3லட்சம் ரூபாய் கடனுக்கு27 லட்சம்ரூபாய் வட்டி வசூல்? ரயில்வேதுறை ஊழியர் கைது?
3 லட்சம் ரூபாய் கடனுக்கு 27 லட்சம் ரூபாய் வட்டி வசூலித்ததாக ரயில்வேத்துறை முன்னாள் ஊழியர் ஒருவர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
?????????
எத்தனை கடுமையான சட்டங்களை இயற்றினாலும், கந்துவட்டி ஒழிந்தபாடில்லை. அதனை மெய்ப்பிக்கும் விதத்தில் சென்னையில் ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டிருக்கும் கிருபாகரன், சென்னை அயனாவரத்தைச் சேர்ந்தவர். இவர் தென்னக ரயில்வேயில் ஊழியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
கடந்த 2010 ஆம் ஆண்டு பணியில் இருந்த காலத்தில் இவருக்கு பண நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. அதனால், தன்னுடன் பணிபுரிந்த சக ஊழியரான கமலநாதன் என்பவரிடம் 3 லட்சம் ரூபாய் பணத்தை, 10 சதவிகித வட்டிக்கு கடனாக கிருபாகரன் வாங்கியிருக்கிறார். அதற்கு ஈடாக வங்கியின் கணக்கு புத்தகம் மற்றும் வெற்று காசோலைகள், ஏடிஎம் கார்டுகள் என பலவற்றையும் வாங்கி வைத்துக் கொண்ட கமலநாதன், அதை வைத்து கடந்த 9 ஆண்டுகளாக, மாதம்தோறும் 30 ஆயிரம் ரூபாய் வட்டிப் பணத்தை மட்டும் வங்கியில் இருந்து எடுத்து வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் ஓய்வு பெற்ற கிருபாகரனுக்கு, முதல் தவணையாக மூன்றரை லட்சம் கிடைத்துள்ளது. முதல் வேலையாக அந்தப் பணத்தை எடுத்த கிருபாகரன், 9 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய 3 லட்சம் ரூபாய் கடனை வட்டியோடு திருப்பிக் கொடுத்துள்ளார். அதன்பின்னர், கணக்குப் புத்தகத்தை சரி பார்ப்பதற்காக வங்கிச் சென்றபோது, கிருபாகரனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவரின் வங்கிக் கணக்கில் இருந்து மேலும் 8 லட்சம் ரூபாய், கமலநாதனின் கணக்கு பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பதைக் கண்டு திகைத்துப்போய்விட்டார் கிருபாகரன். அது குறித்து விசாரித்த போதுதான், 3 லட்சம் ரூபாய் கடனுக்காக, இதுவரை 27 லட்சத்து 87 ஆயிரம் ரூபாயை கமலநாதன் வட்டியாக வாங்கியிருப்பது அவருக்கு தெரியவந்தது.
தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து காவல்துறையில் புகார் அளித்தார் கிருபாகரன். அதுகுறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், கடந்த 4ஆம் தேதி கமலநாதனை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ள கமலநாதன், தனக்கு ஜாமீனும், மனைவி அமலுவுக்கு முன் ஜாமீனும் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார். அது குறித்து விசாரித்த நீதிபதி, கமலநாதனுக்கு கண்டனம் தெரிவித்ததுடன், அவருக்கு ஜாமீன் வழங்க நிபந்தனையையும் விதித்தார். கமலநாதன் 8 லட்சம் ரூபாயும், அவரின் மனைவி அமுலு மூன்றரை லட்சம் ரூபாயும் சேர்த்து, வரும் ஜனவரி 3ஆம் தேதிக்குள் கிருபாகரனின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்தால் ஜாமீன் வழங்கப்படும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.