மோடி அரசுக்கு பொருளாதாரம் தெரியவில்லை கம்பெனி வரி குறைப்பால் பத்து பைசாவுக்கு பயனில்லை
மோடி அரசுக்குப் பொருளாதாரம் தெரியவில்லை! கம்பெனி வரி குறைப்பால் 10 பைசா பயனில்லை! – சு.சுவாமி அதிரடி!
அரசியல் அணு குண்டுகளைப் போடுவதில் சூப்பர் ஸ்டாரான சுப்ரமணியன் சுவாமி, தற்போது மீண்டும் ஒரு பெரிய அணு குண்டைப் போட்டு இருக்கிறார்.
மக்களால் ஓட்டு போட்டுத் தேர்ந்து எடுக்கப்பட்ட, மோடி அரசுக்கு பொருளாதாரம் என்றால் என்ன என்றே தெரியவில்லை என ஒரே அடியில் தன் கட்சி ஆட்களையே கவிழ்த்து இருக்கிறார்.
சுப்ரமணியன் சுவாமி தற்போது பாஜக கட்சியில் ஒரு ராஜ்ய சபா உறுப்பினராகப் பதவியில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் இன்று மதியம் டைம்ஸ் நவ் டிவி-க்கு கொடுத்த பேட்டியில் மேலே சொன்ன கருத்துக்களைச் சொல்லி பாரதிய ஜனதா கட்சியையே கடுப்பேற்றி இருக்கிறார்.
பொருளாதாரம் தெரியவில்லை என யாரை எல்லாம் நீங்கள் சொல்கிறீர்கள் என டிவி சேனலின் நெறியாளர் கேட்க “அரவிந்த் சுப்ரமணியம், ரகுராம் ராஜன், அருண் ஜெட்லி என யாருக்குமே பொருளாதாரம் என்றால் என்ன என்று தெரியவில்லை” என பதிலடி கொடுத்து இருக்கிறார்.
அத்தோடு விட்டிருந்தால் கூடப் பரவாயில்லை. சமீபத்தில் மறைந்த முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை தனியாகக் கட்டம் போட்டு திட்டித் தீர்த்து இருக்கிறார் நம் சுப்ரமணியன் சுவாமி.
“மோடி அரசின் 1.0-வில் நிதி அமைச்சராக இருந்த அருண் ஜெட்லிக்கு பொருளாதாரத்தின் ஏ பி சி டி (அடிப்படை) கூடத் தெரியாது. இந்த சிக்கல் இப்போதும் நம் இந்தியாவில் தொடர்ந்து கொண்டு இருக்கிறது” எனத் தன் கட்சிக்காரர்களையே, போட்டுப் பிளந்து எடுத்து இருக்கிறார் சுப்ரமணியம் சுவாமி.
சரி இப்போது மத்திய நிதி அமைச்சராக இருக்கும் நிர்மலா சீதாராமனிடம் நீங்கள் என்ன பிரச்னையைப் பார்க்கிறீர்கள்..? எனக் கேட்க “அவர் நிதி அமைச்சர் பதவிக்கு வந்து கொஞ்ச காலம் தான் ஆகிறது. அவரின் நடவடிக்கைகள் எதுவும் இந்தியப் பொருளாதாரத்தின் மேக்ரோ பிரச்னைகளை சரி செய்யும் விதத்திலான நடவடிக்கைகளாக இல்லை” என க்ளீன் போல்டாக்கி இருக்கிறார் பா.ஜ.க மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி.
மேலும் “திடீரென்று 1.4 லட்சம் கோடி ரூபாயை கார்ப்பரேட் வரிச் சலுகை வழியாக துடைத்து எறிந்து இருக்கிறார். இது எந்த ஒரு திட்டத்திலும் சொல்லப்படாத நடவடிக்கை” என நிர்மலா சீதாராமனை தனியாக வறுத்து எடுத்து இருக்கிறார் பாஜக தலைவர் சுப்ரமணியன் சுவாமி.
இந்த நடவடிக்கைகள் எல்லாம் இந்தியப் பொருளாதாரத்தின் மேக்ரோ பொருளாதார பிரச்னைகளைத் தீர்க்கப் பயன்படாது எனச் சொல்லி இருக்கிறார்.
சரி இப்போது என்ன தான் பிரச்னை எனக் கேட்டால் “இந்தியப் பொருளாதாரத்தில் தேவை மிகக் குறைவாக இருக்கிறது, இந்த நேரத்தில் அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இப்படி ஒரு பெரிய வரிச்சலுகையைக் கொடுத்தால், கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை அதிகரித்து சப்ளையைத் தான் மேலும் அதிகப்படுத்துவார்கள்.
ஆக தேவை அதிகரிக்கவில்லை தானே..?” என மீண்டும் கேள்வி எழுப்பி இருக்கிறார் சுப்ரமணியன் சுவாமி.
“உண்மையாகவே மோடி அரசுக்கு இந்திய பொருளாதாரத்தில் தேவையை அதிகப்படுத்த நினைத்து இருந்தால், அவர்கள் வருமான வரியைத் தான் முழுமையாக ஒழித்து இருக்க வேண்டும்.
அது தான் இந்திய பொருளாதாரத்தின் தேவையை அதிகப்படுத்தி இருக்கும், அதிகப்படுத்த உதவும்” என ஒட்டு மொத்த பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் தொடங்கி, தலைவர்கள் வரை அனைவருக்கும் ஆப்படித்து இருக்கிறார் சுப்ரமணியன் சுவாமி.
அனேகமாக ஒட்டு மொத்த பாஜகவும் சு.சுவாமியின் பேச்சுக்கு எப்படி பதில் கொடுப்பது என ஆடிப் போய் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.