அமைச்சரைவழிமறித்து புதியதமிழகம் கட்சியினர் சண்டை நாங்குநேரியில் பரபரப்பு


விண்மீன்நியூஸ் விரைவு செய்திகள்.
அமைச்சரை வழிமறித்து சண்டை… நாங்குநேரியில் நடைபெற்ற களேபரம்.
சென்னை: நாங்குநேரி தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜனை வழிமறித்து புதிய தமிழகம் கட்சி நிர்வாகி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
நாங்குநேரி, விக்ரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் அதிமுகவுக்கு ஆதரவு இல்லை என புதிய தமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமி நேற்று பிற்பகல் வெளிப்படையாகவே அறிவித்துவிட்டார். இந்நிலையில், அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனுக்கு ஆதரவு கோரி பிரச்சாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், கிருஷ்ணசாமி படம் தாங்கிய நோட்டீஸை விநியோகித்து அதிமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்தார்.
மூலக்கரைப்பட்டி பகுதியில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பிரச்சாரத்தில் ஈடுபடுவதை அறிந்து அங்கு வந்த, புதிய தமிழகம் கட்சி ஒன்றிய செயலாளர் தளவாய் பாண்டியன், உங்களுக்கு ஆதரவு இல்லை என அறிவித்தும், கிருஷ்ணசாமி படத்தை போட்டு துண்டறிக்கை எப்படி கொடுக்கலாம் என பிடித்துக்கொண்டார். கிராமமக்களை ஏமாற்றப்பார்க்கிறீர்களா என கேள்விகணைகளை தொடுத்தார்.
இதனால் பதில் சொல்ல முடியாமல் திகைத்த அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அங்கிருந்து புறப்பட முற்பட்டார். புதிய தமிழக கட்சியினர் அவரை விடுவதாக இல்லை. ஏன் கிருஷ்ணசாமி படத்தை போட்டு அதிமுக வேட்பாளருக்கு ஓட்டு கேட்டீர்கள் என மறுபடியும் வினவினர். அமைச்சருடன் இருந்த அதிமுக தொண்டர்கள், நோட்டீஸ் ஏற்கனவே அச்சடிக்கப்பட்டது, அதனால் கவனிக்கவில்லை என சமாதானம் செய்தனர்.
பின்னர் அங்கு வந்த காவல்துறையினர் புதிய தமிழகம் கட்சியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து செல்ல வைத்தனர். பின்னர் பிரச்சாரத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அங்கிருந்து சென்றுவிட்டார்.