தமிழகத்தில் தேர்தல் திருவிழா,உள்ளாட்சித் தேர்தலில் களமிறங்கும் விஜய் ரசிகர்கள்; பல்ஸ் பார்க்கும் விஜய்✍️முழுவிவரம்- விண்மீன் நியூஸ்
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலில் களமிறங்கும் விஜய் ரசிகர்கள்;
பல்ஸ் பார்க்கும் விஜய்!*
தேர்தல் திருவிழா வந்துவிட்டாலே, அரசியல் கட்சிகளின் தொண்டர்கள் மட்டுமின்றி சில நடிகர்களின் ரசிகர்களும் ஆர்வமாகிவிடுகின்றனர். ரஜினி புலி வருது கதையாக அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்லிக்கொண்டிருந்த வரை அவரது ரசிகர்கள் ஒவ்வொரு தேர்தல்களிலும் தாங்கள் போட்டியிடலாமா? எனத் தலைமையை நச்சரித்து வந்தனர். ரஜினி முழுமையாக ஒதுங்கிவிட, தற்போது விஜய் ரசிகர்கள் களத்தில் இறங்கிவிட்டனர். ஏற்கெனவே கடந்த 2019-ல் நடைபெற்ற 28 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் விஜய் ரசிகர்கள் சுயேச்சையாகப் போட்டியிட்டு சில கிராம பஞ்சாயத்து கவுன்சிலர் இடங்களைப் பிடித்திருக்கிறார்கள். அப்போதே அரசியல் கட்சிகள் அதனை வியந்து பார்த்தனர். இந்நிலையில், வருகிற அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 15-ம் தேதி தொடங்கி, வரும் 22-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் மீண்டும் போட்டியிட விஜய் ரசிகர்கள் முடிவெடுத்திருப்பதுதான் கவனிக்கப்பட வேண்டியது.
விஜய் அனுமதி கொடுத்ததன் பின்னணி குறித்து விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மத்தியில் விசாரித்தோம். “கடந்த 17-ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று சென்னையை அடுத்த பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில், இயக்கத் தலைவர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் 20 மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். தற்போது தேர்தல் நடக்கும் 9 மாவட்டங்களிலும் விஜய்க்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள், அதனால் அந்தப் பகுதியில் செல்வாக்கும் உள்ளதால் போட்டியிடுவது என முடிவெடுக்கப்பட்டது. அதனை புஸ்ஸி ஆனந்த் உடனடியாக விஜய் கவனத்துக்கு எடுத்துச்சென்றார். ’யோசித்துச் சொல்கிறேன்’ என்று மட்டுமே விஜய் ரிப்ளை கொடுத்தார். பிறகு அவரே புஸ்ஸி ஆனந்திடம் பேசி தனது ஒப்புதலைக் கொடுத்துவிட்டார். ஏற்கெனவே கடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டதையும், வென்றதையும் விஜய் எண்ணிப்பார்த்து ஒப்புதல் கொடுத்திருக்கலாம். தேர்தல் பிரசாரத்தில் தான் கலந்துகொள்ள மாட்டேன் என்று கட் அண்ட் ரைட்டாகச் சொல்லிவிட்ட விஜய், தனது புகைப்படத்தையும், இயக்கத்தின் கொடியையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டார். ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது 20 நபர்களாவது போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர். அந்த வகையில், 200-க்கும் மேற்பட்டோர் களத்தில் இறங்கத் தயாராகிவிட்டனர். ரஜினி ரசிகர்கள் எப்படி அவரை அரசியலுக்கு இழுத்தார்களோ அதேபோல் நாங்கள் விஜயை அரசியலுக்கு இழுக்கிறோம். ரஜினி மாற்றி மாற்றிப் பேசி இறுதியில் ஜகா வாங்கிவிட்டார். ஆனால், விஜய் இதுவரை எங்களிடம் தனிப்பட்ட முறையில்கூட அரசியலுக்கு வருவதாகச் சொல்லவில்லை.
