின் வீழ்ச்சிக்கும், அமெரிக்க மக்களை ஐரோப்பியர்களுக்கு அடிபணியச் செய்வதற்கும் வழி வகுத்தது.

  1. லண்டனின் பெரும் பிளேக் தொற்று: கி.பி 1665 – 1666

இங்கிலாந்தில் 1665 -1666இல் மிகப் பெரிய அளவில் பிளேக் நோய் பரவி மக்களைக் கொன்றது. இதன் விளைவாக 75,000 முதல் 1,00,000 மக்கள் வரை மாண்டதாகவும், லண்டன் மக்கள் தொகையில் இது ஐந்தில் ஒரு பங்கு எனவும் கணிக்கப்படுகிறது. இது முந்தைய ஐரோப்பாவில் பரவிய புபோனிக் பிளேக், கறுப்பு மரணத்துக்கு முந்தைய நிலையோடு ஒப்பிடப்படுகிறது. இது முற்றான பாதிப்பு இல்லையென்றாலும் 1666 செப்டம்பர் 2இல் லண்டனில் ஏற்பட்ட பெரும் தீ நான்கு நாட்கள் நீடித்து நகரத்தின் பெரும் பகுதியை எரித்தது.

  1. மார்சேயின் பெரிய பிளேக் தொற்று: கி.பி 1720 – 1723

கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியிலிருந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு, கிராண்டு – செயின்ட் – அண்டோயின் என்ற கப்பல் பிரான்ஸின் மார்சேயில் பகுதிக்கு வந்தபோது அங்கு பெரும் பிளேக் நோய் பரவத் தொடங்கியது. கப்பல் தனிமைப்படுத்தப்பட்டிருந்தாலும் பிளேக் நகரத்துக்குள் நுழைந்தது. அடுத்த மூன்றாண்டுகளில் மார்சேய் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு லட்சம் பேர் இறந்திருக்கலாம் என்றும், இது மார்சேயின் மக்கள்தொகையில் 30 சதவிகிதம் எனக் கணிக்கப்படுகிறது. இத்தகைய விளைவு 14ஆம் நூற்றாண்டில் தொடங்கிய புபோனிக் பேரழிவின் தொடர்ச்சியான அத்தியாயமாகப் பார்க்கப்படுகிறது.

  1. ரஷ்ய பிளேக் தொற்று: கி.பி 1770 – 1772

மாஸ்கோவில் பிளேக் நோயின் முதல் அறிகுறி 1770இன் பிற்பகுதியில் தோன்றி 1771இல் பெரிய தொற்று நோயாக மாறியது. மக்களைக் கட்டாய தனிமைப்படுத்தல்கள், அசுத்தமான சொத்துகளை அழித்தல், தொழிற்சாலைகள், சந்தைகள், கடைகள் மற்றும் நிர்வாக அலுவலகங்கள் மூடப்பட்டதால் நகரத்தின் பொருளாதாரம் முடங்கியது. கடுமையான உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது. மக்களின் வாழ்க்கை நிலைமைகள் மோசமடைந்தது. ரஷ்ய பிரபுகள் மாஸ்கோவை விட்டு வெளியேறினர். எங்கும் கிளர்ச்சிகள் வெடித்தன. ரஷ்யாவின் பேரரசி கேத்தரின்-II பிளேக்கைக் கட்டுப்படுத்தவும், பொது ஒழுங்கை மீட்டெடுக்கவும் மிகவும் ஆசைப்பட்டார். அவர் அனைத்து தொழிற்சாலைகளையும் மாஸ்கோவிலிருந்து வெளியேற்ற ஆணையிட்டார். பிளேக் முடிவடைந்த நேரத்தில் ஒரு லட்சம் மக்கள் இறந்ததாகக் கணக்கிடப்பட்டது.

