தூத்துக்குடிதூய பனிமய மாதா பேராலய தங்கத்தேர் பவனி வரும் வீதிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு✍️முழுவிவரம்🌎விண்மீன் நியூஸ்🌍


தூத்துக்குடி, ஜூன் 17: தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தின் தங்கத்தேர்பவனி நடைபெறும் வீதிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார். தூத்துக்குடியில் உலகப் புகழ் பெற்ற தூய பனிமய மாதா பேராலயத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஆகஸ்ட் 5ம் தேதி மாதா சொரூப பவனியுடன் நிறைவு பெறும். இந்த ஆண்டு தூத்துக்குடி கத்தோலிக்க மறைமாவட்டத்தின் 100வது ஆண்டு நிறைவு பெறுவதால் பனிமய மாதா பேராலயத்திருவிழாவினை ஒட்டி தங்கத்தேர் பவனி நடைபெறுகிறது. இந்த தேர்பவனி வரும் ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி நடைபெறவுள்ளதால் இதற்கான ஆயத்தப்பணிகளான தங்கத்தேர் கட்டும் பணிகள், மாதா சொரூபத்திற்கு தங்க முலாம் பூசும் பணிகள் உள்ளிட்டவை பேராலய வளாகத்தில் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், இந்த தங்கத்தேர் பவனி வரும் வீதிகளை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில், தங்கத்தேர் வரும் பாதைகளில் மேற்கொள்ளவேண்டிய பராமரிப்பு பணிகள் குறித்தும், சாலைகள் சீரமைப்பு செய்வது குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, மண்டல தலைவர் நிர்மல்ராஜ், மாநகர மீனவரணி துணை அமைப்பாளர் ஆர்தர் மச்சாது மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.
இதேபோல், தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட தனசேகரன் நகர் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக சாலை வசதி என்பது செய்து கொடுக்கப்படவில்லை. இந்த நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் இங்குள்ள ஐந்துக்கும் மேற்பட்ட தெருக்களில் சாலை அமைக்க மாநில திட்டக்குழு மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து சாலை அமைக்கும் பணிகள் நேற்று துவங்கியது. அந்தபணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது உதவி ஆணையர் சேகர், கவுன்சிலர் ஜாக்குலின் ஜெயா, முன்னாள் கவுன்சிலரும் வட்ட செயலாளருமான இரவீந்திரன் , மாவட்ட பிரதிநிதி செல்வகுமார், மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.