கார்வார் அருகே, சமோசா தொண்டையில் சிக்கி புத்தமத துறவி இறந்த சம்பவம் நடந்து உள்ளது.
உத்தர கன்னடா மாவட்டம் கார்வார் அருகே முண்டகோடு பகுதியில் திபெத்தியன் முகாம் உள்ளது. இந்த முகாமில் ஏராளமான புத்தமத துறவிகள் தங்கி இருந்து படித்தும், பூஜைகள் செய்தும் வருகின்றனர். இதுபோல இந்த முகாமின் எண் 2-ல் மங்கோலியா நாட்டை போகர்ஜாவாக்லன் தஸ்ஜோர்ஜா(வயது 18) என்பவரும் தங்கி இருந்து படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு போகர்ஜாவாக்லன் தனது அறையில் சமோசா சாப்பிட்டு கொண்டு இருந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக புத்தமத துறவிகள் போகர்ஜாவாக்லனை மீட்டு சிகிச்சைக்காக கார்வார் அரசு ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சமோசா தொண்டையில் சிக்கியதால் போகர்ஜாவாக்லன் இறந்து விட்டதாக கூறினார்கள். இதனை கேட்டு சக துறவிகள் அதிர்ச்சி அடைந்தார்கள். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த முண்டகோடு போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று போகர்ஜாவாக்லனின் உடலை பார்வையிட்டனர். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து முண்டகோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். சமோசா தொண்டையில் சிக்கி புத்தமத துறவி இறந்த சம்பவம் கார்வாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.