இந்தியாவில் கொரோனாவை விரட்ட 400 ஆடுகள் பலியீட்டு ஜார்கண்ட் மாநிலத்திலுள்ள கொடெர்மா மாவட்டத்தில் நூதன வழிபாடு?முழுவிவரம் – விண்மீன்நியூஸ்
எந்த சக்திக்கும் கட்டுப்படாத கொரோனாவை விரட்ட 400 ஆடுகள் பலி: ஜார்க்கண்ட் கிராமத்தினர் வழிபாடு
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கொரோனா வைரசை விரட்ட 400 ஆடுகள் பலியிட்டு பூஜைகள் நடத்தப்பட்டன. கொரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் மக்கள் பல்வேறு அச்சுறுத்தலுக்கு ஆளாகி உள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டும், இறந்தும் உள்ளனர். கொரோனா நோய்த்தொற்றை விரட்ட உலகளவில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில், கொரோனாவை அகற்றுவதற்காக இந்தியாவில் விநோத வழிபாடுகள் தொடங்கி உள்ளது.
அதன்படி, ஜார்க்கண்ட் மாநிலம் கோடெர்மா மாவட்டம் சந்த்வாரா அடுத்த ஊர்வா கிராமத்தில் அமைந்துள்ள தேவி கோவிலில், கொரோனாவை விரட்டவும், சுவாமியை சமாதானப்படுத்தவும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அப்போது, ஆடுகளும் கோழிகளும் பலியிடப்பட்டன. நேற்று மட்டும் 400 ஆடுகள், 100க்கும் மேற்பட்ட கோழிகள் ஒன்றாக வெட்டப்பட்டன. பின்னர், அவை மக்களுக்கு உணவாக சமைத்து பரிமாறப்பட்டன. இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், ‘கொரோனாவிலிருந்து கிராமம் விடுபட சிறப்பு பூஜைகளும், பலியிடுதலும் நடந்தன.
இவ்வாறு செய்வதால் கொரோனாவிலிருந்து நாங்கள் விடுவிக்கப்படுவோம் என்று நம்புகிறோம்’ என்றனர். கோயில்களில் ஆடுகளையும் கோழிகளையும் பலியிடும்போது சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கு சென்றதால், அவர்கள் கிராமத்தில் முகாமிட்டு மக்களிடம் கொரோனா நோய்தொற்றால் ஏற்படும் பாதிப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்து எடுத்துக் கூறினர்.