காவல்நிலையத்தில் களவு…கல்லாவில் கை வைத்த காவலர் யார்?
காவல் நிலையத்தில் களவு…கல்லாவில் கை வைத்த காவலர் யார்…?
வீட்டிலோ அல்லது கடைகளில் வைத்திருந்த பணம் திருடு போனால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம், ஒரு காவல் நிலையத்தில் பணம் திருடுப் போனால் யாரிடம் புகார் கொடுப்பது? சென்னையில் உள்ள காவல் நிலையம் ஒன்றில் லாக்கரில் இருந்த 10 ஆயிரம் ரூபாய் பணம் திருடு போக கடந்த 2 நாட்களாக பணியில் இருந்த போலீசாரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சென்னை அண்ணா சாலை காவல் நிலையத்தில் தான் இந்த திருட்டு சம்பவம் நடந்துள்ளது. இரண்டு தளங்கள் கொண்ட காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து போலீசார் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இதே காவல் நிலையத்தில் தான் திருவல்லிக்கேணி மகளிர் காவல் நிலையமும் செயல்பட்டு வருகிறது. காவல் நிலையங்களில் வழக்குகளுக்கு ஆகும் செலவுகளுக்காக கையிருப்பு பணம் வைத்திருப்பது வழக்கம்.
நிலையத்தின் தலைமை காவலர் பொறுப்பில் நியமிக்கப்பட்ட எழுத்தர் தான் அந்த கணக்குகளை கவனிப்பார். இதே போன்று அண்ணா சாலை காவல் நிலையத்தின் மகளிர் போலீசாருக்கான அலுவலகத்தின் லாக்கரில் வழக்கு செலவுகளுக்காக பணம் வைத்திருந்துள்ளனர்.
சனிக்கிழமை அன்று மகளிர் காவல் நிலையத்தின் எழுத்தர் அறையில் உள்ள லாக்கர் திறக்கப்பட்டு அதில் இருந்த 10 ஆயிரம் ரூபாய் களவாடப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
வெள்ளிக்கிழமை இரவு மகளிர் காவல் நிலையத்தில் ஜம்பு ராணி என்ற பாரா காவலரும், பிரேமா என்ற காவலரும் மட்டுமே பணியில் இருந்துள்ளனர். அவர்களை அழைத்து விசாரித்தும் பணம் திருடு போனது குறித்து தகவல் தெரியவில்லை.
இந்த தகவல் அண்ணா சாலை காவல் நிலையத்தில் இருந்த மற்ற பிரிவு போலீசாருக்கும் தெரிந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்துள்ளனர். ஆனால், காவல் நிலையத்தில் அந்த அறைக்கு முன்பிருந்த கேமரா காட்சிகள் தெளிவாக இல்லாததால் பணத்தை எடுத்தது யார் என்பது தெரியாமல் போலீசார் குழம்பியுள்ளனர்.
காவல் நிலையத்தில் புகுந்து வெளியில் உள்ள குற்றவாளிகள் யாரும் திருடி இருக்க வாய்ப்பில்லை என்பதால், அன்றைய தினம் இரவு பணியில் இருந்த போலீசார் மீது சந்தேகம் எழுந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து மகளிர் காவல் நிலைய எழுத்தரிடம் புகார் பெற்று, கடந்த இரண்டு நாட்களாக அதே காவல் நிலைய போலீசாரிடம் சத்தமில்லாமல் விசாரணை நடத்தி வருகின்றனர்.