தூத்துக்குடி பனிமய மாதா திருவிழாவில் பொதுமக்கள் பங்கேற்க வேண்டாம் – ஆயர் ஸ்டீபன் வேண்டுகோள்?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
தூத்துக்குடி பனிமய மாதா திருவிழாவில் பொதுமக்கள் பங்கேற்க வேண்டாம் – ஆயர் ஸ்டீபன் வேண்டுகோள்
✍தூத்துக்குடி பனிமயமாதா பேராலயம் உலகப்பிரசித்தி பெற்ற ஆலயமாகும். ஒவ்வொரு ஆண்டும் இங்கு 12 நாட்கள் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இதில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மற்றும் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளி நாடுகளில் இருந்தும் பல லட்சம் மக்கள், சாதி, மத பாகுபாடின்றி பங்கேற்பார்கள். இந்நிலையில், கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் இந்தாண்டு நடைபெறவுள்ள திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதியில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, கத்தோலிக்க ஆயர் ஸ்டீபன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது ஆயர் கூறியதாவது:
✍முத்துமாநகரின் குலதெய்வமாக கருதப்படும் பனிமய மாதாவின் பெருவிழா கடந்த 438 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் யாரும் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கொடிபவனி, திருவிருந்து விழா, நற்கருனை பவனி ஆகியவை நடைபெறாது. திருவிழா வருகிற 26ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 5ம் தேதி நிறைவு பெறுகிறது. ஆகஸ்ட் 5ஆம் தேதி பெருவிழா அன்று தூத்துக்குடி ஆயர் ஸ்டீபன், பாளையங்கோட்டை ஆயர் அந்தோணிசாமி, பணி நிறைவு பெற்ற ஆயர் ஜூடு பால்ராஜ் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
✍தினமும் காலை 5.30, 6.30, 7.30, 8.30 மணிக்கு திருப்பலி நடைபெறும். திருவிழா நிகழ்வுகள் தொலைக்காட்சி, மற்றும் யூடியூப் சானலில் நேரலையாக ஒளிபரப்பப்படும். கொரோனா நோயிலிருந்து மக்கள் விடுபடவும், தூத்துக்குடி நகரில் ஏற்படும் சிக்கல்கள் களையப்படவும் இந்த ஆண்டு இறைமக்கள் தங்களது இல்லங்களில் இருந்தே அன்னையிடம் மன்றாடி இறையாசி பெற வேண்டுகிறோம் என ஆயர் ஸ்டீபன் கூறினார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறும்போது,
✍”வரும் ஆகஸ்ட் மாதம் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் பனிமய மாதா ஆலய திருவிழாவில் மக்கள் கூடுவது தவிர்க்கப்பட வேண்டும்” என்று கூறினார். இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி , ஆயர் ஸ்டீபன், ஆலய பங்குத்தந்தை குமார் ராஜா, தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.