தமிழத்திலிருந்து காஷ்மீருக்கு ஆப்பிள் ஏற்றச்சென்ற 450க்கும் மேற்பட்ட சரக்கு வாகணங்களுக்கு சிக்கல்?
காஷ்மீரில் நிலவும் கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவால், நாமக்கல் மற்றும் தமிழகத்தில் இருந்து ஆப்பிள் லோடு ஏற்றச்சென்ற 450 க்கும் மேற்பட்ட சரக்கு வாகனங்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காஷ்மீர் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடுமையான குளிரும் பனிப்பொழிவும் நிலவுகிறது. இந்நிலையில் நாமக்கல் மற்றும் தமிழ்கத்தின் பல்வேறு இடங்களில் இருந்து ஆப்பிள் பழம் ஏற்றி வருவதற்காக 450 க்கும் மேற்பட்ட சரக்கு வாகனங்கள் கடந்த நவம்பர் மாதம் 10 ம் தேதி புறப்பட்டுச் சென்றன.
அங்கு சோபியான் பகுதியில் ஆப்பிள் லோடு ஏற்றி கடந்த 7 ம் தேதி புறப்பட்டபோது, கடும் பனிப்பொழிவால் ராணுவத்தினர் சரக்கு வாகனங்களை நிறுத்திவிட்டு, சுற்றுலா மற்றும் பயணிகள் வாகனங்களை மட்டும் சாலையில் செல்ல அனுமதிப்பதாக கூறப்படுகிறது.
ஜம்மு அருகே 70 கிலோமீட்டர் தொலைவில் லோக மண்டா என்ற இடத்தில் கடந்த 12 நாட்களுக்கும் மேலாக தமிழக லாரி ஓட்டுனர்கள் தவிப்பதாக அங்கு சிக்கியுள்ள ஓட்டுனர் செந்தில்குமார் செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும் குளிர் தாங்கமுடியாமல் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், ராணுவம் எப்போது இங்கிருந்து அனுப்பும் என்று தெரியாத நிலையில், போதிய உணவு பொருள் கிடைக்காமல் தவிப்பதாகவும் செந்தில் குமார் தெரிவித்தார்.
இதுபற்றி நாமக்கல்லைச்சேர்ந்த மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமியிடம் கேட்டபோது, 450க்கும் மேற்பட்ட சரக்கு வாகனங்கள் சென்றிருப்பதை உறுதிப்படுத்தினார். ஆனால் அங்கு சிக்கி தவிப்பது பற்றி தங்களுக்கு தகவல் இல்லை என்றும், டெல்லியில் உள்ள சங்க நிர்வாகிகளுடன் தொடர்பு கொண்டு பேசி வருவதாகவும் தெரிவித்தார்.