இந்தியன் தாத்தா வராரு மறுபடியும் கதற விடப்போறாரு: நடிகர் சித்தார்த் பெருமிதம்
மும்பையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ‘இந்தியன் 2’ படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியீட்டு விழாவில் நடிகர்கள் கமல்ஹாசன், சித்தார்த், இயக்குநர் ஷங்கர் உட்பட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.
இப்படத்திற்காக கமல் எந்த அளவிற்குச் சிரமப்பட்டார் என்பதைக் கூறி ஆச்சர்யப்படுத்தியுள்ளார் இயக்குநர் ஷங்கர்.
படம் பற்றிப் பேசிய நடிகர் சித்தார்த், “தாத்தா வராரு, கதறவிடப் போறாரு,” என்றார்.
“21 வருடங்களுக்கு முன்பு இயக்குநர் ஷங்கர் எனக்கு ‘பாய்ஸ்’ படத்தில் வாய்ப்புக் கொடுத்தார். இப்போது ‘இந்தியன்2’ படத்தில் கமல்சாருடன் நடிப்பதற்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.
“இந்தப் படத்தின் பாத்திரத்தோடு எனது உண்மையான குணாதிசயமும் ஒத்துப்போகும். கமல் சாரின் மிகப்பெரிய ரசிகன் நான். அவரைப் பார்த்துதான் நான் வளர்ந்தேன். அவரோடு இணைந்து நடித்திருப்பது மகிழ்ச்சி. தாத்தா வராரு… கதறவிடப் போறாரு,” என்றார் சித்தார்த்.
இசையமைப்பாளர் அனிருத் பேசுகையில், “நான் சினிமாவுக்கு வந்த பத்து, பன்னிரெண்டு ஆண்டுகளில் ஷங்கர் சார், கமல் சார் போல இவ்வளவு கடின உழைப்புக் கொடுத்தவர்களை நான் பார்த்தது கிடையாது. நிச்சயம் அவர்களது உழைப்பு கடின வெற்றிபெறும்,” என்றார்.
“முதல் பாகத்தின் கதை தமிழ்நாட்டில் நடப்பதாக இருந்தது. ஆனால், ‘இந்தியன் 2’ கதை தமிழ்நாட்டில் மட்டுமன்றி மற்ற மாநிலங்களுக்கும் விரிகிறது.
“படத்தின் முடிவு ஒவ்வொருவரையும் யோசிக்க வைக்கும் என நினைக்கிறேன். படம் சிறப்பாக வந்துள்ளதற்கு முக்கியக் காரணம் கமல்ஹாசன்தான். முதல் பாகத்தில் 40 நாட்கள்தான் அவருக்கு அலங்காரம் (மேக் அப்) செய்யப்பட்டது.
“இரண்டாம் பாகத்தில் 70 நாட்கள் போட்டிருக்கிறோம். தினமும் 3 மணிநேரம் அலங்காரம் செய்யவேண்டும். அப்படி போட்டால், சரியாகச் சாப்பிட முடியாது.
“நீராகாரம்தான் ஸ்ட்ரா மூலமாக எடுத்துக்கொள்ள வேண்டும். படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன் கமல் வந்துவிடுவார். படப்பிடிப்பு முடிந்து நாங்கள் கிளம்பிவிடுவோம்.
“கடைசியாக அவர் கிளம்புவார். காரணம் அந்த அலங்காரத்தைக் கலைக்க அவருக்கு ஒரு மணி நேரம் பிடிக்கும். சவால்களைக் கடந்து சிறப்பாக நடித்துள்ளார்,” என நடிகர் கமல்ஹாசனை இயக்குநர் ஷங்கர் புகழ்ந்துள்ளார்.
‘இந்தியன் 2’ படம் ஜூலை 12 ஆம் தேதி திரைக்கு வருகிறது.