இந்தியாவில் முதலீட்டுக்கு சிறந்த இடம் தமிழகம் -முதல்வர் எடப்பாடிபழனிச்சாமி?முழுவிவரம் – விண்மீன்நியூஸ்
இந்தியாவில் முதலீட்டுக்கு சிறந்த இடம் தமிழகம்: முதல்வர் எடப்பாடி
சென்னை: பொருளாதார ரீதியாக முதலீடு செய்வதற்கு உகந்ததாக உள்ள மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் உயர்ந்த இடத்தை பிடித்திருக்கிறது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமையோடு கூறியுள்ளார்.
கடந்த ஜூலை, ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் ஆகிய மாதங்களை உள்ளடக்கிய நடப்பு நிதி ஆண்டின் 2ஆம் காலாண்டில் மாநிலங்கள் வாரியாக முதலீடுகள் ஈர்க்கப்பட்டிருப்பது குறித்த புள்ளி விவரங்களை அண்மையில் ‘பிராஜக்ட் டுடே’ நிறுவனம் வெளியிட்டது.
அதில் 114 திட்டங்கள் மூலம் ரூ.35 ஆயிரத்து 771 கோடி முதலீடு ஈர்த்து சத்தீஷ்கார் மாநிலம் முதல் இடத்தையும் 132 திட்டங்கள் மூலம் ரூ.23 ஆயிரத்து 332 கோடி முதலீடுகளை ஈர்த்து தமிழகம் 2வது இடத்தையும் 287 திட்டங்கள் மூலம் ரூ.19 ஆயிரத்து 959 கோடி முதலீடு ஈர்த்து கர்நாடக மாநிலம் 3வது இடத்தையும், 229 திட்டங்கள் மூலம் ரூ.15 ஆயிரத்து 532 கோடி முதலீடுகளை ஈர்த்து குஜராத் 4வது இடத்தையும், 182 திட்டங்கள் மூலம் ரூ.15 ஆயிரத்து 4 கோடி ஈர்த்து மராட்டியம் 5-ம் இடத்தையும் பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதனை சுட்டிக்காட்டிய முதல்வர் பழனிசாமி, கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் தமிழகத்தின் பொருளாதாரத்தை சரியான பாதையில் கொண்டு வருவதற்கான எங்களுடைய உறுதியான முயற்சிகள் பலன் தருகின்றன என்று டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டு உள்ளார்.
“2ஆம் காலாண்டுக்கான முதலீட்டு எண்களை பார்க்கும் போது மகிழ்ச்சி அளிக்கிறது. இது எங்களுடைய முயற்சிகளை உறுதிப்படுத்தும் வகையில் தமிழகத்தை, இந்தியாவின் சிறந்த முதலீட்டு இடங்களில் ஒன்றாக கொண்டுள்ளது,” என்று அவர் பெருமையுடன் தெரிவித்தார்.