சங்கரன்கோவிலில் சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளிபடும் நிகழ்வு- திரளான பக்தர்கள் தரிசனம்
சங்கரன்கோவில்:சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலில் சங்கரலிங்கம், சங்கரநாராயணர், கோமதி அம்மன் ஆகிய 3 சன்னதிகள் அமைந்துள்ளன.இந்த கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடந்து வருகின்றன. இங்கு மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் 21, 22, 23 ஆகிய தேதிகளிலும் சூரியன் உதித்தவுடன் சூரிய ஒளி பக்தர்கள் சென்று தரிசனம் செய்யும் வாசல்கள் வழியாக நீள வாக்கில் சென்று, சிவலிங்கத்தின் வலப்புறமாக விழத்தொடங்கி சிறிது சிறிதாக நகர்ந்து சிவலிங்க திருமேனி முழுவதும் பரவும்.இந்த ஒளியானது சில சமயம் 4 நாட்கள் கூட விழும். இது போன்ற கோவில்கள் தமிழ்நாட்டில் சில உள்ளன. இது சூரியன் சிவலிங்கத்தை தரிசனம் செய்வதாக ஐதீகம். அதன்படி இந்த ஆண்டு 1-ம் நாளான இன்று சூரிய ஒளி சிவபெருமான் மீது விழும் நிகழ்வு நடந்தது. தொடர்ந்து கோவிலில் உள்ள மின்விளக்குகள் அணைக்கப்பட்டு சூரியன் சிவலிங்கத்தை வழிபடும் காட்சி தென்பட்டது. இதனை திரளான பக்தர்கள் கண்டு வழிபட்டனர். அப்போது சங்கரலிங்கத்திற்கும், சங்கரலிங்கம் சன்னதியில் வீற்றிருக்கும் சூரிய பகவானுக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.