இந்தியாவிலும் கொரோனா பரவுவதாக அச்சம் தனிவார்டுகளில்11பேர்?
இந்தியாவிலும் கொரோனா பரவுவதாக அச்சம்..! தனிவார்டுகளில் 11 பேர்.
சீனாவில் 81 பேர் உயிரிழக்க காரணமான கொரோனாவைரஸ் தொற்று, இந்தியாவிலும் பரவுவதாக அச்சம் ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து நாட்டின் 4 நகரங்களில் 11 பேர் தனி வார்டுகளில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
சீனாவில் இருந்து திரும்பியவர்களில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஒருவர், பீகார் மாநிலம் பாட்னாவில் ஒரு இளம்பெண் ஆகியோர் கொரோனாவைரஸ் தொற்றியதா என்ற சந்தேகத்தின் பேரில் தனி வார்டில் வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் தமக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும், அரசு மருத்துவர்கள் தம்மை கட்டாயப்படுத்தி தனிவார்டில் வைத்திருப்பதாகவும் பாட்னா இளம்பெண் செய்தியாளர்களிடம் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
அத்துடன், மும்பை மருத்துவமனையில் 5 பேரும், ஐதராபாத் அரசு மருத்துவமனையில் 4 பேரும் தனி வார்டில் வைத்து கண்காணிக்கப்படுகின்றனர்.
இதை அடுத்து இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்காக கண்காணிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
சீனாவில் இருந்து 137 விமானங்களில் வந்த 29 ஆயிரத்து 700 க்கும் அதிகமான பயணிகளை சோதித்ததில் யாருக்கும் நோய் அறிகுறிகள் காணப்படவில்லை என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, ஊகான் நகரில் இருந்து இந்தியர்களை அழைத்து வருவதற்காக டெல்லியில் ஏர் இந்தியா விமானம் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது. நேபாளத்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், இந்திய எல்லை மாவட்டங்களில் மருத்துவக் குழுக்கள் நியமிக்கப்பட்டு நிலைமை உன்னிப்புடன் கண்காணிக்கப்படுகிறது.
இந்த நிலையில் புத்தாண்டு விடுமுறையை அடுத்த மாதம் 2 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக சீன அரசு அறிவித்துள்ளது. தடுப்பு நடவடிக்கையாக திபெத்தில் உள்ள தலாய் லாமாவின் அரண்மனையை சீனா மூடி உள்ளது.
சுமார் 2,800 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், சீனாவுக்கு அடுத்தபடியாக தாய்லாந்து, அமெரிக்கா,தைவான், சிங்கப்பூர், ஜப்பான், தென் கொரியா, வியட்நாம் ஆகிய நாடுகளை சேர்ந்த மொத்தம் 47 பேருக்கு கொரோனா நோய் தொற்று பரவி உள்ளது.