  1. பிலடெல்பியா மஞ்சள் காய்ச்சல்: கி.பி 1793

கி.பி 1793இன் கோடைக்காலம். கோடைக்காலத்துக்குரிய வெப்பம் மற்றும் ஈரப்பதம் கொண்ட காலநிலையில் பிலடெல்பியாவில் மஞ்சள் காய்ச்சல் என்ற பயங்கரமான தொற்று நோய் பரவியது. இது அமெரிக்காவின் மிகப் பெரிய நகரத்தையும் தலைநகரத்தையும் பீடித்தது. இந்த கொடூரமான மஞ்சள் காய்ச்சலால் 5,000 பேர் வரை இறந்தனர். இது தலைநகரின் 50,000 குடிமக்களில் பத்தில் ஒரு பங்காகும். தாமஸ் ஜெபர்சன், ஜார்ஜ் வாஷிங்டன் மற்றும் மத்திய அரசின் பெரும் பகுதியினர் நகரத்தைவிட்டு வெளியேறினர். இதனால் இறப்பு விகிதங்கள் மிக அதிகமாக இருந்தது. கொசுக்களின் மூலம்தான் இந்த மஞ்சள் காய்ச்சல் பரவியது என்பதை 1881 வரை கண்டுபிடிக்கவில்லை.

  1. ஃப்ளு காய்ச்சல்: கி.பி 1889 – 1890

நவீன தொழில்துறை யுகம், அதனால் ஏற்பட்ட போக்குவரத்து தொடர்புகள் ஆகியவை இன்ஃப்ளுயன்ஸா வைரஸ் தொற்று ஏற்பட்டு அழிவினை ஏற்படுத்த வழிவகுத்தது. ஒரு சில மாதங்களில் இந்நோய்த் தொற்றால் உலகம் முழுவதும் பரவி ஒரு மில்லியன் மக்களைக் கொன்றது. ஆரம்பத்தில் ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் முழுவதும் இந்த வைரஸ் வேகமாகப் பரவியது. மேலும் விமானப் போக்குவரத்து பயணம் இல்லாமல் இருந்தபோதிலும் ஐரோப்பா மற்றும் உலகின் பல பகுதிகளுக்கு இக்காய்ச்சல் தொற்று பரவியது

  1. அமெரிக்க போலியோ தொற்று: 1916

நியூயார்க் நகரில் தொடங்கிய போலியோ தொற்றால் அமெரிக்காவில் 27,000 பேர் பாதிக்கப்பட்டு 6,000 இறப்புகளையும் ஏற்படுத்தியது. இந்த நோய் முக்கியமாகக் குழந்தைகளை பாதித்தது. சில நேரங்களில் இதிலிருந்து உயிர் பிழைத்தவர்கள் நிரந்தர ஊனமாகும் நிலையும் ஏற்பட்டது. 1954ஆம் ஆண்டு டாக்டர் ஜோனாஸ் சால்க், போலியாவுக்கான தடுப்பூசியை உருவாக்கினார். அதுவரை போலியோவால் அமெரிக்காவில் பலர் பாதிக்கப்பட்டு வந்தனர். அமெரிக்காவில் கடைசியாக போலியோ பாதிப்பு 1979ஆம் ஆண்டு பதிவாகியது. உலகளாவிய தடுப்பூசி முயற்சிகள் இந்த நோயை வெகுவாகக் குறைத்திருந்தாலும், இன்னும் முழுமையாக ஒழிக்கப்படவில்லை.

  1. ஸ்பானிஷ் காய்ச்சல்: 1918 -1920

ஸ்பானிஷ் இன்ஃப்ளுயன்ஸா என்னும் ஸ்பானிஷ் காய்ச்சல், முதல் உலகப் போருடன் தொடர்புடையது. 1918ஆம் ஆண்டு ஒரு கோடைக்காலத்தின் இறுதியில் மிகவும் வைரலாக பரவியது. முதல் உலகப் போரின்போது அதில் ஈடுபட்ட வீரர்களுடன் பிரிக்க முடியாத தொடர்புடையது. ஐந்து கண்டங்களைச் சேர்ந்த வீர்ர்கள் மற்றும் தொழிலாளர்கள் பிரெஞ்சில் கூடியது, அவர்களின் வாழ்க்கைத் தரம், காலநிலை, பறவைகள், பன்றிகள் மற்றும் பிற விலங்குகளுடனான தொடர்பு, காடுகளுடனான தொடர்பு ஆகியவை இன்ஃப்ளுயன்ஸா தொற்று பரவ காரணிகளாக அமைந்தன. இதன் மூலம் உலகெங்கிலும் 21.5 மில்லியன் மக்கள் இறந்துள்ளனர். இத்தொற்றால் இறந்தவர்களில் பெரும்பாலோர் 15 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களாவர்.

