பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று பேசப்பட்ட நிலையில், பாஜக கட்சி தலைமை வழங்கும் பொறுப்பை ஏற்று பணி செய்வேன்: அண்ணாமலை தகவல்
சென்னை: பாஜகவின் நரேந்திர மோடி மூன்றாவது பிரதமராக ஞாயிற்றுக் கிழமை பதவியேற்றார். அவரது அமைச்சரவையில் தமிழ் நாட்டின் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று முன்பு பேசப்பட்டது.
அண்ணாமலை மத்திய அமைச்சரானால் பாஜகவை மாநில அளவில் கவனித்துக் கொள்ள வேறு தலைவர் நியமிக்கப்படலாம் என்று கூறப்பட்டது.
அமைச்சரவை பதவியேற்புக்கு முன்னர் பிரதமர் மோடி இல்லத்தில் நடைபெற்ற தேநீர் விருந்தில் அமைச்சராகப் பதவியேற்கவிருப்பவர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். அவ்வகையில் அண்ணாமலைக்கு அந்த விருந்துக்கு அழைப்பு விடுக்கவில்லை. தமிழ்நாட்டில் இருந்து எல்.முருகன் மட்டுமே பங்கேற்றார்.
இந்நிலையில், அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற ஊகச் செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அண்ணாமலை மறுப்புத் தெரிவித்து டெல்லியில் செய்தியாளர் கள் கேட்ட கேள்விக்குப் பதிலளித்துள்ளார்.
மேலும், தலைமையின் கட்டளைக்கேற்ப எனக்கு அளிக்கப்படும் பொறுப்பை ஏற்று அந்தப் பணியைச் செவ்வனே செய்வேன் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பாஜக தலைமையில் எட்டுக் கட்சிகள் கூட்டணி சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டன. இதில் 19 தொகுதிகளில் பாஜக நேரடியாக போட்டியிட்டது.
ஆனால், பாஜகவுக்கு அனைத்துத் தொகுதிகளிலும் மக்கள் தோல்வியையே பரிசாக அளித்தனர்.
தேர்தல் முடிந்ததும் பாஜகவின் தோல்விக்கு மாநிலத் தலைவர் அண்ணாமலைதான் காரணம். அதிமுகவுடன் கூட்டணி அமைத்து இருந்தால் 20 இடங்களிலாவது வெற்றி பெற்று இருக்கலாம் என்று முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் வெளிப்படையாக பேசத் தொடங்கியதாகவும் இது பாஜகவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியது. அதையடுத்து தமிழ் நாடு பாஜக தலைவர் கே.அண்ணாமலைக்கும் பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜனுக்கு இடையே பிளவு ஏற்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவி வருகிறது.
மக்களவைத் தேர்தலில் அண்ணாமலையால் தான் தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் பாஜக தோற்றது என்ற கருத்தை அண்ணாமலை ஆதரவாளர்கள் மறுத்துள்ளனர். மாறாக அண்ணாமலையால் தான் பாஜக தமிழகத்தில் கூடுதலான வாக்குகளைப் பெற்றுள்ளது என்று சமூக ஊடகங்களில் பேசி வருகின்றனர். மேலும், அவர்கள் தமிழிசை கட்சி விவகாரங்கள் குறித்துவெளியில் பேசி வருவதைக் கண்டித்துள்ளனர்.
அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டிருந்தால் குறைந்தது 35 தொகுதிகளையாவது கூட்டணி வென்றிருக்கும் என்று தமிழிசை சௌந்திரராஜன் கூறியுள்ளார். இந்தக் கூற்றை அண்ணாமலை ஆதரவாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.