மதுரை பாலமேடு செல்லாயி அம்மன் கோயில் உற்சவ விழா – ஆண்கள் மட்டும் பங்கேற்று பொங்கல் பானை சுமந்து ஊர்வலம்!
மதுரை பாலமேடு செல்லாயி அம்மன் கோயில் உற்சவ விழாவில், ஆண்கள் மட்டுமே
பங்கேற்று மண்பானையில் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
மதுரை மாவட்டம் பாலமேடு வடக்குவாசல் செல்லாயி அம்மன், வலம்புரி சக்தி விநாயகர் கோயில் பொங்கல் உற்சவம் கடந்த மே 31ஆம் தேதி துவங்கியது. நேற்று விளக்கு பூஜை நடந்தது. இதில், விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டதை தொடர்ந்து, அம்மன் கோயிலுக்கு பொங்கல் பானை புறப்பாடு நடந்தது.
இந்த உற்சவ பொங்கல் திருவிழாவில், அப்பகுதியை சேர்ந்த ஆண்கள் உடலில் சட்டை அணியாமல் ஜல்லிகட்டு நடைபெறும் மஞ்சமலை ஆற்றின் வழியாக, பாரம்பரிய முறைப்படி பெரிய மண்பானைகளை தலையில் சுமந்த படி செல்லாயி அம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர்.
பின்னர் அம்மன் திருக்கண் திறப்பு அலங்காரம், அபிஷேக ஆராதனைகள் நடந்தன. பக்தர்கள் பொங்கல் வைத்து,கிடா வெட்டி, மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு செல்லாயி அம்மனை வழிபட்டு சென்றனர். இதனையடுத்து நாளை (ஜூன் 9) வானவேடிக்கையுடன் பொதுமக்கள் பழக்கூடை ஊர்வலம் நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.