தூத்துக்குடி:தூத்துக்குடி இனிகோ நகரை சேர்ந்தவர் பாஸ்கர் என்ற சுறா பாஸ்கர் (வயது 38). மீனவர். இவர் இனிகோநகர் பகுதி விஜய் ரசிகர் மன்ற நிர்வாகியாக உள்ளார். இவரது அண்ணன் பீட்டர் (48) மீனவர். இருவரது வீடும் அடுத்தடுத்து உள்ளது.நேற்று முன்தினம் நள்ளிரவில் பீட்டர்,பாஸ்கர் ஆகிய இருவரது வீட்டு வாசல்களிலும் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி உள்ளனர். சத்தம் கேட்டு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து எழுந்து வந்து பார்க்கும் போது வாசல் அருகே இருந்த மீன் பிடிக்கும் வலைகள் தீப்பற்றி எரிந்தது.உடனடியாக தண்ணீர் எடுத்து வந்து ஊற்றி வலையில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். எனினும் தீ பற்றி எரிந்ததில் மீன்பிடி வலைகள் சேதம் அடைந்தன.சம்பவ இடத்திற்கு தென்பாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டை வீசி சென்றது யார் ? எதற்காக வீசினர்? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.தடயவியல் நிபுணர்களும் ஆய்வு நடத்தினர். இந்நிலையில் பெட்ரோல் குண்டுகளை வீசியது அதே பகுதியைச் சேர்ந்த ஜெரிஸ், நரேஸ், ஜெய்சன் என்ற வாலிபர்கள் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. உடனடியாக 3 வாலிபர்களையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.