விஜய் தந்தை எஸ்.ஏ.சி-க்கும், விஜய்க்குமே கடந்த பல ஆண்டுகளாக பேச்சுவார்த்தையில்லை. எஸ்.ஏ.சி விஜய் பெயரைப் பயன்படுத்தி கட்சித் தொடங்கியபோதும் அதனை விஜய் ஏற்கவில்லை. தற்போது தேர்தல் வந்துவிட்டதால் சும்மா ஒரு கூட்டத்தைக் கூட்டிவைத்துக்கொண்டு, விஜயின் பாப்புலாரிட்டியைப் பயன்படுத்தி சிலரைப் போட்டியிட வைக்கலாம் என எஸ்.ஏ.சி நினைத்திருந்தார். அதற்குத்தான் முந்திக்கொண்டு விஜய் தனது பெயரை, போட்டோவை, கொடியை எஸ்.ஏ.சி பயன்படுத்தக் கூடாது என அறிக்கை வெளியிட்டார். அது எஸ்.ஏ.சி-க்கான அறிக்கை மட்டுமே தவிர, அவரது உண்மையான ரசிகர்களுக்கானது இல்லை. மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சித் தலைவர் என நான்கு பதவியிடங்களுக்கும் வேட்பாளர்கள் போட்டியிட இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்குத்தான் அதிக நபர்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்கிறார்கள். நிச்சயம், அரசியல் கட்சிகள் திரும்பிப் பார்க்கும் அளவுக்கு வெற்றியைப் பெறுவோம். அதேநேரம், ஒருபோதும் விலை போய்விடக்கூடாது என்றும் விஜய் கண்டிஷன் போட்டிருக்கிறார். மறைமுகத் தேர்தல் நடக்கும்போது விஜய் மக்கள் இயக்க நிர்வாகியின் ஒரு ஓட்டு தேவைப்படும் சூழல் உருவானால், நல்லவர்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்றும், அப்படியொரு சம்பவம் நடந்தால் தன்னிடம் கலந்து பேசி முடிவெடுக்க வேண்டும் என்றும் விஜய் தரப்பில் கூறப்பட்டுள்ளது” என்று முடித்தனர்.
விஜய் மக்கள் இயக்க காஞ்சிபுரம் மாவட்டப் பொறுப்பாளரும், காஞ்சிபுரம் மாவட்ட இளைஞரணித் தலைவருமான ஈ.சி.ஆர் சரவணனிடம் பேசினோம். “காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மட்டும் 30-க்கும் மேற்பட்டோர் தேர்தலில் போட்டியிட உள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், ஏனாத்தூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடும் காஞ்சிபுரம் மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் கே.பி.ஆனந்த் இன்று காலை (20.9.21) தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். இவர் போல இன்னு
ம் ஏராளமானோர் போட்டியிட ஆர்வமாக உள்ளனர். கண்டிப்பாக வெற்றியும் பெறுவோம்” என்றார்.
விஜய்க்கு நெருக்கமான நண்பர் ஒருவர் நம்மிடம், “முந்தைய ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விஜய் என்கிற பிராண்டை முன்னிருத்தாமல் போட்டியிட்டே சில இடங்களில் வென்றுள்ளனர். இம்முறை விஜய் படம், இயக்கக் கொடி எல்லாவற்றையும் பயன்படுத்த அனுமதி கிடைத்திருப்பதே ரசிகர்களை துள்ளிக்குதிக்க வைத்துள்ளது. தமிழ் திரையுலகிலேயே அதிக ரசிகர் பட்டாளம் விஜய்க்குதான் உள்ளது. சாதாரண ஐ.டி ரெய்டு நடந்ததற்கே லட்சக்கணக்கில் ரசிகர்கள் திரண்டுவிட்டனர். அதுமட்டுமின்றி, விஜய் படங்கள் குடும்பத்துடன் ரசிக்கும் வகையில் இருப்பதால் பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் மத்தியிலும் விஜய்க்கு வரவேற்புள்ளது. எல்லோருமே நடிகர்களை ரசிப்பார்கள், ஒரு பொது இடத்துக்கு வந்தால் காண்பதற்கு குவிவார்கள். ஆனால், அதெல்லாம் ஓட்டுக்களாக மாறுமா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி. இந்த உண்மையைத் தெரிந்துகொண்டதால்தான் ரஜினி எஸ்கேப் ஆகிவிட்டார். ரஜினியின் கணக்கை விஜய் அறிந்தே வைத்திருக்கிறார்.
அதேசமயம், கமல் சென்று வகையாக மாட்டிக்கொண்டதையும் விஜய் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார். ரஜினிக்கு எப்படி பலரும் பில்டப் கொடுத்தார்களோ, அதேபோல்தான் விஜய்க்கும் பில்டப் கொடுக்கிறார்கள். கோடிக்கணக்கில் ரசிகர்கள் இருந்தாலும், அவர்கள் மட்டும் ஓட்டுப்போடுவதால் எந்தப் பயனுமில்லை. ரசிகர்கள் அல்லாத பொதுமக்களையும் வாக்களிக்க வைப்பதுதான் குதிரைக்கொம்பு! எப்போதுமே சிறியதில் இருந்து தொடங்க வேண்டும் என்பதற்காக, முதலில் வெறும் 9 மாவட்டங்களில் நடக்கும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனது இயக்க நிர்வாகிகள் போட்டியிட பச்சைக்கொடி காட்டியிருக்கிறார். இது பல்ஸ் பார்க்கும் தேர்தல். இதில் கிடைக்கும் ரிசல்டைப் பொறுத்து அடுத்து வரும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தலிலும் விஜய் தனது இயக்க நிர்வாகிகளை களமிறக்குவார். படிப்படியாக இந்த ப்ராசஸ் நடக்கும். நேரடி அரசியல் வருகையை விஜய் தான் அறிவிக்க வேண்டும்” என்றனர்.