மூணாறு நிலச்சரிவில் உயிரிழந்த கயத்தாறு தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு நிவாரணம்✍️ அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ வழங்கினார்✍️ முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
மூணாறு நிலச்சரிவில் உயிரிழந்த கயத்தாறு தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு நிவாரணம் அளிப்பு – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ வழங்கினார்.
மூணாறு அருகே ராஜமலை பெட்டிமுடியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில் கயத்தாறு தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியின் கீழ் நிவாரண நிதியை தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ வழங்கினார்.
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் ராஜமலை பெட்டிமுடி பகுதியில் ஆகஸ்ட் 6ஆம் தேதி பெய்த பலத்த மழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் அங்குள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் வேலை செய்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்களின் குடும்பத்தினர் மற்றும் அவர்களின் வீடுகளில் தங்கிருந்த உறவினர்கள் என மொத்தம் 82 பேர் சிக்கினர். அதையடுத்து நடைபெற்ற மீட்புப் பணியில் 63 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டதில் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பாரதி நகரைச் சேர்ந்த 33 பேரும் அடங்குவர். இந்த சம்பவத்தில் உயிரிழந்த கயத்தாறு பாரதி நகரைச் சேர்ந்த முருகன், ராமலட்சுமி, மற்றும் அவரது மகள் நிஷாந்தினி ஆகியோர் உயிரிழந்ததற்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதி தொகையாக தலா ரூ.3 லட்சம் வீதம் அவரது வாரிசுதாரர்களான சரண்யா மற்றும் அன்னலட்சுமி ஆகிய இருவருக்கும் தலா ரூ.4.50 லட்சம் வீதம் ரூ.9 லட்சத்திற்கான காசோலை மற்றும் தொழிலாளியான சரஸ்வதி உயிரிழந்ததற்கு அவரது வாரிசான விஜய்க்கு ரூ.3 லட்சத்திற்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் முன்னிலையில், அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ வழங்கினார்.தொடர்ந்து கயத்தாறு பேரூராட்சி சார்பில் பாரதி நகரில் அமைக்கப்பட்ட பொது குடிநீர் குழாயை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் திறந்து வைத்தார். பின்னர் அப்பகுதியில் மரக்கன்றுகளை நட்டினார். நிகழ்ச்சிகளில் கோட்டாட்சியர் விஜயா, வட்டாட்சியர் பாஸ்கரன், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவி சத்யா, கயத்தாறு பேரூராட்சி செயல் அலுவலர் ஜோதிபாசு, அதிமுக பொதுக்குழு உறுப்பினர் இராமச்சந்திரன், ஒன்றியச் செயலர் வினோபாஜி, கயத்தாறு ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் உறுப்பினர் பாலமுருகன், ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலர் செல்வகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.