சென்னை போலீசாருக்கு வருகிறது ஸ்மார்ட் பைக்?
சென்னை போலீசாருக்கு வருகிறது ஸ்மார்ட் பைக்…!
சென்னையில் போக்குவரத்து நெரிசல் உள்ள சாலைகளிலும் சுலபமாகச் சென்று ரோந்து பணிகளை மேற்கொள்ளும் வகையில் போக்குவரத்து போலீசாருக்கு ஸ்மார்ட் ரோந்து வாகனங்களை வழங்கப்பட உள்ளன.
சென்னை காவல் துறையில் பல்வேறு புதிய தொழில் நுட்பங்களையும், புதிய திட்டங்களையும் அமல்படுத்தி வருகின்றனர். அதே போல வளர்ந்த நாடுகளில் காவல் துறை பயன்படுத்தும் ரோந்து வாகனம் போன்று சென்னை போலீசாரும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
சென்னை போக்குவரத்து போலீசார் ரோந்து பணியை மேற்கொள்ளும் வகையில் இந்த ஸ்மார்ட் ரோந்து வாகனம் வாங்கப்படவுள்ளது. சென்னை மெரினா கடற்கரை உட்புறச்சாலை, பாண்டி பஜார் உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணிகளுக்கு இந்த ஸ்மார்ட் வாகனங்களை பயன்படுத்தவுள்ளனர்.
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்ட இந்த வாகனத்தை அதிகாரிகள் சோதனை ஓட்டம் செய்து பார்த்தனர். 6 மணி நேரம் சார்ஜ் செய்தால் சுமார் 40 கிலோ மீட்டர் வரை ஓட்டிச் செல்லும் வகையில் வாகனம் வடிவைக்கப்பட்டுள்ளது. மேலும் போலீசார் பயன்படுத்தும் வகையில் சைரன் ஒலி, வண்ண விளக்குகள் மற்றும் ஒலிபெருக்கியும் பொறுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் நெரிசல் மிகுந்த சாலையிலும், மக்கள் அதிகம் குவிந்திருக்கும் பகுதிகளிலும் சுலபமாக சென்று ரோந்து பணிகளை மேற்கொள்ள முடியும் என்கின்றனர் அதிகாரிகள். அசோக் லேலாண்ட் (Ash0k Leyland) மற்றும் ஷட்டல்ஸ் (ShuttlZ) ஆகிய நிறுவனங்கள் மூலம் தயாரிக்கப்பட்டுள்ள இந்த வாகனத்தின் விலை சுமார் ஒரு லட்ச ரூபாயாகும்.
முதற்கட்டமாக 10 ஸ்மார்ட் ரோந்து வாகனங்களை வாங்க திட்டமிட்டுள்ளதாகவும், இந்த ரோந்து வாகனங்கள் விரைவில் சென்னையில் உலாவரும் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.