விழுப்புரம் திருச்சி சாலை ஓட்டல் சாம்பாரில் பல்லி கிடந்ததால் பரபரப்பு – 3 பேருக்கு சிகிச்சை
விழுப்புரத்தில் திருச்சி சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்று காலை சிலர், காலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஒருவரின் இலையில் ஊற்றப்பட்ட சாம்பாரில் பல்லி கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உடனே இதுபற்றி ஓட்டல் ஊழியர்களிடம் கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.
இதையறிந்ததும் அதே ஓட்டலில் உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்த விழுப்புரம் ஆசாகுளத்தை சேர்ந்த ஆனந்த் (வயது 49), கண்டாச்சிபுரம் திருமலைப்பட்டை சேர்ந்த கோவிந்தசாமி (60), குணசேகர் (35) ஆகியோருக்கு லேசான மயக்கம் ஏற்படுவதாகவும், வாந்தி வருவதாகவும் ஓட்டல் ஊழியர்களிடம் கூறியுள்ளனர்.
இதையடுத்து அவர்கள் ஒரு ஆட்டோவில் 3 பேரையும் ஏற்றிக்கொண்டு விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்கள் 3 பேரும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதனிடையே விழுப்புரம் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் ஸ்டாலின் ராஜரத்தினம் அந்த ஓட்டலுக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.
பின்னர், ஓட்டலுக்கு 2 நாள் விடுமுறை விடப்பட வேண்டும் என்று அதன் உரிமையாளருக்கு அறிவுறுத்தியதோடு ஓட்டலில் சமையல் செய்யும் இடம் மற்றும் ஓட்டலின் பின்புற பகுதியை சுகாதாரமாக வைத்திருக்கும்படி அறிவுறுத்தினார். மேலும் உணவு சமைக்கும்போது பாதுகாப்பான முறையிலும், சுகாதாரமான முறையிலும் தயார் செய்யும்படியும், தவறும்பட்சத்தில் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். இந்த சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.