உயிரை பணயம் வைத்து பணி செய்யும் எங்களை நிரந்தரம் செய்யுங்கள்? தூய்மை பணியாளர்கள் கோரிக்கை?
உயிரை பணயம் வைத்து பணி செய்யும் எங்களை நிரந்தரம் செய்யுங்கள்.. தூய்மை பணியாளர்கள் கோரிக்கை
சென்னை: எங்கள் நிரந்தரத் தொழிலாளர்களாக்க வேண்டும் என தூய்மை பணியாளர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்கள்.
நாட்டை தூய்மையாக வைத்திருப்பதற்கு முக்கிய காரணம் தூய்மை பணியாளர்கள்தான். இவர்கள் ஒரு நாள் இல்லாவிட்டாலும் அந்த தெருவே குப்பைக் கூளமாக நாற்றத்துடன் காணப்படும். தூய்மை பணியாளர்கள், சாக்கடையை சுத்தப்படுத்தும் பணியாளர்கள் இல்லாவிட்டால் நாடு என்னவாகும் என்பதை சந்திரமுகி படத்தில் தேவுடா தேவுடா பாடல் மிகவும் அற்புதமாக விளக்கியிருக்கும்.
அதில் “சாக்கடைக்குள் போயி சுத்தம் செய்யும் பேரு நாலு நாள் லீவு போட்டா நாறி போகும் ஊரு, முடி வெட்டும் தொழில் செய்யும் தொழந்தான் இல்லையேல் நமக்கெல்லாம் ஏது அழகு” என பாடல் வரிகள் இருக்கும். அந்த வகையில் தற்போது கொரோனாவால் நாடே முடங்கி இருந்தாலும் சுகாதார பணியாளர்கள், போலீஸார் போல் தூய்மை பணியாளர்களும் தங்கள் பணிகளை செய்து வருகிறார்கள்.
லாக்டவுனுக்கு பிந்தைய நிதி நெருக்கடி.. பெரும் அச்சத்தில் வர்த்தகர்கள்- சிறு வியாபாரிகள்
உபகரணங்கள்
இவர்களுக்கு நாள்தோறும் ஷிப்ட் அடிப்படையில் பணி வழங்கப்படுகிறது. இவர்களின் தேவைகள் என்ன, இவர்களுக்கு அரசு செய்துள்ள வசதிகள் சலுகைகள் போதுமானதா, கொரோனா சுத்த பணியில் ஈடுபட்டுள்ள இவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் முறையாக வழங்கப்படுகிறதா என்பதை அவர்களிடமே கேட்டுத் தெரிந்து கொள்வோம்.
கொரோனா
இதுகுறித்து சென்னையில் தூய்மை பணியாளர்களிடம் நமது ஒன் இந்தியா தமிழ் தளம் பேட்டி எடுத்தது. அப்போது அவர்கள் கூறுகையில் அரசு எங்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்துள்ளது. கொரோனாவுக்கு முன்பை விட தற்போது குப்பைகள் குறைந்து காணப்படுகின்றன. எங்களை மாதிரி வேலை பார்க்கும் நபர்களுக்கு கொரோனா நேரத்தில் மட்டும் இல்ல எப்போதும் கிளவுஸ், மாஸ்க், செருப்பு ஆகியவற்றை அரசு வாங்கிக் கொடுக்க வேண்டும்.
தன்னார்வலர்கள்
நாங்கள் பணியாற்றுவதை நீங்கள் பார்க்கிறீர்கள். பொதுமக்கள், தன்னார்வலர்கள் எங்களுக்கு மாஸ்க் இவற்றையெல்லாம் வாங்கித் தருகிறார்கள். ஆனால் எங்களை வைத்து வேலை வாங்கும் அரசாங்கம் இதை செய்ய வேண்டும். இப்போது அரசு வாங்கி கொடுப்பதை போல் எப்போதும் கொடுக்க வேண்டும். முக்கியமாக செருப்பு வாங்கி தர வேண்டும்.
வீடு திரும்பும்போது
நாங்கள் பணி முடித்துவிட்டு வீடு திரும்பும்போது எங்கள் வீடுகளில் வாசலில் ஒரு பக்கெட் தண்ணீர், கை கழுவ சோப்பு வைத்துவிடுவார்கள். அவற்றால் நாங்கள் கை, கால்களை கழுவி கொண்டுதான் உள்ளே செல்வோம். போட்டுக் கொண்டிருக்கும் துணிகளை அப்படியே கழற்றி ஓரமாக வைத்து விட்டு குளிக்க சென்றுவிடுவோம். ஒப்பந்தத் தொழிலாளியாக பணியாற்றி வரும் எங்களை நிரந்தர பணியாளர்களாக்க வேண்டும் என்றனர்.
சுத்தமாக
இதுகுறித்து அதிகாரிகள் நமக்கு அளித்த பேட்டியில் சென்னையில் மண்டலம் 7-இல் கொரோனா பாதிப்பு இல்லை. இதற்கு காரணம் அதிகாரிகள் முதல் பணியாளர்கள் வரை அளித்த பங்களிப்பே ஆகும். தூய்மை பணியாளர்களுக்கு போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளது. சுத்தமாக வேலை செய்ய அவர்களுக்கு சோப்பு வழங்கப்பட்டுள்ளது. கிளவுஸ், முகமூடி கொடுக்கப்பட்டு காலை, மதியம் உணவும் வழங்கப்படுகிறது. அவர்கள் உயிரை பணயம் வைத்து இந்த நாட்டு மக்களுக்காக போராடி வருகிறார்கள் என்றார்.