சாராயத்தில் சாயம் கலந்து குவார்ட்டராக மாற்றி விற்பனை ?போலி மது ஆலை கண்டுபிடிப்பு: வியாபாரி கைது; 2 பேர் தப்பி ஓட்டம்?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
சாராயத்தில் சாயம் கலந்து குவார்ட்டராக மாற்றி விற்பனை: ஆத்தூரில் போலி மது ஆலை கண்டுபிடிப்பு: வியாபாரி கைது; 2 பேர் தப்பி ஓட்டம்
?♈?ஆத்தூர்: ஆத்தூரில் போலி மது ஆலையில் சாராயத்தில் சாயம் கலந்து குவாட்டர் தயாரித்து பல்வேறு இடங்களில் விற்று வந்த வியாபாரி அதிரடியாக கைது செய்யப்பட்டார். சேலம் மாவட்டம் ஆத்தூர் மணிவிழுந்தான் காலனி பகுதியில் நேற்று மதியம், மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் சரவணன், கலால் இன்ஸ்பெக்டர் தென்னரசு தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த ஒரு ஆம்னி காரை மறித்து சோதனையிட்டனர். அதனுள் 3 கேன்களில் கள்ளச்சாராயம் இருந்தது. காரை ஓட்டி வந்த மணிவிழுந்தான்காலனி வசந்தபுரத்தை சேர்ந்த சந்திரசேகர்(53) என்பவரை மடக்கி பிடித்தனர்.அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில், புதுச்சேரி, விழுப்புரம் பகுதியில் இருந்து கள்ளச்சாராயம் கடத்தி வந்து கலர் சாயம் கலந்து குவாட்டராக தயாரித்து பல்வேறு இடங்களில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து சந்திரசேகரை, போலி மது ஆலையாக செயல்படுத்தப்பட்ட தோட்டத்து வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். அங்கு, மேலும் சில கேன்களில் கள்ளச்சாராயம் இருந்தது. ஏராளமான காலி குவார்ட்டர் பாட்டில்களும், மது கம்பெனி லேபிள்களும், சாராயத்தில் சாயம் கலந்து தயாரிக்கப்பட்ட 1,100 போலி குவார்ட்டர் பாட்டில்களும் இருந்தன. பாட்டிலில் மூடியை சரியாக மூட இயந்திரத்தையும் பயன்படுத்தி வந்தது தெரிந்தது. ஒட்டுமொத்தமாக 135 லிட்டர் சாராயம், 1,100 போலி மதுபாட்டில், இயந்திரம், 2 ஆம்னி கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அந்த வீட்டிற்கும் சீல் வைத்தனர். பிடிபட்ட சந்திரசேகரின் கூட்டாளிகளாக புதுச்சேரியை சேர்ந்த திரு, பெங்களூருவை சேர்ந்த நிர்மல் ஆகியோர் இருந்துள்ளனர். அந்த 2 பேரும் கள்ளச்சாராயம் கடத்தி வரவும், குவார்ட்டராக தயாரித்த பின் சந்து கடைகளில் விற்கவும் உறுதுணையாக இருந்துள்ளனர். அவர்கள் இருவரும் தலைமறைவாகி விட்டனர். ஆத்தூர், தலைவாசல், வாழப்பாடி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம் பகுதிகளில் இந்த போலி குவார்ட்டர் மது பாட்டில்களை சந்து கடைகள் மூலம் விற்பனை செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. சிக்கிய சந்திரசேகரை மதுவிலக்கு போலீசார் கைது செய்துள்ள நிலையில், தலைமறைவான இருவரையும் தேடி வருகின்றனர். சந்திரசேகருக்கு கொரோனா பரிசோதனை செய்துவிட்டு, சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். போலி மது ஆலை கண்டுபிடிக்கப்பட்ட இச்சம்பவம் ஆத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ₹80க்கு குவார்ட்டர் விற்பனைபோலி மது ஆலையில் சாராயத்தை கொண்டு தயாரிக்கப்பட்ட குவார்ட்டரை சந்து கடைகளில், 80க்கு சந்திரசேகர் விற்று வந்துள்ளார். வழக்கமாக டாஸ்மாக் மதுபான கடையில் 125க்கு விற்கப்படும் குவார்டரை, சந்து கடை நடத்தும் நபர்கள், 180முதல் 200 வரையில் விற்பார்கள். ஆனால், சந்திரசேகரிடம் ₹60க்கு போலி சரக்கை வாங்கி, அதே 120 முதல் 130 வரையில் விற்று வந்துள்ளனர் என்பது போலீஸ் விசாரணையில் தெரிந்துள்ளது. எங்கெல்லாம் இந்த போலி மதுபானம் விற்கப்பட்டது என சந்திரசேகரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.