பழநி முருகன் கோயிலில் ஹிந்து அல்லாதவருக்கு அனுமதி இல்லை என வைக்கப்பட்ட அறிவிப்பை அகற்றியதால் ஹிந்து அமைப்புகள் போராட்டத்தில் இறங்கினர்.
பழநி முருகன் கோயிலில் முன்பு ‘ஹிந்துக்கள் அல்லாதவருக்கு அனுமதி இல்லை’ என அறிவிப்பு வைக்கப்பட்டிருந்தது. கும்பாபிஷேகம் நடந்த சமயத்தில் அந்த அறிவிப்பு அகற்றப்பட்டது.
சில நாட்களுக்கு முன்பு பிற மதத்தினர் வின்ச் ஸ்டேஷன் வழியே மலைக்கோயில் செல்ல முயன்றனர். அவர்களை அதிகாரிகள் தடுத்தனர்.
வின்ச் அதிகாரியுடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ஹிந்து அமைப்பினர் திரண்டதால், மாற்றுமதத்தினர் திரும்பிச் சென்றனர்.
அதன் பின் வின்ச் ஸ்டேஷன் முன் ‘ஹிந்துக்கள் அல்லாதவருக்கு அனுமதி இல்லை’ என அறிவிப்பு வைக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று இரவு (ஜூன் 24) அந்த அறிவிப்பு அகற்றப்பட்டது. தகவலறிந்த ஹிந்து அமைப்பினர் வின்ச் ஸ்டேஷன் முன் திரண்டனர். அகற்றப்பட்ட அறிவிப்பை உடனடியாக மீண்டும் அதே இடத்தில் வைக்க வலியுறுத்தி போராட்டத்தில் இறங்கினர்.
கோயில் அதிகாரிகள் சமரசம் செய்ய முயன்றனர். நேற்று இரவு தாசில்தார் பழனிச்சாமி தலைமையிலான அதிகாரிகள் ஹிந்து அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது கோயில் குறித்தும் அந்த அறிவிப்பு குறித்தும் முகநுாலில் ஒருவர் அவதுாறாக பதிவிட்டுள்ளதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஹிந்து அமைப்பினர் புகார் கூறினர்.
அதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், அறிவிப்பை மீண்டும் வைக்க திங்கட்கிழமை நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.