எண்டோஸ்கோபி கேமரா மூலம், இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கத்திற்குள் சிக்கிய ஊழியர்களின் முதல் படம் (செவ்வாய்க் கிழமை 21-11-2023) இன்று வெளியீடு,


இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கத்திற்குள் சிக்கிய ஊழியர்களின் முதல் படம் செவ்வாய்க் கிழமை (21-11-2023) வெளியானது.
எஸ்டோஸ்கோபி கேமரா ஒன்று திங்கட்கிழமை அமைக்கப்பட்ட குழாய் வழியாக அனுப்பி வைக்கப்பட்டது. அதன் மூலம் எடுக்கப்பட்ட ஊழியர்களின் காணொளியை மீட்பாளர்கள் வெளியிட்டனர்.
அந்தக் காணொளியில் ஊழியர்கள் மஞ்சள், வெள்ளை நிற தலைக்கவசத்தை அணிந்துள்ளதைப் பார்க்க முடிந்தது. குழாய் வழியாக அனுப்பி வைக்கப்படும் உணவுகளை அவர்கள் பெறுவதும் காணொளி காட்டியது. மீட்புப் பணியாளர்களுடன் அவர்கள் உரையாடியதால் உறவினர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
சுரங்கத்தில் உள்ள 41 ஆண்களும் அடிக்கடி நடப்பது, அன்புக்குரியவர்களுடன் பேசுவது போன்ற நடவடிக்கைளில் ஈடுபட்டு நிலைமையைச் சமாளித்து வருகின்றனர் என்று த இண்டியன் எக்ஸ்பிரஸ் தகவல் தெரிவித்தது.
உத்தரகாண்டில் உத்தரகாசி மாவட்டத்தில் சில்கியாரா- தண்டல்கான் இடையே மலையைக் குடைந்து சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
சுரங்கப் பாதையின் ஒரு பகுதி எதிர்பாராதவிதமாக திடீரென சரிந்தது. இதில், வேலை செய்து கொண்டிருந்த 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.
160க்கும் மேற்பட்டோர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
பத்து நாள்கள் ஆன நிலையில் 41 ஆண்களும் தங்களை துடிப்புடனும் உற்சாகத்துடனும் வைத்திருக்க பல்வேறு வழிகளைக் கண்டறிந்து ஈடுபட்டு வருகின்றனர்.
ஊழியர்களின் மனநலத்தை அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட டாக்டர் அபிஷேக் ஷர்மா கண்காணித்து வருகிறார்.
“நாங்கள் தொழிலாளர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். யோகா, மெதுநடை ஆகியவற்றில் ஈடுபட யோசனை தெரிவித்துள்ளோம்,” என்று அவர் கூறியுள்ளார்.
சுரங்கத்திற்குள் சிக்கியவர்களில் கப்பார் சிங் நெகியும் ஒருவர். 41 ஆண்களில் அவர் ஆக வயதானவர். அவர் அனைவரையும் நம்பிக்கையோடு வைத்துள்ளார் என்று த இண்டியன் எக்ஸ்பிரசுக்கு அளித்த பேட்டியில் டாக்டர் அபிஷேக் தெரிவித்துள்ளார்.
இதுவரை, அவல், கொண்டைக்கடலை மசாலா, உலர் பழங்கள் ஆகியவற்றுடன் அவர்கள் உயிர் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் ஆறு அங்குல குழாய் ஒன்று இடிபாடுகளுக்குள் திங்கட்கிழமை நுழைக்கப்பட்டது. அதன் வழியாக வாழைப்பழம், ஆப்பிள், தாலியா, கிச்சடி போன்ற உணவுகளையும் அனுப்ப நிர்வாகம் ஏற்பாடுகளை செய்து வருகிறது.
விரைவில் கைபேசி மற்றும் மின்னேற்றி சாதனங்களும் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படவிருக்கிறது. இதனால் அவர்கள் இன்னமும் உற்சாகத்துடன் இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.