வருமானவரியை குறைக்கும் வழிகள்,வாடகை முதல் நன்கொடை வரை
விண்மீண்நியூஸ்:
வாடகை முதல் நன்கொடை வரை… வருமான வரியை குறைக்கும் வழிகள்!
நம்மில் மாதச் சம்பளம் வாங்கும் பலரும், ஒவ்வொரு மாதமும் கையில் பணம் கிடைத்தவுடன் வீட்டு வாடகைக்கு, மளிகைப் பொருள்களுக்கு, வாங்கிய கடனுக்கு என எது எதற்கு எவ்வளவு கொடுக்க வேண்டுமோ, அதை மறக்காமல் கொடுத்துவிடுவோம். அந்தச் சம்பளத்தின் மூலம் வருமான வரியிலிருந்து கிடைக்கும் சலுகைகளால் நாம் சரியான முறையில் பயனடைகிறோமோ என்றால், `இல்லை’ என்றுதான் கூற வேண்டும்.
வருமான வரி
10,000 ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை என யார் எவ்வளவு சம்பாதித்தாலும், அனைவருமே கஷ்டப்பட்டுத்தான் சம்பாதிக்கின்றனர். என்னதான் சம்பாதித்தாலும் ஆண்டு இறுதியில் நம்மில் பலரையும் மிரட்டுகிறது வருமானவரி. இப்போது, ஆண்டு வருமானம் 2.5 லட்சம் ரூபாய் வரை வருமானவரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இருப்பினும், வருமானவரி என்றாலே ஒருசிலர், அலறி ஓடுகின்றனர்; என்ன செய்வதென்றே தெரியாமல் முழிக்கின்றனர். ஆனால், அரசுக்கு நாம் செலுத்தவேண்டிய வரிப்பணத்தைச் சேமிக்க பல வழிகள் இருப்பது பலருக்கும் தெரிவதில்லை. நாம் சேமிக்கும் அல்லது செலவு செய்யும் பணத்துக்கு, முறையாக ரசீதை எடுத்து வைத்திருந்தாலே போதும், வருமானவரியிலிருந்து தப்பித்துவிடலாம்.
வருமானவரியிலிருந்து தப்பிக்க சில வழிகள்!
வீட்டு வாடகைப் படி (House Rent Allowance)
வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வீட்டு உரிமையாளரிடமிருந்து மாதம்தோறும் வாடகைப் பணத்துக்கான ரசீதை வாங்கி, வீட்டு வாடகைப் படி (HRA) மூலம் வருமானவரி விலக்கைப் பெறலாம். மாத வாடகை 8,333 ரூபாய்க்கு அதிகமாக இருந்தால், வாடகை ரசீதுடன் வீட்டு உரிமையாளரின் பான் கார்டு எண்ணையும் அவசியம் சமர்ப்பிக்க வேண்டும். இதுவே 8,333-க்குக் குறைவாக இருந்தால், வீட்டு வாடகை ரசீது மற்றும் வீட்டு உரிமையாளரின் பெயர், முகவரி போன்ற விவரங்களையும் சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும். வீட்டு வாடகைப் படியைப் பொறுத்தவரை, 2,000 ரூபாய் வாடகை செலுத்தினால்கூட வருமானவரி விலக்கு பெற முடியும்.
குழந்தைகளுக்கான கல்விக் கட்டணப் படி (Children Education Allowance)
மாதத்துக்கு 100 ரூபாய் வீதம் தலா ஒரு குழந்தை என இரண்டு குழந்தைகளுக்கு கல்விக் கட்டண செலவிலிருந்து வரிவிலக்கு பெற முடியும். அதாவது, உங்களுக்கு இரண்டு குழந்தைகள் இருந்தால் அவர்களுடைய கல்விக் கட்டணத்துக்கு மாதம் 100 ரூபாய் வீதம், இரண்டு குழந்தைகளுக்கு ஆண்டு ஒன்றுக்கு 2,400 ரூபாய் வரை வரிவிலக்கு பெற முடியும்.
விடுதி வாடகைப் படி (Hostel Rent Allowance)
மாதம் 300 ரூபாய் வீதம் தலா ஒரு குழந்தை என இரண்டு குழந்தைகளுக்கு விடுதி வாடகைப் படி மூலம் வரிவிலக்கு பெற முடியும். அதாவது, உங்களுக்கு இரண்டு குழந்தைகள் இருந்து, அவர்கள் இருவரும் விடுதியில் தங்கி படித்துவந்தால், அதன் மூலம் மாதம் 300 ரூபாய் வீதம் இரண்டு குழந்தைகளுக்கு, ஆண்டுக்கு 7,200 ரூபாய் வரை வரிவிலக்கு பெற முடியும்.