  1. காலரா தொற்று நோய்: 1921 – 1953

கடந்த 200 ஆண்டுகளில் ஏழு காலரா தொற்று நோய்கள் ஏற்பட்டுள்ளன. முதல் தொற்று நோய் 1817ஆம் ஆண்டில் இந்தியாவில் தோன்றியது. இந்த முதல் காலரா தொற்று கல்கத்தாவுக்கு அருகில் 1817 முதல் 1824 வரை இருந்தது. இரண்டாவது தொற்று நோய் 1826 முதல் 1837 வரையிலும், மூன்றாவது தொற்று 1846 முதல் 1860 வரையிலும், நான்காவது தொற்று 1863 முதல் 1875 வரையிலும், ஐந்தாவது தொற்று 1881 முதல் 1896 வரையிலும், ஆறாவது தொற்று 1899 முதல் 1923 வரையிலும், ஏழாவது தொற்று 1961 முதல் 1975 வரை இந்தோனேஷியா முதல் உலகின் பல பகுதிகளிலும் பரவி பாதிப்பை ஏற்படுத்தியது. 1902 முதல் 1904 வரையிலான ஆறாவது தொற்று காலத்தில் இந்தியாவில் மட்டும் 8 லட்சம் பேர் காலரா நோய் பாதிப்பில் இறந்துள்ளனர்.

தமிழகத்தைப் பொறுத்தவரை 1921 முதல் 1974 வரையிலான காலரா பாதிப்பு அறிக்கையின்படி 1950ஆம் ஆண்டு இறப்பு விகிதம் அதிகமாக இருந்துள்ளது. 1924 முதல் 1933 வரையிலான கால கட்டத்தில் இறப்பு விகிதம் குறைவாக இருந்துள்ளது. 1953ஆம் ஆண்டு மட்டும் 71,156 பேர் காலரா நோய் பாதிப்பில் இறந்துள்ளனர்.

  1. ஆசிய காய்ச்சல்: 1957 – 1958

தொற்று நோய் காய்ச்சலுக்கான மற்றோர் உலகளாவிய சாட்சி, ஆசிய காய்ச்சலாகும். சீனாவில் அதன் வேர்களைக்கொண்டு, இந்த நோய் ஒரு மில்லியனுக்கும் அதிகமான உயிர்களைக் கொன்றது. இந்தத் தொற்று நோய் வைரஸ் பறவைக் காய்ச்சலின் வைரஸ் கலவையாகும். பிப்ரவரி 1957இல் சிங்கப்பூரில் விரைவாகப் பரவியதாக நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மைய அறிக்கையின் வாயிலாக அறிய முடிகிறது. அதே ஆண்டில் ஹாங்காங், கோடைக் காலங்களில் அமெரிக்காவின் கடலோர நகரங்களில் பரவி பாதிப்பை ஏற்படுத்தியது.

  1. எய்ட்ஸ் தொற்று: 1981 முதல் தற்போது வரை

எய்ட்ஸ் முதன்முதலில் அடையாளம் காணப்பட்டதிலிருந்து 35 மில்லியன் உயிர்களை பலி வாங்கியுள்ளது. ஹெச்.ஐ.வி – இது எய்ட்ஸை ஏற்படுத்தும் வைரஸ் ஆகும். இது 1920களில் மேற்கு ஆப்பிரிக்காவில் ஒரு சிம்பன்சியின் வைரஸிலிருந்து மனிதர்களுக்குத் தொற்றியது. இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எய்ட்ஸ் ஒரு தொற்று நோயாக இருந்ததுள்ளது. ஹெச்.ஐ.வி அறிகுறியோடு வாழும் 40 மில்லியன் மக்களில் சுமார் 64 சதவிகிதம் பேர் ஆப்பிரிக்காவில் வாழ்கின்றனர்.

  1. H1N1 பன்றிக் காய்ச்சல் தொற்று: 2009 -2010

இன்ஃப்ளு வைரஸ் தொற்று காரணமாக ஏற்படும் சுவாச நோய்களால் உலக அளவில் இறப்புகள் நிகழ்வதற்குக் காரணமாகிறது. வளரும் நாடுகளில் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது. உலக அளவில் இது இறப்புக்கு மூன்றாவது காரணமாகவும், இதனால் 2,50,000 முதல் 50,00,000 வரையிலான மக்கள் இறந்துள்ளனர்.

