திருப்பூர்SBIவங்கியில் பலகோடி ருபாய் நகை பணம் கொள்ளை?
SBI வங்கியில் பல கோடி ரூபாய் நகை பணம் கொள்ளை ?
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே எஸ்.பி.ஐ வங்கியின் ஜன்னல் கம்பியை உடைத்து உள்ளே சென்ற கொள்ளையர்கள், பல கோடி ரூபாய் மதிப்பிலான நகை பணத்தை கொள்ளை அடித்துச் சென்றிருக்கலாம் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த கள்ளிபாளையத்தில் பாரத ஸ்டேட் வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தை அடுத்து இன்று காலை வங்கிக்கு வழக்கம் போல் ஊழியர்கள் பணிக்குச் சென்றனர். அப்போது வங்கியின் லாக்கர்கள் உடைக்கப்பட்டு இருந்ததோடு அதில் வைக்கப்பட்டிருந்த நகை பணம் கொள்ளை போய் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனடியாக காமநாயக்கன் போலீசாருக்கு தகவலை தெரிவித்தனர். அங்கு சென்று போலீசார் மேற்கொண்ட விசாரணையில், வங்கி கட்டிடத்தின் பக்கவாட்டு ஜன்னல் கம்பிகளை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே சென்று கைவரிசை காட்டியது தெரியவந்தது.
போலீசாரிடம் சிக்காமல் இருக்க சிசிடிவி கேமராக்களை சேதப்படுத்திய கொள்ளையர்கள், அதனுடைய ஹார்டுடிஸ்க்கையும் கையோடு எடுத்துச் சென்றுள்ளனர்.இதற்கிடையே எஸ்.பி திஷா மிட்டல், பல்லடம் டி.எஸ்.பி முருகவேல் ஆகியோர் வங்கியில் நேரடியாக பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இதே வங்கியில் ஜன்னலை உடைத்து கொள்ளை முயற்சி நடந்ததை அடுத்து, வங்கிக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சில நாட்களுக்கு முன்பு அந்த பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனை நன்கு அறிந்துக் கொண்டு கொள்ளையர்கள் வங்கியில் காவலாளி இல்லாத நேரத்தில் கைவரிசை காட்டி இருப்பது தெரியவந்துள்ளது.
பல கோடி ரூபாய் மதிப்பிலான நகை பணம் கொள்ளை அடிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் மூலம் தடயங்களை சேகரித்து வங்கி ஊழியர்கள் உள்ளிட்டோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.