சாமி கும்பிட வந்த பெண்ணை ? கண்ணத்தில் அறைந்த தீட்சிதர்?சிதம்பரம் நடராஜர் கோவிலில் பரபரப்பு ?
பெண்ணை அறைந்த தீட்சிதர் தலைமறைவு!
சிதம்பரம் நடராஜர் கோயில் வளாகத்தில் உள்ள முக்குறுணி விநாயகர் சன்னிதிக்கு அர்ச்சனை செய்ய வந்த பெண்ணை தீட்சிதர் கன்னத்தில் அறைந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரம் வ.உ.சி தெருவைச் சேர்ந்த செல்வகணபதியின் மனைவி லதா(51) ஆயங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தலைமை செவிலியராக பணியாற்றி வருகிறார். தனது மகன் ராஜேஷின்(21) பிறந்தநாளை முன்னிட்டு, நேற்று மாலை அவரது பெயரில் அர்ச்சனை செய்வதற்காக முக்குறுணி விநாயகர் சன்னிதிக்குச் சென்றுள்ளார். அர்ச்சனை செய்ய வேண்டும் என அங்கிருந்த தீட்சிதரிடம் தேங்காய், பழம் ஆகியவற்றைக் கொடுத்துள்ளார். பெயரைச் சொல்வதற்கு முன்னதாகவே அந்தத் தீட்சிதர் தேங்காயை மட்டும் உடைத்துக் கொடுத்துவிட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது.
அர்ச்சனை செய்யாமல் தேங்காயை மட்டும் உடைத்துக் கொடுத்தது குறித்து லதா தீட்சிதரிடம் கேட்டுள்ளார். அப்போது லதாவை தகாத வார்த்தைகளால் திட்டிய தீட்சிதர் கன்னத்தில் அறைந்ததால் கோயில் வளாகத்திலேயே சுருண்டு விழுந்துள்ளார்.
இதுகுறித்து அங்கிருந்தவர்கள் கேட்டபோது, அந்த பெண் என்னுடைய செயினை பறிக்க வந்ததால் தான் அறைந்தேன் என்று பொய் கூறியுள்ளார். தொடர்ந்து அங்கிருந்தவர்கள் தீட்சிதரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். தீட்சிதர் அறைந்ததால் பாதிக்கப்பட்ட லதா இதுகுறித்து சிதம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தொடர்ந்து அவர் அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
லதா கொடுத்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட தீட்சிதர் தர்ஷன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பெண் வன்கொடுமை தடை சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
”மன நிம்மதிக்காகவும், சாமி தரிசனம் செய்வதற்காகவும் தான் கோயிலுக்கு வருகிறோம், அடி வாங்குவதற்காக நாங்கள் வரவில்லை. இதுபோன்று இனி யாருக்கும் நடக்கக் கூடாது சம்பந்தப்பட்ட தீட்சிதர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று லதாவின் கணவர் வலியுறுத்தியுள்ளார்.