தூத்துக்குடி மாவட்டத்தில் லட்சக்கணக்கான வெளிநாட்டு பறவைகள் வரத்து அதிகரிப்பு✍️பொதுமக்களும் மீனவர்களும் மகிழ்ச்சி✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
வெளிநாட்டு பறவைகள் வரத்து அதிகரிப்பு*
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் கடற்கரையோர பகுதிகளில் நீர்வாழ் பறவைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. ஆண்டுதோறும் வெளிநாடுகளில் இருந்தும் பறவைகள் இனப்பெருக்கத்துக்காக தூத்துக்குடி மாவட்டத்துக்கு வருகின்றன. அதன்படி கடந்த ஆண்டுகளை விட, இந்த ஆண்டு அதிக அளவில் வெளிநாட்டு பறவைகள் வந்து உள்ளன. குறிப்பாக ரஷ்யா, கஜகஸ்தான், ஆஸ்திரேலியா பகுதிகளில் காணப்படக்கூடிய பறவைகள் அதிக அளவில் தூத்துக்குடிக்கு வந்து உள்ளன.
அதன்படி பொன்நிற உப்புக்கொத்தி, வெண்மார்பு உப்பு கொத்தி, அரிவாள் மூக்கு உள்ளான், சின்னமூக்கு உள்ளான், பேதை உள்ளான், மஞ்சள்கொத்தி உள்ளான், ஆற்றுமண்கொத்தி, பச்சைகால் உள்ளான், சங்கு வளை நாரை, கரண்டிவாயன், வெள்ளை அரிவாள் மூக்கன் உள்ளிட்ட பறவைகள் வந்து உள்ளன.
இதைத் தொடர்ந்து இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும் (சனிக்கிழமை) பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதனையொட்டி, மாவட்டத்தில் எந்தெந்த பகுதிகளில் பறவைகள் அதிகம் காணப்படுகிறது என்று ஆய்வு செய்யும் பணி நேற்று நடந்தது. மாவட்ட வன அலுவலர் அபிஷேக் டோமர், மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக வனச்சரகர் ரகுவரன் மற்றும் மும்பை நேச்சுரல் ஹிஸ்டரி சொசைட்டி தலைவர் பாலச்சந்திரன் தலைமையிலான குழுவினர் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்தனர். இதன் மூலம் அதிக அளவில் பறவைகள் வசிக்கும் பகுதிகளை அடையாளம் கண்டறிந்து உள்ளனர். இன்று காலை முதல் பறவைகள் ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், கல்லூரி மாணவர்கள் ஆகியோரை கொண்டு கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.