சிறுமிகளுக்கு டார்ச்சர் நித்தி மீதுபாயும் கனடா சிஷ்யை
???நித்தி மீது பாயும் கனடா சிஷ்யை..! சிறுமிகளுக்கு டார்ச்சர் என புகார்
நித்தியானந்தாவிடம் சிஷ்யையாக சேர்ந்து பிடதி ஆசிரமத்தில் தங்கி இருந்த கனடா நாட்டை சேர்ந்த இளம் பெண் ஒருவர், நித்தியானந்தா தன்னை மூளை சலவை செய்து வைத்திருந்ததாகவும், அவரது குருகுலத்தில் சிறுவர், சிறுமிகள் கடுமையாக துன்புறுத்தப்படுவதாகவும் திடுக்கிடும் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
கனடா நாட்டில் இருந்து சாரா லேண்ட்ரி என்ற பெயரில் இந்தியா வந்து, கர்நாடக மாநிலம் பிடதியில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்தில் ருத்ரகன்னியாக துறவறம் பெற்ற பின்னர் ஸ்ரீ நித்தியா ஸ்வரூப்ப பிரியானந்தா..! என்று பெயர் சூட்டப்பட்டவர் தான் வீடியோ மூலம் நித்தியானந்தாவுக்கு எதிராக பாய்ந்துள்ளார்..!
நித்தியானந்தா சக்திமிக்கவர் என்று நம்பி இருந்த நேரத்தில், கடந்த 2017 ஆம் ஆண்டு தான் நித்தியானந்தாவால் திருவனந்தபுரத்தில் உள்ள குருகுலத்திற்கு செல்ல பணிக்கப்பட்டதாகவும், அங்குள்ள சிறுவர் சிறுமிகளுக்கு முகனூல், இன்ஸ்டாகிராம், டிவிட்டர் உள்ளிட்டவற்றில் கணக்கு ஆரம்பித்து அதனை பயன் படுத்துவது எப்படி என்று கற்றுக் கொடுக்கும் பணி தனக்கு வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ள சாரா, அங்கு அதிகாலையில் அழுது கொண்டிருந்த இரு சிறுமிகளிடம் விசாரித்த போது தான் அங்கு நடக்கின்ற கொடுமைகள் தனக்கு தெரிய வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
சிறுவர் சிறுமிகள் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டால் கடுமையான தண்டனை வழங்கப்படுவதாகவும், தனது மகனுக்கு நேர்ந்த கொடுமை குறித்து வினோதினி சங்கர் என்பவர் தனது முக நூலில் பதிவிட்டு இருப்பதையும் சுட்டிக்காட்டி உள்ளார்.
13 வயதுள்ள பெங்களூரை சேர்ந்த சிறுமி ஒருவர், 3 வது கண்ணை திறக்க பயிற்சி என்ற பெயரில் கடுமையான கொடுமைகள் நடப்பதால் தன்னை அழைத்து செல்லும் படி கண்ணீர் விட்டு கதறியதாக அந்த வீடியோவில் சாரா தெரிவித்துள்ளார்.
இந்த கொடுமைகள் குறித்து ரஞ்சிதாவிடம் கூறியதாகவும் அதற்கு அவர் எந்த ஒரு தீர்வும் காணவில்லை என்று கூறியுள்ள சாரா, நித்தியானந்தா தன்னை மூளை சலவை செய்து வைத்திருந்ததாகவும், அந்த சிறுவர் சிறுமிகளை சந்தித்து வந்தபின் அவரிடம் சக்தி இருப்பதாக கூறப்படுவது எல்லாம் பொய் என்பதை உணர்ந்து ஆசிரமத்தில் இருந்து வெளியேறி கனடாவுக்கு சென்று இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியதாக தெரிவித்துள்ளார் சாரா..!
இதற்கிடையே 2 வருடங்கள் கழித்து நித்தி மீது சாரா லேண்ட்ரி தெரிவித்துள்ள இந்த குற்றச்சாட்டு, மதத்தின் மீதான தாக்குதல் என்றும் நித்தியானந்தாவுக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதற்காகவும் அவர் இவ்வாறு கூறிவருவதாக நித்தியானந்தாவின் இணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தன் மீதான இது போன்ற குற்றச்சாட்டுக்களுக்கு தான் அஞ்சபோவதில்லை என்றும் தான் பனங்காட்டு நரி என்றும் நித்தி யூடியூப்பில் சூளுரைத்துள்ளார்.