சென்னை:அ.தி.மு.க. பொதுச் செயலாளராக அங்கீகரிக்கப்பட்ட பிறகு எடப்பாடி பழனிசாமி கட்சியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்.அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தயாராகி வரும் நிலையில் அ.தி.மு.க.வும் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகிறது. பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க எடப்பாடி பழனிசாமி வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறார்.ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கி எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக அங்கீகரிக்கப்பட்டதை தொடர்ந்து தனது பலத்தை காட்டும் வகையில் மதுரையில் பிரமாண்டமான முறையில் எழுச்சி மாநாட்டையும் அவர் நடத்தி காட்டினார்.இந்த மாநாட்டில் அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் என லட்சக்கணக்கானோர் திரண்டனர். இது எடப்பாடி பழனிசாமியை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. மாநாடு வெற்றிகரமாக நடத்தப்பட்டிருப்பதால் அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் மகிழ்ச்சியில் ஆழ்ந்து உள்ளனர்.இந்த நிலையில் மாநாட்டை சிறப்பாக நடத்தி காட்டிய நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், பாராளுமன்ற தேர்தலை சந்திப்பதற்கு வியூகம் வகுப்பது தொடர்பாக அ.தி.மு.க. முன்னணி தலைவர்கள், மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்திடவும் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்தார். இதன்படி ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடந்தது.இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக காலை 10 மணி அளவில் வருகை தந்த பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நிர்வாகிகள் உற்சாகத்தோடு வரவேற்றனர். பின்னர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் மதுரை மாநாட்டை சிறப்பாக நடத்தி வெற்றி மாநாடாக மாற்றிக் காட்டிய அனைத்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துக் கொண்டார். பாராளுமன்ற தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் இப்போதே தயாராக வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தினார்.தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பூத் கமிட்டிகளை பலப்படுத்தி சுறுசுறுப்புடன் பணியாற்றக் கூடிய நிர்வாகிகளை அதில் நியமிக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளிடம் தெரிவித்து உள்ளார். 1000 வாக்காளர்களுக்கு 25 பேர் கொண்ட கமிட்டி என்கிற அடிப்படையில் திட்டமிட வலியுறுத்தப்பட்டுள்ளது.நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு தயாராகி வருகிறது. இது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்படி ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுடன் அமல்படுத்தப்பட்டால் தமிழக சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடத்தப்படலாம் என்கிற எதிர்பார்ப்பும் ஏற்பட்டு உள்ளது.இதுதொடர்பாகவும் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு வேளை பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடத்தப்பட்டால் அதனை எதிர்கொள்ளவும் கட்சியினர் தயாராக வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் அறிவுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வந்த எடப்பாடி பழனிசாமியை புரட்சி தமிழரே வருக என்கிற பதாகைகளை ஏந்தி கட்சியினர் வரவேற்றனர். புரட்சி தமிழரே வாழ்க, பொதுச்செயலாளரே வாழ்க என்பது போன்ற கோஷங்களையும் அ.தி.மு.க.வினர் எழுப்பினர்.அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் முன்னணி அ.தி.மு.க. நிர்வாகிகள் கே.பி.முனுசாமி, செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, செல்லூர் ராஜூ, தனபால், ஜெயக்குமார், பா.வளர்மதி, நத்தம் விஸ்வநாதன், காமராஜ் மற்றும் மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, கே.பி.கந்தன், ஆதிராஜாராம், தி.நகர் சத்யா, வெங்கடேஷ் பாபு, வி.என்.ரவி ராஜேஷ், மாதவரம் மூர்த்தி உள்ளிட்ட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.கூட்டம் முடிந்த பிறகு அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.