இன்ஃப்ளுயன்ஸா AH1N1இன் முதல் அறிகுறி ஏப்ரல் 2009இல் மெக்ஸிகோவில் கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து இதன் நோய்த் தொற்று 74 நாடுகளுக்குப் பரவி ஜூன் 11 2009இல் 30,000 நோய்த் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர். நோய்த் தொற்றின் 5 மற்றும் 6ஆம் கட்டங்களில் உலக சுகாதார மையம் (WHO) எச்சரிக்கை விடுத்தது. ஆனால், அப்போது 214 நாடுகளில் நோய்த் தொற்று பரவியிருந்தது.

இந்தியாவில் ஹைதராபாத் மாநிலத்தில் மே 16, 2009இல் இன்ஃப்ளுயன்ஸா AH1N1 அறிகுறி கண்டறியப்பட்டது. இந்தத் தொற்றின் மூலம் முதன்மையாக பாதிக்கப்பட்டவர்கள் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் ஆவர். 65 வயதுக்குக் குறைவானவர்களின் இறப்பு விகிதம் 80 சதவிகிதமாக இருந்தது எனத் தொற்று நோய்களுக்கான தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. ஆனால், பருவ காலங்களில் ஏற்படும் காய்ச்சல்களால் 65 வயதும் அதற்கு மேற்பட்டவர்களுமே இறந்துள்ளனர். இவர்கள் பன்றிக் காய்ச்சல் என்று சொல்லப்படுகிற H1N1 நோய்த் தொற்றுக்கு அவ்வளவாக பாதிப்படையவில்லை என்று தெரிகிறது. இந்நோய்த் தொற்றின் அவசியம் கருதி H1N1 வைரஸுக்கான தடுப்பூசி ஆண்டுதோறும் போடப்பட வேண்டிய தடுப்பூசிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

  1. மேற்கு ஆப்பிரிக்க எபோலோ தொற்று நோய்: 2014 – 2016:

எபோலோ வைரஸ் நோய் 2014 முதல் 2016 வரை மேற்கு ஆப்பிரிக்காவில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. முதலில் 1976ஆம் ஆண்டில் சூடான் மற்றும் காங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலோவின் முதல் அறிகுறி கண்டறியப்பட்டது. இந்த எபோலோ வைரஸானது வௌவால்களில் இருந்து மனிதர்களுக்குப் பரவியிருக்கலாம் என்ற கருத்துருவும் வெளியிடப்பட்டது. பின்னர் தென்கிழக்கு கினியாவின் காடுகள் நிறைந்த கிராமப்புறத்தில் 2014 மார்ச் 23 அன்று எபோலோ வைரஸ் தொற்றைக் கண்டறிந்ததாக உலக சுகாதார அமைப்பு (WHO) அதிகாரபூர்வமாக அறிவித்தது. இதுதான் மேற்கு ஆப்பிரிக்காவின் எபோலோ தொற்று நோயின் தொடக்கமாகக் குறிப்பிடலாம்.

ஆரம்ப நோய்க் குறியீடு டிசம்பர் 2013இல் கினியாவில் ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த 18 மாதக் குழந்தையின் மூலம் கண்டறியப்பட்டது. அதன் பின்னர் வரிசையாக ஐந்து நபர்கள் வயிற்றுப்போக்கு உபாதைகளுடன் மருத்துவமனைக்கு வந்தபோது 2014 ஜனவரி 24 அன்று மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அதிகாரபூர்வ எச்சரிக்கை வழங்கப்பட்டது. சுகாதார அமைச்சகம் ‘அடையாளம் தெரியாத நோய்’ என்று அறிவித்தது. ஆனால், உலக சுகாதார மையம், பாதிக்கப்பட்ட 49 நபர்களுடன், எபோலோவினால் இறந்தவர்கள் 29 பேர் என அதிகாரபூர்வமாக அறிவித்தது. இதைத் தொடர்ந்து எபோலோ, கினியாவின் தலைநகர் கொனக்ரி, இத்தாலி, மாலி, நைஜீரியா, செனகல், ரஷ்யா, அமெரிக்கா எனப் பல நாடுகளுக்குப் பரவியது. 2014 முதல் 2016 வரை 28,600 பேர் பாதிக்கப்பட்டு, 11,325 பேர் இறந்துள்ளனர். இன்னும் இதற்கு நேரடியாக மருந்துகள் கண்டுபிடிக்கப்படாமல் இருந்தாலும், தடுப்பூசிக்கான ஆய்வும் முயற்சிகளும் முன்னெடுப்புகளும் தொடர்ந்தவண்ணம் உள்ளன.

