பேராசிரியர் மிரட்டுவதாக கூறி கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி?
பேராசிரியர் மிரட்டுவதாக கூறி கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி!
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவி, விடுதி அறையில் பினாயில் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி காஜாமலைப்பகுதியில் செயல்பட்டு வரும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில், ராஜபாளையத்தைச் சேர்ந்த மாணவி ஜெனிபர், மண்ணியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், விடுதி அறையில் அவர் பினாயிலை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதனை கண்ட சக மாணவிகள் அவரை மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதற்கிடையே, பேராசிரியர் ஒருவரின் தொடர் தொந்தரவு காரணமாகவே, மாணவி தற்கொலைக்கு முயன்றதாக மாணவர்கள் தெரிவித்தனர். மாணவ, மாணவிகளின் செல்போனில் உள்ள புகைப்படங்களையும், அவர்களது அந்தரங்க விவரங்களையும் அந்த பேராசிரியர் எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டல் விடுப்பதாகவும், அவர்கள் குற்றம்சாட்டினர். எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.