இளைஞர்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தைப் பேணி காத்திடும் வகையில், சைக்கிள் உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் – டிஜிபி சைலேந்திரபாபு
இளைஞர்கள் சைக்கிள் உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்; டிஜிபி சைலேந்திர பாபு*
இளைஞர்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தைப் பேணி காத்திடும் வகையில், சைக்கிள் உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு எப்பொழுதும் இளைஞர்களை ஊக்குவிப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர். அன்றாடம் ஜாகிங் செய்வது, ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வது, இளைஞர்களை ஊக்குவிக்க அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை பதிவு செய்வது என எப்பொழுதும் இளைஞர்களுக்குப் பக்கபலமாக இருந்து வருபவர். இன்றைய தினத்தில் 75 கிலோமீட்டர் சைக்கிள் பேரணியில் கலந்து கொண்ட சைலேந்திர பாபு இளைஞர்களுக்காக சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, தென் பிராந்திய ராணுவ சார்பில் 75 கிலோ மீட்டர் சைக்கிள் பேரணி நடத்தப்பட்டது. தென் பிராந்திய ராணுவத் தளபதி அருண், தமிழ்நாடு காவல் துறை இயக்குனர் சைலேந்திரபாபு மற்றும் ராணுவ அலுவலர்கள் பங்கேற்றனர். சென்னை போர் நினைவுச் சின்னத்தில் அதிகாலை 5 மணிக்குத் தொடங்கிய இப்பேரணி கிழக்கு கடற்கரைச்சாலையில் உள்ள முட்டுக்காடு வரை 75 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, “இளைஞர்கள் தங்கள் உடல்நிலையைப் பேணி காத்திடும் வகையில் சைக்கிள் பயணம் மேற்கொண்டு தங்கள் உடலை உறுதி செய்ய வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.