பாமக வேட்பாளர் தங்கர் பச்சானுக்கு கிளி ஜோசியம் பார்த்தவர் கைது – அதிரடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் : காரணம் என்ன?
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வரும் 19-ம் தேதி தொடங்கும் நிலையில், நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு மாநிலங்களிலும் பாஜகவின் NDA கூட்டணியும், எதிர்க்கட்சிகளின் INDIA கூட்டணியும் வேட்பாளர்களை அறிவித்து வருகிறது.
அதன்படி தமிழ்நாட்டில் பாஜக தலைமையிலான NDA கூட்டணியில் உள்ள பாமக சார்பில், கடலூர் தொகுதியில் பிரபல இயக்குநரும், நடிகருமான தங்கர் பச்சான் போட்டியிடுகிறார்.
இந்த சூழலில் இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் கடலூர் தென்னம்பாக்கம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டபோது, அங்கிருந்த ஜோசியர் ஒருவரிடம் கிளி ஜோசியம் பார்த்துள்ளார். அந்த ஜோசியரும், தங்கர் பச்சான் மனதுக்கு பிடித்தமாறு ஒரு செய்தியை கூறியுள்ளார். தங்கர் பச்சான் கிளி ஜோசியம் பார்த்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதையடுத்து இதுகுறித்து பலரும் பல வித கருத்துகளை தெரிவித்த நிலையில், ஜோசியம் பார்த்த ஜோசியரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்ததோடு, அவரிடம் இருந்து 4 கிளிகளை பறிமுதல் செய்தனர். வனவிலங்கு பாதுகாப்பு திருத்தச் சட்டத்தின் கீழ் பச்சைக்கிளியை வீட்டில் வளர்ப்பதோ, கூண்டில் அடைத்து வைத்து ஜோசியம் பார்ப்பதோ வனத்துறை சட்டப்படி குற்றம் எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.