காலியாகும் சென்னை.. நேற்று ஒரேநாளில் 1.33 இலட்சம் பேர் சொந்த ஊர் பயணம்.!!*
மே மாதம் 10 ஆம் தேதி முதல் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் இரண்டாவது அலை பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இறப்பு எண்ணிக்கை விகிதமும் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழக அரசு முழு ஊரடங்கை அறிவித்துள்ளது.
வெளி மாவட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்வதற்காக இரண்டு நாட்கள் 24 மணி நேரமும் பேருந்துகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு ஆம்னி பேருந்துகள், அரசு பேருந்துகள், எஸ்.இ.டி.சி மற்றும் டி.என்.எஸ்.டி.சி பேருந்துகள் அதிகளவு இயக்கப்பட்டு வருகிறது
இந்நிலையில், நேற்று சென்னையில் இருந்து இயக்கப்பட்ட 3300 க்கும் அதிமான பேருந்துகளில், மொத்தமாக 1 இலட்சத்து 33 ஆயிரத்திற்கும் அதிகமானோர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இன்று பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ள நிலையில், இன்றுடன் தமிழகத்தில் பேருந்து சேவை நிறைவு பெறுகிறது.
தொலைதூர பயணங்கள் மேற்கொள்ளும் பேருந்துகள் அதிகபட்சமாக இரவு 9 மணிக்குள் தங்களின் பயணத்தை கோயம்பேட்டில் இருந்து நிறைவு செய்கிறது. இன்றைய நாளில் கோயம்பேட்டில் இருந்து சுமார் 4,225 பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்து துறை தகவல் தெரிவித்துள்ளது.
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.