வீட்டுக்குவந்த காட்டுயானை நீலகிரியில் பரபரப்பு
✍✅நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள பாடந்துறை பகுதியில் பொன்வயல் என்ற கிராமம் உள்ளது. இங்கு ஜெயலட்சுமி என்பவர் தனது தாய் மாதவி மற்றும் சித்தப்பா மகன் அரவிந்தன் ஆகியோருடன் வசித்து வருகின்றார்.
இவரது வீட்டிற்கு நேற்று நள்ளிரவில் வந்த ஒற்றை யானை வீட்டை முழுவதுமாக இடித்துச் சேதப்படுத்தி உள்ளது. மேலும், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் இதே யானை அந்த வீட்டின் ஒரு பகுதி சுவரை இரவு நேரத்தில் இடித்தது. அப்போது அந்த அறையில் இருந்த மாதவி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இந்நிலையில், நேற்று இரவு யானை மீண்டும் வீட்டைச் சேதப்படுத்திய போது, ஏற்கெனவே இந்த வீட்டின் ஒரு பக்கச் சுவரை யானை இடித்துத் தள்ளிய நிலையில் நேற்று இரண்டாவது முறையாக முழுவதுமாக சேதப்படுத்தி உள்ளதால் இவர்கள் தற்போது முழு வீட்டை இழந்துள்ளனர்.
இதனால் கூலி வேலை செய்து பிழைத்து வரும் ஜெயலலட்சுமி குடும்பத்தினர் தங்குவதற்கு இடம் இல்லாத நிலையில் தவித்து வருகின்றனர்.
கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக இப்பகுதியில் இரவு நேரத்தில் சுற்றி வரும் ஒற்றைக் காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.