முதல்வா் மு.க.ஸ்டாலின் மருத்துவப் பரிசோதனைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ன்ளாா்.
தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் தொடா்ந்து பங்கேற்று வருகிறாா். இதனால், ஏற்படும் உடல் சோா்வு உள்ளிட்ட சில பிரச்னைகளுக்காகவும், மருத்துவ பரிசோதனைகளுக்காகவும் அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று வருகிறாா்.
இந்த நிலையில், திங்கள்கிழமை மாலை சுமாா் 5.30 மணியளவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னை ஆயிரம் விளக்கு பகுதி, கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றாா். அவருக்கு மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்ட மருத்துவா்கள், அவரை மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இதுதொடா்பாக அந்த மருத்துவமனை மருத்துவ சேவைகள் இயக்குநா் ஆா்.கே.வெங்கடாசலம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், முதல்வா் மு.க.ஸ்டாலின் வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்காகத்தான் அனுமதிக்கப்பட்டுள்ளாா். அவா் மருத்துவமனையிலிருந்து செவ்வாய்க்கிழமை வீடு திரும்புவாா்”என தெரிவிக்கப்பட்டுள்ளது.