சென்னை :விழுப்புரத்தில் புதிதாக துவங்கப்பட்டுள்ள, ஜெயலலிதா பல்கலை, அரசாணையுடன் நிற்பதால், கல்லுாரிகளில் நிர்வாகப் பணிகள் துவக்கப்படாமல் உள்ளன.
வேலுாரை தலைமையகமாகக் கொண்டு, திருவள்ளுவர் பல்கலை செயல்படுகிறது. 2002ல் உருவாக்கப்பட்ட இந்தபல்கலையின் கீழ், வேலுார், திருவண்ணாமலை, திருப்பத்துார், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலுார், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள, 125க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் கலை, அறிவியல் கல்லுாரிகள் செயல்படுகின்றன.
அரசாணை
இந்நிலையில், திருவள்ளுவர் பல்கலையை இரண்டாகப் பிரித்து, விழுப்புரத்தை தலைமையிடமாக வைத்து, ஜெயலலிதா பெயரில் பல்கலை உருவாக்கப்படும் என, சட்டசபையில், முன்னாள் முதல்வர் இ.பி.எஸ்., அறிவித்தார்.இதற்கு, அப்போதைய எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் எதிர்ப்பு தெரிவித்தார். ‘வேலுாரில் இருந்து, திருவள்ளுவர் பல்கலையை பிரிக்க வேண்டாம். புதிதாக பல்கலை வேண்டு மானால் உருவாக்கிக் கொள்ளுங்கள்’ என்றார்.
ஆனால், விழுப்புரத்தை சொந்த மாவட்டமாகக் கொண்ட, அப்போதைய தி.மு.க., – எம்.எல்.ஏ., புதிய பல்கலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், சட்டசபை தேர்தலுக்கு முன், பிப்.,யில் நடந்த சட்டசபை கூட்டத் தொடரில், ஜெ., பல்கலைக்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.பின், இதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, சேலம், பெரியார் பல்கலை பேராசிரியர் அன்பழகன், ஜெயலலிதா பல்கலை துணை வேந்தராக நியமிக்கப்பட்டார்.விழுப்புரம் காந்தி சிலை அருகில், திரு.வி.க., சாலையில் உள்ள பழைய தாலுகா அலுவலக கட்டடம் சீரமைக்கப்பட்டு, அதில் ஜெயலலிதா பெயரிலான பல்கலையை, மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை திறந்து வைத்தார்.மேலும், 2021- – 22ம் கல்வி ஆண்டு முதல், கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள கல்லுாரிகள், இந்த பல்கலையில் மட்டுமே இணைப்பு அந்தஸ்து பெற வேண்டும்; வேறு பல்கலையில் பெறக்கூடாதுஎன, அரசாணையில் குறிப்பிடப்பட்டது.
பணிகள் முடக்கம்
தற்போது, ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதனால், ஜெயலலிதா பல்கலையில், நிர்வாகப் பணிகள் எதுவும் துவங்காமல், முடங்கிய நிலையில் உள்ளன.இந்நிலையில் தான், வழக்கம்போல திருவள்ளுவர் பல்கலை சார்பில், கல்லுாரிகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.ஏற்கனவே திருவள்ளுவர் பல்கலையின் இணைப்பு அந்தஸ்து பெற்றுள்ள விழுப்புரம், கடலுார், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள, கலை, அறிவியல் கல்லுாரிகள், நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை மற்றும் இணைப்பு அந்தஸ்து பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
எதிர்பார்ப்பு
எனவே, புதிய பல்கலை செயல்பட துவங்கும் முன்பே மூடப்படுமோ என, அ.தி.மு.க., வட்டாரங்கள் கலக்கம் அடைந்துள்ளன.’அ.தி.மு.க., ஆட்சியில் அறிவிக்கப்பட்டது என்பதால், ஜெயலலிதா பெயரிலான பல்கலையை முடக்க முயற்சி நடக்கிறது’ என, குற்றம் சாட்டப்
படுகிறது.இந்த விவகாரத்தில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த, உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி மற்றும் முதன்மை செயலர் கார்த்திகேயன், என்ன முடிவு எடுக்கப் போகின்றனர் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மாட்டுக் கொட்டகை!
ஜெயலலிதா பல்கலையின் அலுவலகம், விழுப்புரம் திரு.வி.க. சாலையில் உள்ள பழைய தாலுகா அலுவலக கட்டடத்தில், மாட்டுக் கொட்டகை போல காட்சியளிக்கிறது. அங்கு தான் துணை வேந்தர் மற்றும் சில பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.
அவசரமாக பல்கலை துவங்கப்பட்டதால், இன்னும் அங்கு உரிய உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்படவில்லை; போதுமான பணியாளர்கள் இல்லை.பல்கலைக்கான தனிப்பட்ட பாடத்திட்டம் உருவாக்கப்படவில்லை. என்னென்ன பாடங்கள், பட்டப் படிப்புகள் நடத்தப்பட உள்ளன என்பதும் தெளிவாகவில்லை. ஒவ்வொரு துறைக்குமான பேராசிரியர் நியமனம், ஆய்வகங்கள் என, எந்த கட்டமைப்பும் உரிய விதிகளின் படி மேற்கொள்ளப்படவில்லை.
இந்த நிலையில், அங்கு மாணவர் சேர்க்கை நடந்தால், அது மாணவர்களின் கல்வியை பாதிக்கும் என கூறப்படுகிறது. இந்த கட்டடத்தில் ஏற்கனவே மாலை நேர அரசு கல்லுாரியும், சட்ட கல்லுாரியும் தற்காலிகமாக இயங்கியது போல், இந்த பல்கலையையும் இயக்கலாம் என, ஒரு தரப்பில் தெரிவித்துள்ளனர்.
அதே நேரம், அ.தி.மு.க., ஆட்சியில் துவங்கியபல்கலை என்பதற்காக, பல்கலையின் பணிகளை கிடப்பில் போடாமல், தேவையான உட்கட்டமைப்பை வேகமாக கொண்டு வந்தால் மட்டுமே, இந்த கல்வி ஆண்டில் தவறினாலும், ஜனவரியிலாவது புதிய மாணவர்களை சேர்க்க முடியும் என்கின்றனர்