போக்குவரத்துக்கான படி (Travel Allowance)
ஊழியர்களுக்கு, அவர்கள் பணிபுரியும் அலுவலகத்திலிருந்து வசிக்கும் வீடு வரை பயணிப்பதற்கான போக்குவரத்துப் படி வழங்கப்படுகிறது. இதன்மூலம் ஊழியர் ஒருவர் மாதம் தலா 1,600 ரூபாய் வரை வரிவிலக்கு பெற முடியும். மாற்றுத்திறன் படைத்த ஊழியர்கள், மாதம் தலா 3,200 ரூபாய் வரை வரிவிலக்கு பெறலாம்.
மருத்துவக் காப்பீடு (Health Insurance)
உங்கள் குழந்தைகளுக்கோ, பெற்றோர்களுக்கோ அல்லது உங்களுக்கோ ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுத்திருந்தால், ஆண்டு ஒன்றுக்கு 25,000 ரூபாய் வரை வரிவிலக்கு பெற முடியும். சீனியர் சிட்டிசன்கள், 30,000 ரூபாய் வரை வரிவிலக்கு பெறலாம்.
கல்விக் கடன் (Educational Loan)
கல்விக் கடன் வாங்கினால் வருமான வரிச் சட்டம் 80E பிரிவின் கீழ் வரிவிலக்கு பெற முடியும். உங்களுடைய மகன்/மகள் கல்விக்காக கடன் வாங்கியிருந்தால், நீங்கள் செலுத்தும் முழு வட்டியை மட்டுமே வருமானவரியிலிருந்து விலக்கு பெற முடியும். இது, கடன் வாங்கி எட்டு ஆண்டுகளுக்கு மட்டுமே பொருந்தும்.
நன்கொடை (Donation)
ஆதரவற்றோருக்கான ஆசிரமம், முதியோர் இல்லம், குழந்தைகள் காப்பகம் என நீங்கள் செலுத்திய நன்கொடைக்கான பணத்தை, வரிச்சலுகையின் மூலம் பெறலாம். ஆனால், நீங்கள் எந்த நிறுவனத்துக்கு எவ்வளவு நன்கொடை அளித்தீர்கள் என்பதற்கான ரசீதை முறையாகப் பெற்றிருக்க வேண்டும். அதனுடன் அந்த நிறுவனத்தின் பான் எண் அதில் குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதற்கான வரிவிலக்கை நீங்கள் பெற முடியும். நீங்கள் ஏதேனும் ஓர் அரசியல் கட்சிக்கு நன்கொடை அளித்திருந்தால்கூட வரிவிலக்கு பெறலாம். உங்களுடைய ஆண்டு வருமானம் மூன்று லட்சம் ரூபாயாக இருக்கும்பட்சத்தில், நீங்கள் ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை கொடுத்தால் வரிவிலக்கு முழுவதும் கிடைக்காது. ஆண்டு வருமானம் எவ்வளவு இருந்தாலும், அந்தத் தொகைக்கு 10 சதவிகிதம் மட்டுமே வரிவிலக்கு பெற முடியும்.
முதலீடு (Investment)
வருமானவரிச் சட்டம் பிரிவு 80
C-யின் கீழ் 1.5 லட்சம் ரூபாய் வரை வரிவிலக்கு பெறலாம். பி.பி.எஃப்., மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்தால், வரிவிலக்கு பெற முடியும். வருமானவரிச் சட்டம் பிரிவு 80CCD-ன் கீழ் தேசிய பென்ஷன் திட்டத்தில் 50,000 ரூபாய் வரை முதலீடு செய்து வருமானவரி விலக்கு பெறலாம்.
இதுமட்டுமல்ல நண்பர்களே, உங்கள் வருமானத்தில் தினப்படி, டூர் அலவன்ஸ், டிரான்ஸ்ஃபர் அலவன்ஸ் என சில படிகள்கூட வரிவிலக்கு பெறத்தக்கவை. அவற்றைக் கண்டுபிடித்துச் சேர்த்து வருமானவரி விலக்கு பெறலாமே. ஆகையால், வருமானவரியைக் கண்டு அஞ்சி ஓடாமல், நின்று நிதானமாக யோசித்து முடிவெடுங்கள்… பயனடையுங்கள்!❣❣❣❣❣❣❣❣❣❣
????விண்மீண்நியூஸ்???? விண்ணொளிநியூஸ்?winmeennews.com???