.

  1. ஜிகா வைரஸ் தொற்று நோய்: 2015 முதல் தற்போது வரை

ஜிகா வைரஸ் என்பது கொசுவால் பரவும் ஃபிளவி வைரஸ் ஆகும். இது உகாண்டாவில் முதன்முதலில் 1947இல் அடையாளம் காணப்பட்டது. 2007க்கு முன்னர் ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளிலிருந்து ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் விவரங்கள் பதிவாகியுள்ளது. தென் அமெரிக்கா மற்றும் மத்திய அமெரிக்காவில் ஜிகா தொற்று நோயின் தாக்கம் பல ஆண்டுகளாக அறியப்படாமல் இருந்து வந்தது. காரணம், ஜிகா தொற்றின் இயல்பே எவ்வித முன் அறிகுறியும் தெரிந்துகொள்ள முடியாமல் இருப்பதுதான். 80 சதவிகித நோயாளிகளுக்கு முன் அறிகுறி ஏதும் இருக்காது. இந்த ஜிகா வைரஸ், பொதுவாக ஏடிஸ் இனத்தின் கொசுக்கள் மூலம் பரவுவதாக உலக சுகாதார மையம் (WHO) தெரிவிக்கிறது. ஜிகா பொதுவாக பெரியவர்களுக்கோ, அல்லது குழந்தைகளுக்கோ தீங்கு விளைவிப்பதில்லை. எனினும் கர்ப்பிணிகளின் கருப்பையில் உள்ள சிசுவைத் தாக்கி பிறப்புக் குறைபாடுகளை உண்டாக்கும் வல்லமை பெற்றதாகும். ஜிகாவைக் கொண்டு செல்லும் கொசுக்களின் வகையானது சூடான, ஈரப்பதமான கால நிலையில் சிறப்பாக வளரும். இதனால் தென் அமெரிக்கா, மத்திய அமெரிக்காவின் பகுதிகளில் இக்கொசுக்கள் வளர்கின்றன.

வாழ்தலுக்கு உயிர் வேண்டும். உயிரின் நிலைப்புத் தன்மைக்குச் சக்தி வேண்டும். இதற்கு மூல சக்தியாக விளங்குவது சூரிய ஒளி, வெப்பம், சேமிக்கப்பட்ட சக்தியான பூமியின் சூடு, சுற்றுச்சூழல் போன்றவை முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், இந்த உயிரானது இயற்கையாக நோய் என்கிற சேமிப்பை தன்னுள்ளே வைத்திருக்கிறது. இன்றைய உலகப் பொருளாதார மாற்றம், வெப்பநிலை மாறுபாடு, சூழல் மாற்றம் போன்ற பல பிரச்சினைகளின் விளைவாக, கண்ணுக்குத் தெரியாத நுண்கிருமிகளால் காச நோய், எய்ட்ஸ் முதல் தற்போதைய கொரோனா தொற்று நோய் வரை ஏற்படுகிறது.

வரலாற்று முந்தைய காலகட்டத்திலிருந்தே இவ்வுலகம் பல நுண்ணுயிர்களை எதிர்கொண்டு, அதனால் பாதிக்கப்பட்டு, எதிர்த்துப் போராடி தற்போதைய நிலையை எட்டியுள்ளது. சுமார் 10,67,000 வைரஸ்கள் உள்ளன. இதில் ஆறு லட்சம் முதல் எட்டு லட்சம் வரையிலான வைரஸ்கள் மனிதர்களுக்கு நன்மையும் தீமையும் செய்வனவாக உள்ளன. கண்ணுக்குத் தெரிந்தவற்றையெல்லாம் அழித்துவிட்டு, தற்போது கண்ணுக்குத் தெரியாத நுண்கிருமியால் பாதிக்கப்பட்டு நம்மை நாமே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய நிலைமைக்கு வந்துவிட்டோம். விஞ்ஞானம் மட்டுமே நமக்கு நிறைவான வாழ்க்கையைக் கொடுத்துவிடாது. இந்த நிலைமையும் கடந்து போகும் என்ற நினைவோடு மெய்ஞ்ஞானத்தோடு வாழ்க்கையைப் புரிந்துகொண்டு நடைபோடுவோம்.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button